மின்னம்பலம் -Mathi : திடீர் திருப்பம்: பெரும்பான்மையில்லாத விஜய்… ஸ்டாலினை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி- ஆட்சி அமைக்க ஆதரவு கோருகிறார்!
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநர் அர்லேகரை இன்று மே 6-ந் தேதி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்.
ஆனால் மெஜாரிட்டிக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை; ஆகையால் ஆட்சி அமைக்க ஆதரவு தரக் கூடிய 118 எம்.எல்.ஏக்களின் பட்டியலை தர வேண்டும் என விஜய்யிடம் ஆளுநர் அர்லேகர் கேட்டுள்ளார். இதனால் நாளை மே 7-ந் தேதி முதல்வராக விஜய் பதவியேற்க திட்டமிட்டிருந்தது தற்போதைய நிலையில் சாத்தியமில்லாத ஒன்றாகி இருக்கிறது.
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிகவிடம் ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதி இருந்தார். இதில் 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் மட்டும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆனால் சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகள் தங்களது கட்சியில் விவாதித்து முடிவை சொல்வோம் என அறிவித்திருந்தன.
அதேநேரத்தில் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு தவெகவின் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் தீவிரமாக முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதிய திருப்பமாக, இதுவரையில் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த திமுக- அதிமுக இணைந்து புதிய ஆட்சியை ஏன் அமைக்க முயற்சிக்கக் கூடாது? என்கிற கேள்வி பொதுவாக எழுந்துள்ளது.
திமுகவில் இருந்து பிரிந்து உருவானதுதான் அதிமுக. 1972-ல் அதிமுக உருவான 5 ஆண்டுகளிலேயே 1977-ம் ஆண்டு திமுக- அதிமுகவை ஒரே கட்சியாக இணைக்க வட இந்திய தலைவரான ஒடிஷாவின் பிஜூ பட்நாயக் முயற்சிகளை மேற்கொண்டார். இந்த முயற்சிக்கு இரு கட்சிகளின் தலைவர்களான கலைஞர் மற்றும் எம்ஜிஆரும் ஒப்புதல் தெரிவித்தும் இருந்தனர். ஆனால் இந்த முயற்சி கை கூடாமல் போனது.
திமுக- அதிமுக இரு கட்சிகளும் இணைவதற்கு, இரு கட்சிகளின் தலைவர்களே ஒப்புதல் தெரிவித்த வரலாறே இருக்கும் போது அரசியல் சூழ்நிலை கருதி இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க ஏன் முடியாது? என்பதும் எழுகின்ற கேள்வி.
வட இந்திய மாநிலங்களில் எதிரும் புதிருமாக இருக்கிற அரசியல் கட்சிகள் இணைந்து ஆட்சிகளை அமைத்த வரலாறுகளும் இருக்கின்றன. நாகாலாந்து போன்ற மாநிலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து ஆளும் கட்சியான வரலாறும் உண்டு.
இதுவரை இப்படி வடமாநிலங்களில் நிகழ்ந்து வந்த அரசியல் அதிசயம், தமிழ்நாட்டிலும் அரங்கேறுவதற்கான சாத்தியங்களை இந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் உருவாக்கி உள்ளன.
இந்த தேர்தலில் திமுக 59 இடங்களைப் பெற்றது. அதிமுக 47 இடங்களில் வென்றது. திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் 2, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2; அதிமுக கூட்டணியில் பாமக 4; அமமுக 1; பாஜக 1 இடத்தைப் பெற்றுள்ளன.
இதில் பாஜகவைத் தவிர்த்து திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்தால் 119 எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை உள்ளது.
ஸ்டாலினை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி
இதனால் அதிமுக ஆட்சி அமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு தருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக அதிமுக ஆட்சிக்கு ஆதரவு கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மே 7-ந் தேதி நேரில் சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின் போது, அதிமுக ஆட்சி அமைக்க திமுகவின் ஆதரவை ஸ்டாலினிடம் எடப்பாடி பழனிசாமி கேட்க இருக்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக