வெள்ளி, 2 ஜனவரி, 2015

AirAsia இதுவரை 16 உடல்கள் கிடைத்துள்ளன !

ஜாவா கடல் பகுதியில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து இன்று மேலும் 7 உடல்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.> இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற மலேசியாவின் ‘ஏர் ஏசியா’ விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இன்று காலை நிலவரப்படி இந்த விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 7 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 16 உடல்கள் கடல்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், போர்னியோ நகர கடற்கரையோரத்தில் இருந்து சுமார் 1,575 கடல் மைல்களுக்கு உட்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாவா கடற்பகுதியில் சுமார் 5 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு உடல்கள் சிதறி கிடப்பதாக தெரிய வந்துள்ளது. விபத்தில் சிக்கிய பலர் சீட் பெல்ட்களை அணிந்தபடி பிணமாக கிடப்பதாக கூறப்படுகிறது.
இன்று மேலும் பல பிரேதங்கள் மீட்கப்படும் என மீட்புப்படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 90-க்கும் அதிகமான கப்பல்களும், விமானங்களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, கடலின் ஆழப்பகுதியில் தேடும் பணிகளுக்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட நவீன உபகரணங்களை கொண்டு விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின்
கருப்புப் பெட்டியை தேடும் பணி தொடங்கவுள்ளது. கடலின் அடிப்பகுதியில் அதிக இரைச்சலோ, இடையூறோ இல்லாவிட்டால் இன்னும் ஒரு வாரத்துக்குள் கருப்புப் பெட்டியை கைப்பற்றி விடலாம் என இந்தோனேசிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், விமானப் பயணிகள் கொண்டு சென்ற சில பைகள், ஒரு சூட்கேஸ் மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு பயன்படுத்தும் ஏணி ஆகியவை கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: