எரியும் சூரியனே திராவிடம் தோற்காது
காங்கிரசோடு திமுக கொண்டிருந்த 22 வருட உறவு இன்றோடு முடிவடைந்தது!
ஆசீர்வாதம் ஆசாரியின் வாக்குமூலம் :
அப்பொழுது 2004 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் வாரம். டெல்லியில் எனது இல்லத்தில் அமர்ந்து சன் டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். எனது கைப்பேசியில் அமைச்சர் ஆ. ராஜா அவர்கள் (@dmk_raja) அழைத்தார். அப்போது அவர் சென்னையில் தலைவருடன் அறிவாலயத்தில் இருந்தார். அதற்கு முந்தைய மாதம் அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். அவருக்கு கூடவே இருந்து பணி செய்யும் பொருட்டு எனது அரசுப் பணியில் இருந்து 6 மாதம் விடுமுறை எடுத்து இருந்த காலம் அது.
அலைபேசியில் பேசிய அமைச்சர் ராஜா, டெல்லியில் இருந்து ஒரு முக்கியமான VVIP சென்னை வர வேண்டி இருப்பதாகவும், அந்தப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும் எனக்கு உத்தரவிட்டார். யார் அந்த VVIP ? என்று நான் கேட்டேன்.
2004 ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திமுகவை தவிர காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க நாட்டில் எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை. எதிர்ப்புறம் வாஜ்பாய் அவர்களின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி. மிகப் பெரிய அளவில் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் திரு. வாஜ்பாய். அதே சமயம் நாடு முழுமைக்கும் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் தலைவர் மட்டுமே. தேர்தல் முடிவுகள் வந்தது. பாஜக கூட்டணி நாடு முழுவதும் தோல்வியடைந்தது. தமிழ்நாட்டில் 40க்கு 40 சீட்டுக்கள் (பாண்டிச்சேரி உட்பட ) திமுக- காங்கிரஸ் வென்றது. ஆனால், மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு போதுமான இடங்கள் காங்கிரஸ் கட்சி பெறவில்லை.
அடுத்து என்ன நடக்கும் என்று புரியாத சூழலில் டெல்லிக்கு கிளம்பினார் தலைவர். தாஜ் மான்சிங் ஹோட்டலில் தங்கினார். ஆட்சி அமைக்க முடியுமா என்ற சந்தேகத்தில் மனம் தளர்ந்து போய் இருந்த சோனியா காந்தியை சந்தித்தார். "நான் இருக்கிறேன். நீங்கள் பயப்படாதீர்கள். நாம் ஆட்சி அமைப்பது உறுதி " என்று ஆறுதல் கூறினார். தோழர் ஹர்கிஷன் சுர்ஜீத் மற்றும் தோழர் ஏ.பி. பரதன் ஆகியோரை நேரில் சந்தித்தார். இன்னும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அனைவரும் ஒரு கூட்டணியில் இணைவதற்கு ஒப்புக் கொண்டனர்.
அரசு அமைக்க உரிமை கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. தலைவரை பார்க்க சோனியா காந்தி வந்தார். அமைச்சர் ராஜா, T.R. பாலு, தயாநிதி மாறன் மற்றும் நானும் அங்கு இருந்தோம். யாருமே தங்களை கூட்டணிக்கு சேர்க்காத நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக தலைவரின் கைகளை எடுத்து தனது கண்களில் வைத்து ஒற்றிக் கொண்டு உணர்ச்சி பெறுக கண்ணீரோடு நன்றி கூறினார் சோனியா காந்தி. புன்முறுவலோடு அந்த நன்றியை ஏற்றுக் கொண்ட தலைவர் புதியதாக உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு பெயர் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அந்த புதிய பெயரையும் தலைவரே சொல்ல வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார். சிறிது நேர அமைதிக்கு பிறகு, என்னை அழைத்து தான் கூற இருக்கும் பெயரை அழகாக கணினியில் டைப் செய்து எடுத்து வரச்சொன்னார். என்ன பெயர் சொல்லப் போகிறார் என்று சோனியா காந்தி உள்பட அனைவரும் ஆவலோடு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். "ஐக்கிய முற்போக்கு கூட்டணி" என்று சொன்னவர், இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதா? என்று அமைச்சர் ராஜாவை பார்த்து கேட்டார்.
அமைச்சர் ராஜாவும் அங்கு இருந்த அனைவரும் மிக அழகான பெயர் இது என்று கூறியதும் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து UNITED PROGRESSIVE ALLIANCE (U.P.A.) என்று சோனியா காந்தியிடம் கூறினார் தயாநிதி மாறன். அவருக்கு முழு திருப்தி. ஆனந்த கண்ணீர் மல்க தலைவரிடம் நன்றிப் பெருக்கோடு விடைபெற்றார் சோனியா காந்தி.
யாருமே சீந்தக் கூட தயங்கிய நிலையில் தங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த தி.மு.கவை உதறித் தள்ளிவிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கூட்டணியை முறித்துள்ளது காங்கிரஸ் கட்சி. "தொடக்கம் என்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் கூடவே இருக்கும்" என்பது என் எண்ணம்.
இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு சரியானதா? என்று என்னிடம் கேட்டால், அந்தக் கேள்விக்கு பதிலாக ரஜினி அவர்களின் வார்த்தைகளை தான் கடன் வாங்குகிறேன். "காலம் பேசாது ; ஆனால், காத்திருந்து பதில் சொல்லும் ". 🙏
- பேரா. ஆசீர்வாதம் ஆச்சாரி See less
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக