திங்கள், 11 ஜனவரி, 2016

சவுக்கு : குற்றவாளி ஜெயலலிதா அல்ல

c30ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி விசாரணை, பிப்ரவரி 2 முதல் தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.     இந்த வழக்கை இது வரை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.  இந்த அமர்வுதான் வழக்கு விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தது.  ஆனால் என்ன காரணத்தினாலோ,  நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கு பதிலாக, நீதிபதி அமித்தவ ராய் இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.   இந்த மாற்றம் எதனால் நிகழ்ந்தது என்பதற்கு எவ்வித விளக்கமும் இல்லை.  ஆர்.கே. அகர்வால் இவ்வழக்கை விசாரிப்பார் என்றதும் ஒரு நம்பிக்கை இருந்தது.   ஏனென்றால், நீதிபதி ஆர்.கே.அகர்வால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்.   அவர் அவ்வாறு பணியாற்றியபோது, பல்வேறு வழக்குகளில் இப்படித்தான் தீர்ப்பு வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ.எல்.சோமயாஜி மூலமாக ஜெயலலிதா அழுத்தம் கொடுத்தார்.
    ஆனால் எவ்விதமான அழுத்தங்களுக்கும் நீதிபதி அகர்வால் செவிசாய்க்கவில்லை.    ஒரு கட்டத்தில், சோமயாஜியிடமே, “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லிக் கொடுக்காதீர்கள்” என்று வெளிப்படையாக சொல்லியே விட்டார்.     அதனால், ஜெயலலிதா அரசு எப்படிப்பட்ட கேடுகெட்ட அரசு என்பதை அவர் நன்றாக அறிவார்.  அவரிடம், சொத்துக்கு குவிப்பு வழக்கின் மேல் முறையீடு விசாரணைக்கு வந்திருந்தால், ஊசலாட்டத்துக்கு இடமில்லாமல் இருந்திருக்கும்.  ஆனால், தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார்தற்போது இந்த வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்பதை யாருமே ஊகிக்க முடியாது.     சட்டபூர்வமாகவும், தர்க்கபூர்வமாகவும், நியாயத்தின்பாற்பட்டும், ஒரு வழக்கின் விசாரணை நடைபெறுகிறதென்றால், அந்த வழக்கில் நேர்மையான தீர்ப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.   ஆனால், இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான நீதியையா வழங்குகின்றன ?     ஒருவன் குடித்து விட்டு காரை ஓட்டி சாலையில் படுத்திருக்கும் சிலரை கொலை செய்கிறான்.  அவனுக்கு பாதுகாவலாக இருந்த காவல் துறை அதிகாரி, அவன் மீது புகார் செய்கிறார்.    வண்டியை ஓட்டியவன் வண்டியை விட்டு இறங்கி ஓடி விடுகிறான்.    அதன் பிறகு வழக்கு விசாரணை நடந்து அவனுக்கு தண்டனை கிடைக்கிறது.    அடடே…  தண்டனை கிடைத்து விட்டதே என்று யோசித்து முடிவதற்குள் உயர்நீதிமன்றம் அவனை விடுதலை செய்கிறது.    சாட்சிகளும், ஆதாரங்களும் போதுமானதல்ல என்கிறது.   அருகே அமர்ந்து காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதை நேரில் பார்த்த சாட்சியின் சாட்சியத்தை காற்றில் எறிகிறது நீதிமன்றம்.   உயிரை பறிகொடுத்தவர்களின் வயிறு எரிவது நீதிமன்றத்தின் கண்களுக்கு தெரியவில்லை.
மற்றொரு மாநிலத்தில் ஒரு மூத்த அரசியல் தலைவர்.  அவர் முதல்வராக இருந்தபோது அரசு அதிகாரிகளை தேர்ந்தடுத்ததில், பெரும ஊழல் என்று குற்றச்சாட்டு.  மே 2004ல், சிபிஐ வழக்கு பதிவு செய்கிறது.  ஜுன் 2008ல் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்கிறது. ஜனவரி 2013ல், அந்த மூத்த அரசியல் தலைவர் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார்கள்.    மூத்த அரசியல்வாதி சிறையில் அடைக்கப்படுகிறார்.    டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோருகிறார்.    ஜாமீன் வழங்கப்படுகிறது.   ஜாமீன் வழங்கப்பட்டதும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுக்கிறார் 79 வயதான அந்த அரசியல் தலைவர்.  டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்கிறது.   சிபிஐ நீதிமன்றம் ஜனவரி 2013ல் தீர்ப்பு வழங்கியது என்றால், இரண்டரை வருடத்துக்குள் உயர்நீதிமன்றமும், அத்தீர்ப்பை உறுதி செய்கிறது.  மே 2015ல், தண்டனை வழங்கப்பட்டது சரியே என்று தீர்ப்பளிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.       அடுத்த ஆறு மாதத்துக்குள், உச்சநீதிமன்றமும் இந்த மேல் முறையீட்டை விசாரித்து, தண்டனையை உறுதி செய்கிறது.   79 வயதான அந்த மூத்த அரசியல்வாதி தற்போது சிறையில் இருக்கிறார்.
அந்த அரசியல்வாதியின் பெயர் ஓம் பிரகாஷ் சவுதாலா.   அவர் மீது இந்த அரசு ஊழியர் நியமனம் தொடர்பான வழக்கை தவிர்த்து, சொத்துக் குவிப்பு வழக்கு உண்டு.  வேறு ஊழல் வழக்குகள் இல்லை.  ஆனால் தற்போது 10 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்.
ஓம் பிரகாஷ் சவுதாலா
ஓம் பிரகாஷ் சவுதாலா
ஆனால், கோமலவல்லி என்கிற ஜெயராம் ஜெயலலிதா மீது ஒன்றல்ல இரண்டல்ல.   20க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் உண்டு.   1996ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளில் ஒரே ஒரு வழக்கு இறுதிக் கட்டத்தை அடைந்து, ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்புவதற்கு  18 ஆண்டுகள் ஆனது.    அந்த ஒரே வழக்கிலும், ஒரு உலகறிந்த கணித மேதையினால் ஒரு ஆண்டுக்குள் விடுதலையாகி, மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார் அந்த ஜெயலலிதா.     இதுதான் இந்திய நீதிமன்றங்கள், வழக்குகளை விசாரிக்கும் விதம்.    சவுதாலாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் இப்படி மாறுபட்ட  அணுகுமுறையை நீதிமன்றங்கள் அளிப்பதற்கு காரணம் ஜெயலலிதாவின் ஜாதியா ?  அவர் பணமா ?   அவர் திறமையா ?   அவர் செல்வாக்கா ?
எது காரணமாக இருந்தாலும், ஜெயலலிதா, இந்தியா நாட்டின் சட்டத்தையும், நீதிமன்றங்களையும் காலில் போட்டு மிதிப்பதற்கு நீதிமன்றங்கள் அனுமதிப்பதோடு இல்லாமல், ஆனந்தமாக துணை நிற்கின்றன என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை.
1996ம் ஆண்டு திமுகவுக்கு மக்கள் அளித்த வாக்கு, ஜெயலலிதாவின் ஊழலை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே.    ஜெயலலிதா ஆட்சியின் அழுகி முடைநாற்றமெடுக்கும் ஊழல்களை சகித்துக் கொள்ள முடியாமலேயே மக்கள் அதிமுகவை ஓட ஓட விரட்டினார்கள்.   1996ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, “மீண்டும் ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருந்த இடம் ஓட்டையாக இருக்கும்” என்றார்.  அவர் கூறியது மிகைப்படுத்தல் அல்ல.    அந்த அளவுக்கு கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள் ஜெயலலிதாவும், மன்னார்குடி மாபியா கூட்டமும்.   கண்ணில் பட்ட சொத்துக்களையெல்லாம் வாரிக் குவித்தார்கள்.   விற்க மறுத்தவர்களிடம் அடித்துப் பிடுங்கினார்கள்.  மிரட்டி வாங்கினார்கள்.   இதையெல்லாம் பார்த்து மனம் வெதும்பியே மக்கள் அதிமுகவுக்கு மரண அடி வழங்கினார்கள்.
ஊழல் எதிர்ப்பை முழக்கமாக வைத்து ஆட்சிக்கு வந்த திமுக, அந்த வாக்குறுதிக்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுத்தது.  அது வரை, ஐந்தும் பத்தும் வாங்கிய அரசு ஊழியர்களை பிடித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறையில், அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகளுக்கென்று தனியாக இரண்டு புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டன.    லஞ்ச ஒழிப்புத் துறை தவிர்த்து, சிபி.சிஐடி பிரிவும், தனியாக வழக்குகளை பதிவு செய்தது.     இந்த வழக்குகளின் விசாரணையை துரிதமாக நடத்த வேண்டும் என்பதற்காக தனித்தனியாக மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
லஞ்ச ஒழிப்புத் துறையும், சிபி.சிஐடி பிரிவும், முதல்வர் கருணாநிதியின் நேரடி கண்காணிப்பில் இயங்கின.     இரு பிரிவுகளுக்கும் சேர்த்து, சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் நடராஜன் நியமிக்கப்பட்டார்.      தலைமைச் செயலகத்தில் விழிப்புப் பணி கண்காணிப்பகத்தில், இரண்டு கூடுதல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு, அரசுக்கு வரும் புகார்களில் விசாரணைக்கு ஏற்றவை எவை என்று ஆராயப்பட்டது.  அந்தப் புகார்களின் மீது பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறைக்கோ, சிபி.சிஐடிக்கோ அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பெரும்பாலான அறிக்கைகளில், ஜெயலலிதாவின் பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.    ஒரு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை, அல்லது ஜெயலலிதாவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்று அறிக்கை அளிக்க அன்றைய புலனாய்வு அதிகாரிகளுக்கு எவ்வித அச்சமும் இல்லை.    நேரடியாக முதல்வர் கருணாநிதியோடு விவாதம் நடந்தபோதும் கூட, ஆதாரங்கள் இல்லை என்ற தகவலை நேரடியாகவே சொல்லும் துணிச்சல் அப்போதைய அதிகாரிகளுக்கு இருந்தது.    கருணாநிதியும் அவர்கள் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்.
அப்படி தேவையற்றதை வடிகட்டி, ஆதாரங்கள் உள்ள வழக்குகளை மட்டும் எடுத்து, அவற்றில் மட்டும் ஜெயலலிதா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த வழக்குகள் 12க்கும் மேல்.
கலர் டிவி வழக்கு :  தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் இலவச கலர் டிவி வழங்குவது என்று முடிவெடுத்து, டெண்டர் கோரப்பட்டது.    இவ்வாறு 45,302  கலர் டிவிக்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு என்று, ஜெயலலிதா, சசிகலா, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், உள்ளாட்சித் துறை அமைச்சர் செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், உள்ளாட்சித் துறை செயலாளர் எச்.எம்.பாண்டே ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.   ஜுலை 2000 ஆண்டிலேயே, ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் போதிய ஆதாரங்கள் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.   செல்வகணபதியும் அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டனர்.
கொடைக்கானல் ஹோட்டல் வழக்கு கொடைக்கானலில், ப்ளசெட் ஸ்டே என்ற ஹோட்டல் கட்டுவதற்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியது குறித்து தொடரப்பட்ட வழக்கு இது.    வழக்கு தொடரப்படுவதற்கு முன்னதாகவே, பழனி மலை பாதுகாப்பு அமைப்பு ஒன்று, இந்த ஹோட்டலுக்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.       ஐந்து மாடிகளுக்கு மேல் கட்டக் கூடாத என்று இருந்த விதியை மாற்றுவதற்காக, அந்த ஹோட்டலுக்கு ஆதரவாக தமிழக சட்டமன்றத்தில் சட்டத்திருத்தத்தையே ஜெயலலிதா கொண்டு வந்தார்.   இந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி சீனிவாசன்.   சட்டத்திருத்தத்தை ரத்து செய்து தீர்ப்பளித்ததோடு, தனது தீர்ப்பில்,  “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்: கெடுப்பா ரிலானுங் கெடும்” என்ற குறளையும் கோடிட்டுக் காட்டினார்.
கடும் கோபமடைந்தார் ஜெயலலிதா.   தீர்ப்பளித்த நீதிபதி சீனிவாசனின் வீட்டுக்கு தண்ணீரும் மின்சாரமும் நிறுத்தப்பட்டன.   சீனிவாசன் எப்படிப்பட்ட நீதிபதி என்றால், இவ்வாறு இணைப்பு நிறுத்தப்பட்ட விபரங்களை வெளியில் சொல்லவேயில்லை.    பின்னர் வழக்கறிஞர்களுக்கு இந்த விபரங்கள் தெரிந்து, அவர்கள் பிரச்சினை எழுப்பவும், மூன்று நாட்களுக்கு பிறகு, இணைப்புகள் மீண்டும் வழங்கப்பட்டன.
தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட திருக்குறளை நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றம் சென்று மூக்குடைபட்டார் என்றால், நீதிபதி சீனிவாசனின் தீர்ப்பு எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இது தொடர்பாக ஜெயலலிதா மீது லஞ்ச ஒழிப்புத்துறை 1996ல் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.   இவ்வழக்கில் 2 பிப்ரவரி 2000 அன்று, தீர்ப்பளித்த சிறப்பு நீதிபதி வி.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார்.     இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கத்தான், அதிமுக அடிமைகள், கோவை விவசாயக் கல்லூரி மாணவிகள் மூன்று பேரை உயிரோடு எரித்துக் கொன்றனர்.   இந்த வழக்கில் செய்த மேல் முறையீட்டிலும் ஜெயலலிதா விடுதலை பெற்றார்.
நிலக்கரி இறக்குமதி வழக்கு :  தமிழக மின்சார வாரியத்துக்கா தரமற்ற  நிலக்கரியை இறக்குமதி செய்த வகையில் மின்வாரியத்துக்கு 6.5 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, ஜெயலலிதா, அப்போதைய மின்துறை அமைச்சர் கண்ணப்பன், நிதி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன்,  தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன், முன்னாள் மின்வாரிய சேர்மேன் ஹரிபாஸ்கர், நிதிச் செயலாளர் என்.நாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் சின்டெக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் ஹாலி நிறுவனம், இந்தோனேசியாவின் ப்ரைமா காமெக்ஸ் நிறுவனம், சிங்கப்பூரின் கவுன்ட்டர் கார்ப் ட்ரேடிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் எனர்ஜி ட்ரேடிங் நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் இருந்து தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டார் என்பது குற்றச்சாட்டு.   இந்தக் குற்றச்சாட்டை முதன் முதலில் எழுப்பியவர் அப்போதைய காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் அப்போதைய பொதுப்பணித் துறை செயலாளர் சுந்தரம். இவ்வழக்கில் போதுமான சாட்சியங்கள் இல்லை என்று கூறி, 10 ஜுன் 1999 அன்றே, ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும், சிறப்பு நீதிபதி ராதாகிருஷ்ணன் விடுவித்து உத்தரவிட்டார்.   இந்த உத்தரவை எதிர்த்து, திமுக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.   13 ஜனவரி 2000 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தங்கராஜ், ஜெயலலிதா உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுவித்தது சரி என்று தீர்ப்பளித்தார்.  இந்த நீதிபதி தங்கராஜ்தான், ஜெயலலிதாவை டான்சி வழக்கிலிருந்தும் விடுவித்தவர்.  தங்கராஜ், நமது குமாரசாமிக்கெல்லாம் முன்னோடி.  ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்தால்  என்னென்ன சலுகையெல்லாம் அனுபவிக்கலாம் என்று மற்ற நீதிபதிகளுக்கெல்லாம் உதாரணமாகத் திகழ்ந்தவர்.    அவர்தான் ஜெயலலிதாவிடம் தன்னையே விற்றுக் கொண்ட முதல் நீதிபதி என்று கூறலாம்.    அதன் பிறகு, கழுத்தில் தங்களுக்கான விலை என்ன என்ற அறிவிப்பு பலகையோடு பல உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுற்றினார்கள், இன்றும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வரலாறு.
தங்கராஜின் தீர்ப்பை எதிர்த்து திமுக அரசு உச்சநீதிமன்றம் சென்றது.  உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவை விடுவித்தது தவறு என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நிலக்கரி இறக்குமதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் முக்கியமான சாட்சி பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த சுந்தரம் ஐஏஎஸ்.       “நிலக்கரி இறக்குமதிக்கான டெண்டரில் சர்வதேச விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.   வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், நிலக்கரிக்கான குறைந்தபட்ச தரம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது.  இதன் காரணமாக தரம் குறைந்த நிலக்கரியை கூடுதல் விலை கொடுத்து தமிழக அரசு வாங்கியது.
இந்த விபரங்களை நான் ஒரு விரிவான குறிப்பாக எழுதி முதலமைச்சருக்கு அனுப்பினேன்.    ஆனால், எனது ஆட்சேபணைகளையும் மீறி, டெண்டர் நிபந்தனைகள், ஒரு சில நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தப்பட்டன.
சுந்தரத்தின் சாட்சியம் 1999ம் ஆண்டு விசாரிக்கப்பட்டது.   சுந்தரம் 18, ஜுன் 2001 அன்று, அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.    அப்போது சுந்தரத்தின் சாட்சியம் எப்படி இருந்தது என்று சொல்ல வேண்டுமா என்ன ?  “நிலக்கரி இறக்குமதியில் எந்த விதமான நிதி இழப்பும் இல்லை.    இதற்கு முன் காவல்துறை முன் அளித்த வாக்குமூலம் மிரட்டி வாங்கப்பட்டது.   நான் தெரிவித்த ஆட்சேபணைகள் அனைத்துக்கும் மின்வாரிய தலைவர் உரிய பதிலை அளித்து விட்டார்.   அவர் பதிலில் திருப்தியடைந்த நான், எனது ஒப்புதலை அளித்தேன்.   நிலக்கரி இறக்குமதியில்  எவ்விதமான ஊழலும் நடைபெறவில்லை எவ்விதமான ஊழலும் நடைபெறவில்லை” என்று சுந்தரம் சாட்சியளித்தார்.
இதன் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி வந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டுமா என்ன ?
மீதம் உள்ள வழக்ககளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை: