வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20,000 பேருக்கு வெற்றிகரமாக இதய சிகிச்சை!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20,000 பேருக்கு வெற்றிகரமாக இதய சிகிச்சை!

  hindutamil.in :  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதயவியல் துறையில் கேத் லேப் சிகிச்சை மேற்கொண்டோர் எண்ணிக்கை 20 ஆயிரம் பேரைக் கடந்ததையடுத்து மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதயவியல் துறை கடந்த 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, இங்கு 3 கேத்லேப் மூலம் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்ட்ரக்சுரல் இன்டடர்வென் சன்ஸ் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.



இதுகுறித்து இதயவியல் துறை மருத்துவர் சதீஷ்குமார் கூறியதாவது: இதயவியல் துறையில் உள்ள கேத் லேப்களில், பிரதான கட்டிடத்தில் ஒரு கேத் லேப் கடந்த 2017 முதல் செயல்பட்டு வருகிறது. மற்ற 2 கேத் லேப்களும் 2024 முதல் செயல்படுகின்றன. இவற்றில் ஆண்டுக்கு சராசரியாக 5 ஆயிரம் பேருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரதான கேத் லேப்-ல் கடந்த 2017 முதல் தற்போது வரை ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஏஎஸ்டி குளோஷர், விஎஸ்டி குளோஷர், பேஸ்மேக்கர், ஐவிஎஸ் உள்ளிட்ட இதய சிகிச்சைகள் 20,100 பேருக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது ஒரு இமாலய சாதனை என்றே கூறலாம். எனவே, இதை முன்னிட்டு இதயவியல் துறையில் உள்ள மருத்துவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், மென்மேலும் மக்களுக்கு சிறந்த சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கேக் வெட்டி கொண் டாடினோம்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அதிகமான இதய சிகிச்சைகள் செய்ததற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு, அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் இதயவியல் துறையில் 6 இதய மருத்துவ நிபுணர்களைக் கொண்டு இந்த சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் இங்கு மருத்துவ பேராசிரியர்கள்-3, இணை பேராசிரியர்கள்-2, உதவி பேராசிரியர்கள்-12, மூத்த நிலைய அலுவலர்கள்-2 என மொத்தம் 19 பேர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அத்துடன் கூடுதலாக 33 செவிலியர்கள், 18 தொழில் நுட்பவியலாளர்கள் நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: