minnambalam.com - Mathi : தமிழக அரசின் வருவாய் மேம்பாட்டுக் குழுவின் தலைவரும், ஒன்றிய திட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பொருளாதார நிபுணருமான டாக்டர் மாண்டேக் சிங் அலுவாலியா (Montek Singh Ahluwalia) மற்றும் குழுவின் உறுப்பினர்கள் பேராசிரியர் கே.பி. கிருஷ்ணன், அர்பிந்த் மோடி, நஜிப் ஷா, எம். சுரேஷ் பாபு ஆகியோர் முதல்வர் விஜய்யை சென்னையில் நேற்று ஆகஸ்ட் 13-ந் தேதி சந்தித்தனர்.
இந்த குழுவின் தலைவரான மாண்டேக் சிங் அலுவாலியாவால் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்கிறது மே 17 இயக்கம்.
இது தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘மாண்டெக் சிங் அலுவாலியா’ (மாண்டேக் சிங் அலுவாலியா) இவர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திட்டக் குழு துணைத் தலைவர். இன்று நாம் சந்திக்கும் பல நெருக்கடிகளுக்கு காரணமானவர்.
தமிழ்நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஆலோசகராக இவர் வருவது மிக மிக ஆபத்தானது. ஏனெனில் இவரது நடவடிக்கையாலேயே பல நெருக்கடிகளை இந்தியா சந்தித்து வருகிறது. இவரால் தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கும் நெருக்கடிகளை கோடிட்டு காட்ட விரும்புகிறது மே17 இயக்கம்.
அதற்கு அடிப்படையாக, இவரால் வழிநடத்தப்பட்ட மன்மோகன்சிங அரசால் மக்களுக்கு உருவான நெருக்கடிகளை சுருக்கமாக காண்போம்.
உதாரணமாக,
பெட்ரோல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசுக் கட்டுப்பாட்டு முறையையும், அரசு மானியத்தையும் நீக்கியவர்.
பெட்ரோலை உலக சந்தைக்கு ஏற்ப அன்றாட விலை மாற்றத்திற்கு உட்படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தவர். இதனாலேயே பெட்ரோல் விலை கடுமையாக உயர ஆரம்பித்தது. கட்டுப்பாட்டில் இருந்த விலையை தன்னிச்சையாக பெட்ரோலிய கம்பெனிகள் விலை நிர்ணயம் செய்யவழிவகுத்தவர். இதன்பின்னரே கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல் விலை தாறுமாறாக விலை ஏற ஆரம்பித்தது. அன்று ஆரம்பித்த விலை உயர்வு இன்று வரை உயர்ந்துகொண்டிருக்கிறது.
2010 ஆண்டில் ரூ47 விலையிலிருந்து, 2013-14ல் ரூ74 எனுமளவில் உயர்ந்தது. சர்வதேச விலையுயர்வு காரணமாக சொல்லப்பட்டது. அதாவது உலக சந்தைக்கு ஏற்ப விலையை ஏற்றிக்கொள்ளலாம் எனும் வழியை உருவாக்கியவர் இவர்.
இவரது காலத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்குள்ளானது. Kirit Parikh Committee எனும் கமிட்டி அமைக்கப்பட்டது. இது விலை உயர்வை சாத்தியப்படுத்த ஆலோசனை சொன்னது. இந்த கமிட்டியின் பரிந்துரையை எற்று மாண்டெக்சிங் விலையேற்றத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.
இதனால் கேஸ் சிலிண்டர் விலை உடனடியாக ரூ100 உயர்ந்தது. இந்த கமிட்டியின் பரிந்துரையே ‘ சிலிண்டர் மானியத்தை குறைப்பதும், மானிய சிலிண்டரை குறைப்பதும்’ ஆகும். இதையே பின்னர் மோடி அரசு நடைமுறைப்படுத்தியது.இந்த பரிந்துரையை கொண்டு வந்தவர் மாண்டெக்சிங்.
மிக முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடந்த மிகப்பெரும ஊழல்களுக்கு இவர் நடைமுறைப்படுத்திய நிர்வாக மாற்றங்கள் மிக முக்கிய காரணம்
உதாரணமாக,
நிலக்கரி, பெட்ரோலியம், சாலை, துறைமுகம், விமான நிலையங்கள் ஆகிய துறைகளில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் PPP (Public Private Partnership) திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் இந்திய வரலாற்றில் மிகப்பெரும் நிலக்லரி ஊழல் நடந்தது.
விமான நிலையம், துறைமுகத்தில் தனியாரை அனுமதித்த இவரது திட்டத்தின் கீழாகவே அம்பானி-அதானி குழுமங்கள் இவற்றை கையகப்படுத்தின.
நிலக்கரி சுரஙகத்தை தனியார் உற்பத்திக்கு கொடுக்க நடந்த பேரஙகள் இந்தியாவிலேயே மிகப்பெரும்.ஊழலாக மாறியது.
இதேபோல 2ஜி அலைக்கற்றையில் தனியார்மயத்தை ஊக்குவித்தது என பல முறைகேடுகளுக்கு காரணமாக அமைந்தது.
அதிக பணபலம், அதிக கட்டுமான பலம் கொண்டவர்களுக்கு ஒப்பந்தத்தை அளிப்பது எனும் விதிமுறை இவரால் கொண்டுவரப்பட்டதால் தான் இன்றளவும் பகாசூரன் கம்பெனிகளான அதானி, அம்பானி குழுமங்கள் அனைத்து ஒப்பந்தங்களை பெற்றுக் கொள்கின்றன.
இதுமட்டுமல்ல, 1991-ம் ஆண்டு காலத்தில் மன்மோகன்சிஙகின் சகாவாக இயங்கிய சமயத்தில் கார்ப்பரேட் வரி, வருமான வரி ஆகியவற்றை ரத்து செய்தது, குறைத்தது என பணக்காரர்களுக்கு சாதகமாக வரிச்சலுகையை கொண்டுவந்தவர்.
ஏழைகள் தலையில் ஜி.எஸ்.டி வரியும், பணக்காரர்களுக்கு வரிச்சலுகையும் கொண்டு வந்தார்.
இதனாலேயே கடந்த 20-30 ஆண்டுகளில் ஏழைகள்-நடுத்தர மக்களின் வருமானம் குறைந்ததும், பணக்காரர்கள் மிக அதிக பணக்காரர்களாகவும் மாறினர்.
GST வரி உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தவர் மாண்டெக் சிங்.. குறிப்பாக 5%, 12%, 18%, 24% வரிக்கட்டமைப்பை உருவாக்கியவர்.
குறிப்பாக 5% வரி எனும் குறைந்த பட்ச வரியை நீக்க வேண்டுமென்றவர். ஒரே அளவாக 14% வரியை அனைத்திற்கும் நிர்ணயம் செய்ய வேண்டுமென்றவர். அதாவது இட்லிக்கும், தோசைக்கும் கூட 14% வரி போட வேண்டும் என சொன்னவர்.
தமிழ்நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஆலோசகராக வருவது மிக மிக ஆபத்தானது. தமிழ்நாட்டின் பொருளாதார கட்டமைப்பு அரசின் முதலீடுகளால் வளம்பெற்றது. இவற்றை தனியார் பணக்கார முதலாளிகள் கைவசம் ஒப்படைக்கும் பணியை சட்ட ரீதியாக செய்து முடிக்க இவர் பயன்படுவார்.
அதாவது,
அதிகளவிலான வரி உருவாக்கம் முதலாக அரசு சொத்துகளை விற்பது
தனியார்மயத்தை ஊக்குவிப்பது
வரியையும்-மாநிலத்தின் GDP விகிதத்தை நிர்வகித்து சமன் செய்வது
அதாவது அதிகரிக்கும் GSDPக்கு ஏற்ப வரிக்கட்டுமானத்தை உருவாக்கிக் கொடுப்பது
லாபம் தராத அரசு நிறுவனஙகளை தனியார்வசமாக்குவது
அதாவது லாபநோக்கில்லாமல் மக்கள் தேவைக்கான கட்டமைப்புகளை லாப நோக்கிலான கட்டமைப்பாக மாற்றுதல்
அரசு நிலங்களை, சொத்துகளை தனியார் பயன்பாட்டிற்கு தாரை வார்ப்பது
மின்சார விநியோகம் உள்ளிட்ட மக்கள் சேவைக்கென உருவாக்கபப்ட்ட கட்டமைப்புகளை தனியார்-அரசு நிர்வாகமாக மாற்றி வருமானத்தை உயர்த்துவது என மக்கள் சேவையை இழுத்து மூடுவது
அரசு பணியிடங்களை தனியார்-ஒப்பந்த ஊழியர்களாக்குவது என நீண்ட பட்டியல் இவரது பரிந்துரையில் உண்டு.
ஏற்கனவே நடந்து இருக்கும் மின்கட்டண குளறுபடி, நில வரி கட்டண குளறுபடி, சேலம் நகரத்து தண்ணீர் விநியோக தனியார்மயம், தூய்மைப்பணியை மேலும் தனியாருக்கு கொண்டு செல்வது என பலவற்றை தவெக அரசு கொண்டுவந்துள்ளது.
திமுக-அதிமுக அரசுகளின் தனியார்மயம் என்பதை விட மிக அதிகமாகவும், அசுரத்தனமாகவும் தனியார்மயத்தை கொண்டுவர இருக்கிறார் மாண்டெக்.
குறிப்பாக டாஸ்மாக் நிறுவனத்தில் பல மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புண்டு. சாராய சாம்ராஜ்ஜியத்தை குறைத்து, வருவாயை அதிகரித்து, அரசின் கடனான 13 லட்சம் கோடியை குறைக்க வரிவருவாயை அதிகரிப்பது என பல மாற்றங்கள வர இருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் நிழல் அரசாக விஜய் அரசு செயல்படுகிறதா எனும் சந்தேகத்தை இந்த நடடிக்கைகள் எழுப்பியுள்ளது என்பதை மே17 இயக்கம் முன்வைக்கிறது.
அதாவது ஒன்றிய கட்சியின் மறைமுக ஆட்சி தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது என்பதை நாம் உணர வேண்டும். தவெக கட்சியின் அமைச்சர்களுக்கு நிர்வாக அனுபவமோ, அரசு-கொள்கை திட்டங்களை வடிவமைக்கும் திறமையோ இல்லாத நிலையில் காங்கிரஸின் இந்தத் தலையீட்டை நாம் கவனித்து அம்பலப்படுத்தியாக வேண்டும்.
ஏனெனில் காங்கிரஸ் கட்சியின மன்மோகன்சிங ஆட்சியே மிகமோசமான மோடியின் ஆட்சிக்கான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தது என்பதை மே17 இயக்கம் பல நாட்களாக சொல்லி வருகிறது. இதையே இப்போது தமிழ்நாட்டில் நாம் காண்கிறோம்.
திமுக கடந்த காலத்தில் ராகுல்காந்தியை பிரதமாராக முன்னிறுத்திய போது, இதே காரணத்திற்காக மே17 இயக்கம் எதிர்த்தது. அவை திமுகவாலும், திமுக ஆதரவு திராவிட அறிவுசீவிகளாலும் உதாசீனப்படுத்தப்பட்டது.
காங்கிரஸ் மற்றும் பாஜக ஒரேவிதமான பொருளாதார கொள்கைகளை கொண்டு வருகின்றன என்பதை பலமுறை மே17 இயக்கம் எடுத்துரைத்தது. இதை கவனத்தில் எடுக்கவில்லையெனில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை இழப்போம். காங்கிரஸின் தவெக அமைச்சர் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பிற்கு அமைதிகாத்தது என்பது பாஜகவின் சார்பு நிலை மட்டுமல்ல, சங்கித்தன அரசியலில் காங்கிரஸ் பாஜகவிற்கு சளைத்த கட்சியல்ல எனும் உண்மையை உணர வேண்டும்.
மாண்டெக்சிங் அலுவாலியா வருகை ஆபத்தை அறிவித்துள்ளது. மே17 இயக்கம் மேலதிகமாக காங்கிரஸின் நிழல் ஆட்சி முயற்சியை அம்பலப்படுத்தும்.
தமிழ்நாடு எதிர்கொள்ளும் பல ஆபத்துகளை முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதில் மே17 இயக்கம் முதன்மையாக இருக்கிறது. இவ்வகையில் மாண்டெக்சிங் அலுவாலியா வருகையின் ஆபத்தையும் சுட்டிகாட்டுகிறது. இவ்வாறு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
Photo of author
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக