
சியோல்:ஹைட்ரஜன் குண்டு சோதனையில், வடகொரியா ஈடுபட்டதை தொடர்ந்து, அதன் அண்டை நாடான, தென் கொரியாவில், அமெரிக்காவின் சக்திவாய்ந்த குண்டுகளை ஏந்திச்செல்லும் வல்லமை பெற்ற, பி - 52 ரக போர் விமானம், தாழ்வாக பறந்து, ஒத்திகையில் ஈடுபட்டது, அப்பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளை ஆத்திரமூட்டும் வகையில் நடந்து வரும், ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, கடந்த வாரம், அணுகுண்டை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து, சோதனை நடத்தியது; இது, உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு, அண்டை நாடுகளான, தென் கொரியா, ஜப்பான் ஆகியவை, கவலையை வெளிப்படுத்தி கருத்து தெரிவித்திருந்தன.
இந்நிலையில், நட்பு நாடான தென் கொரியாவின் வான் பகுதியில், அமெரிக்காவின் பி - 52 போர் விமானம், நேற்று தாழ்வாக பறந்து, போர் ஒத்திகையில் ஈடுபட்டது. பி - 52 விமானத்துடன், தென் கொரியாவின் எப் - 15, அமெரிக்காவின் எப் - 16 ரக போர் விமானங்களும், ஒத்திகையில் ஈடுபட்டன.
அதன் பின், வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாம் குட்டித் தீவில் உள்ள விமானப்படை தளத்துக்கு, அவை திரும்பிச் சென்றன.
இதுபற்றி, அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய ராணுவ உயரதிகாரி ஹாரி பி.ஹாரிஸ் வெளியிட்ட அறிக்கையில், 'சர்வ தேச ரீதியில், தனக்குள்ள கடமையை மீறி, வடகொரியா, ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியது. இச்சூழ்நிலையில், தென் கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு, அமெரிக்காவின் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், பி - 52 விமான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது' எனக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளின் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டது தொடர்பாக, வடகொரியா அரசு தரப்பில் உடனடியாக, கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக