வெள்ளி, 2 ஜனவரி, 2015

குஜராத்தில் நுழைய முயன்ற பாக். தீவிரவாதிகள் கப்பல்! கடற்படை தடுத்ததால் வெடிவைத்து தகர்ப்பு!

Gujarat மாநிலத்தின் போர்பந்தர் கடல்பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை தடுத்து நிறுத்தியது. இந்திய கடற்படை நெருங்கிய நிலையில் திடீரென அக் கப்பல் வெடிவைத்து தகர்த்தக்கப்பட்டது. அதில் இருந்த 4 பேரும் தீவிரவாதிகள் என்று தெரியவந்துள்ளது. குஜராத்தின் நீண்ட கடல்பகுதி வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளை நடத்துவதாக உளவுத்துறை பலமுறை தெரிவித்திருந்தது. அத்துடன் கராச்சியில் இருந்து மீன்பிடிக் கப்பல் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கப்பல் ஒன்று குஜராத்தை நோக்கி வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்திருந்தது.  இதனால் குஜராத் கடல் பகுதியில் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதியன்று குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதிக்குள் பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் அத்துமீறி நுழைய முயன்றது. உடனடியாக இந்திய கடலோரக் காவல்படை அந்த மீன்பிடிக் கப்பலை நோக்கி சென்றது. அப்போது முன்னெச்சரிக்கையாக துப்பாக்கிச் சூட்டையும் கடலோர காவல்படையினர் மேற்கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் மிக வேகமாக தப்பிச் செல்ல முயன்றது. இந்த முயற்சி பலனளிக்காத நிலையில் திடீரென மீன்பிடிக் கப்பல் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் அந்த மீன்பிடிக் கப்பலில் தீவிரவாதிகள் இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அக்கப்பலில் மொத்தம் 4 பேர் இருந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போதுதான் வெளியாகி இருக்கிறது. இதை பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. இந்திய கடற்பரப்பில் இருந்து 365 கி.மீ நாட்டிகல் மைல் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து கடற்பரப்பும் தீவிர கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மும்பை பாணி தாக்குதலுக்கு சதி? 2008 ஆம் ஆண்டு இதேபோல் மீன்பிடி கப்பல் மூலம் மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தினர். இதில் 166 பேர் பலியாகினர். இதேபோன்ற ஒரு தாக்குதலை குஜராத்தில் நடத்துவதற்காக தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. போர்பந்தர், துவாரகைக்கு குறி? குஜராத்தின் போர்பந்தரில்தான் காந்தி பிறந்த இல்லம் உள்ளது. அதேபோல் போர்பந்தர் அருகேதான் புகழ்பெற்ற துவாரகை உள்ளது. ஆதி துவாரகை (பெட் துவாரகா) நகரம் என்ற துவாரகையில் இருந்து சிறிது தொலைவில் கடலுக்குள் இருக்கிறது. இவற்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் வந்திருக்கலாம் என்றும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: