ஞாயிறு, 27 ஜூன், 2010

அதிபர் ஆனந்தராஜாவின் 25வது ஆண்டு நினைவுநாள் இன்றையதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது


புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட முதலாவது புத்திஜீவி அதிபர் ஆனந்தராஜாவின் 25வது ஆண்டு நினைவுநாள் இன்றையதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

1985ம் ஆண்டில் (26.06.1985) யாழ் நகர் றக்கா லேனில் வைத்து பிரபல கல்விமானும் சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபருமான திரு ஆனந்தராஜா அவர்கள் புலிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

காலத்தின் மாற்றமே நாகரீகம். அது மரணத்தின் மூலம் ஏற்படுவதல்ல. ஆயினும் புலிகள் அவ்வாறான மாற்றத்தினை கொலைகள் மூலம் ஏற்படுத்தியிருந்தமை நமது இனத்திற்கு ஏற்பட்ட சாபக்கேடாகும்.

தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆயுதப்போராட்டம் ஆரம்பமான காலத்தின் முற்பகுதியிலேயே புலிகளால் அப்போராட்டம் அழிக்கப்பட்டுவிட்டது என்பதுவே உண்மை. அப்படியானால் புலிகள் யார்? சமூக விரோதிகளா! ஆம். புலிகள்தான் உண்மையான சமூக விரோதிகள் என்பது அவர்களின் அழிவிற்குப்பின் இன்று முத்திரை குத்தப்பட்டுள்ளது.

சர்வதேசம் புலிகளை இனங்கண்டுகொண்டது. தமிழ்பேசும் மக்கள் வாழ்வில் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட இழப்புக்கள் தரவுகளாக பதியப்பட்டுள்ளன. தற்போது எச்சசொச்சமிருக்கும் புலிப்பினாமிகள் அதனை மறுக்கமுடியாது. முதற்கோணினால் முற்றும் கோணும் என்பார்கள். ஆரம்பத்திலேயே புலிகளை இனங்கண்டு துரத்தியிருந்தால் அன்றி புலிகள் அழிக்கப்பட்டிருந்தால் இன்று நாம் இவ்வளவு துயரங்களை சந்தித்திருக்க வேண்டி இருந்திருக்காது

தமிழர்களின் மூலதனம் கல்வி. கல்வியை புகட்டியவர்களுக்கும் புகட்டுபவர்களுக்கும் தமிழர்களின் தாயக பூமியில் புலிகளினால் வழங்கப்பட்டது சமூக விரோதி எனும் முத்திரை. இவை ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதனை தட்டிக் கேட்க நம்மிடம் அப்போது திராணியில்லாது போனதுவே அதற்கான சந்தர்ப்பம்.
யாழ் நகரத்தின் மத்தியிலே அறிவும் அழகும் கொண்டதாக தலை நிமிர்ந்து நிற்கும் கல்விக் கோபுரம்தான் பரி. யோவான் கல்லூரி. நூற்றாண்டுகளுக்கு மேலாக யாழ் மண்ணின் கல்வி மேம்பாட்டை உலகத்திற்கு எடுத்தியம்பிய பெருமை பரி. யோவான் கல்லூரியையே சாரும்.

அப்பெருமைக்குரிய பாடசாலையின் அதிபரையே கொன்றவர்கள் தாமே ஏகத்தலைவர்கள் என்று இன்னும் பல பாடசாலை அதிபர்களை கொன்று குவித்தவர்கள் இன்று தாம் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டு விட்டார்கள். பாடசாலை மாணவர்களை கடத்தி கட்டாய புலிப்பயிற்சி கொடுத்து கொன்று அழித்த புலிகளுக்கு கல்வியினதும் மனித உயிரினதும் பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அறிவு தெரிந்தபின் நிழலுக்கு கூட பாடசாலைப் பக்கம் ஒதுங்கியிருக்காத பிரபாகரனின் புலிகள் 1985.06.26 ஆம் திகதி பரி. யோவான் கல்லூரியின் அதிபராக கடமை புரிந்த ஆனந்தராஜாவை எதற்காக சுட்டுச்சரித்தார்கள்?

அன்றைய காலகட்டத்தில் இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் மாணவர்கள் எவராவது கைது செய்யப்பட்டால் இராணுவமுகாம் வாசலிலும் பொலிஸ் நிலைய வாசலிலும் ஆனந்தராஜா மாஸ்டரின் தலை தெரிவதும் பொறிபறக்க அங்கு சத்தம் போட்டு மாணவர்களை விடுவிப்பதும் சர்வசாதாரணமான விடயங்கள். ஏன் ஏனைய கல்லூரி அதிபர்கள் கூட தமது கல்லூரி மாணவர்களின் விடுதலைக்காக ஆனந்தராஜா மாஸ்டரின் உதவியை நாடிச்செல்வார்கள்.

இக்காலகட்டத்தில் வரலாற்றின் முதலாவது யுத்தநிறுத்த காலத்தில் (திம்பு பேச்சுவார்த்தை) யாழ் இராணுவத்தளபதியின் வேண்டுகோளை தட்டிக்கழிக்க முடியாமல் அவர்களினால் ஒழுங்குசெய்யப்பட்ட விளையாட்டுப் போட்டியில் தனது மாணவர்களை அனுப்பிவைத்ததை ஓர் போலித்தனமான காரணமாகக் காட்டி புத்திஜீவிகளை அழித்தொழிக்கும் கைங்கரியம் ஆரம்பித்து புலிகளினாலேயே அவர் சுட்டுச் சரிக்கப்பட்டது வரலாற்றுக் கொடுமையாகும்.

நினைவுகள் மெதுவாக திரும்புகின்றன. 26.06.1985 அன்று மாலை 4.00 மணி. பட்டாசு வெடி போன்ற சத்தம். மக்கள் சத்தம் கேட்ட இடத்திற்கு ஓடினார்கள். யாழ் கச்சேரியிலிருந்து கூப்பிடு தூரத்திலே றக்கா லேனிலே புலிப் பாசிசவாதி றிச்சார்ட் அதிபர் ஆனந்தராஜாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டான்.

இத்துயரம் மின்னல் வேகத்தில் உலகமெலாம் பரவியது. துக்கம் தொண்டையை அடைத்தது. ஆனால் மக்கள் பயத்தில் மௌனமானார்கள். கொலைகாரப் புலிகளினால் தமிழ் புத்திஜீவிகள் மீதான படுகொலைக்கு அத்திவாரம் இட்ட நாள் அதுதான்.

அன்று ஆரம்பித்து வைத்த புலிப்படுகொலைக் கலாச்சாரம் ஆனந்தராஜாவில் ஆரம்பித்து ரஜனி திரணகம என்று தொடர்ந்து சென்றல் கல்லூரி அதிபர் ராசதுரை மாஸ்டர் ஈறாக மகேஸ்வரி வேலாயுதம் வரை எண்ணிலடங்காத புத்திஜீவிகளின் படுகொலைக்குச் சென்றது.

புலிகளின் குண்டுகளுக்கு கல்விமான்கள் மதகுருக்கள் அரசியல்வாதிகள் என்ற பேதம் இருந்திருக்கவில்லை. பல அதிபர்கள் அறிஞர்கள் பேராசிரியர்கள் ஏன்? மாணவர்கள் கூட புலிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்கள். அதனால்தான் வினை வினைத்தவன் வினை அறுத்ததை நாம் வெள்ளிமுள்ளி வாய்க்காலில் பார்த்தோம். காலம் பதில் சொல்லிவிட்டது.

கருத்துகள் இல்லை: