thayagam.com: எம்.ஜி.ஆர் முன்பு அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவார்.
பத்திரிகைகள்
எல்லாம் (அப்போது இந்த ஊடகங்கள் எனப்படும் டி.வி முதல் முகப்புத்தகம் வரை
கிடையாது) அதன் பின்னாலுள்ள அரசியல் சாணக்கியம் பற்றி பக்கம் பக்கமாய்
எழுதித் தள்ளும்.
அங்கே அப்படி எந்த சாணக்கியமும் இருக்காது.
சுற்றியுள்ள அண்டிப் பிழைக்கும் கூட்டம் அள்ளி வைத்துப், போட்டுக் கொடுத்திருக்கும். அதைக் கேட்டு அவர் பதவிகளைப் பறித்திருப்பார்.
பறிக்கப்பட்டவர்கள் கருணாநிதிக்கு துண்டு போர்த்தி, தாய்க்கழகத்துடன் இணைவார்கள். கலைஞரின் போர்வாள் நான் என்று சூளுரைப்பார்கள்.
சீமானின் மாமா காளிமுத்து அடிக்கடி இப்படி பல்டி அடிப்பார்.
அல்லது அடுத்த தடவை கருணைக்கண் கிடைக்கும் வரை காய்ந்து கொண்டு ஓரமாய்
கவனிப்பாரற்றுக் கிடப்பார்கள். யாருமே முதுகெலும்பு உள்ளவர்களாக,
எதிர்த்துப் போராடத் துணியாதவர்கள். காரணம், அவர்களின் அரசியலே எம்.ஜி.ஆர்
என்ற விருட்சத்தில் ஒட்டுண்ணி குருவிச்சைகளாக வாழ்வது தான்.
பிறகு அடுத்த சுற்றில், பாவம் கழுவப்பட்டு ஞானஸ்நானம் பெற்று, அண்ணனின் போர் வாள் ஆவார்கள்… எதுவுமே நடக்காதது போல!
காலில் விழும் கலாசாரத்தின் முதல் பிதாமகன் அவர். அன்று தொடங்கிய
தலைகுனிவு, இன்று அம்மாவின் காலில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பது
வரைக்கும் தொடர்கிறது.
இந்த எம்.ஜி.ஆருக்கும் ஒரு கொள்கை இருந்தது.
அண்ணாயிசம் என்று!
அது அவருக்கும் கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சமான கொள்கை.