மதிப்பெண்களை வைத்து மாணவர்களை வரிசைப்படுத்தும் துக்ககரமான கல்வி முறை மாற வேண்டும்
இந்திய மக்கள்தொகை 125 கோடி என்றும், அதில் 60% இளைஞர்கள் என்றும் புள்ளி
விவரங்கள் சொல்கின்றன. அதில் 50% பேர் 25 வயதுக்குக் குறைவானவர்கள். நமது
பிரதமர் மோடி உலகெங்கும் சென்று, “இந்தியா இளைஞர்கள் மிகுந்த நாடு.
சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் முந்திக்கொண்டு நாங்கள் வெகு விரைவில்
வளர்ந்த நாடாகிவிடுவோம். எங்கள் நாட்டில் தொழில் முதலீடு செய்யுங்கள்,
உற்பத்தி செய்யுங்கள்” என்றெல்லாம் சொல்லிவருகிறார்.
இந்த நிலையில், ‘திறமை இல்லாப் பட்டதாரிகள்’ என்றொரு பெரும் பிரச்சினையில்
சிக்கித் தவிக்கிறது இந்தியா. 45 சதவீதத்துக்கும் அதிகமான பட்டதாரிகள்,
அறிவுசார்ந்த எந்த ஒரு வேலைக்கும் ஏற்றவர்கள் இல்லை என்றும், வெறும் 8%
முதல் 12% பொறியியல் மாணவர்கள் மட்டுமே வளாக நேர்காணல்களின்போது வேலைக்கு
அமர்த்தத் தகுதியுடையவர்களாக இருக் கிறார்கள் என்றும் சொல்கிறது ஒரு
கருத்துக் கணிப்பு.








