dinamalar.com : புதுச்சேரி: புதுச்சேரியில், 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்து, புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்த, 5ம் வகுப்பு படித்த, 9 வயது சிறுமி, 2024 மார்ச் 2ம் தேதி, வீட்டின் அருகே விளையாடிய போது மாயமானார்.
முத்தியால்பேட்டை போலீசார் தேடிய நிலையில், மார்ச் 5ம் தேதி, வீட்டில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில், கழிவுநீர் வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில், சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.
விசாரணையில், சிறுமியை, முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்த கருணா, 19, ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து, விளையாடலாம் எனக்கூறி, அதே பகுதியில் உள்ள வீட்டின் மாடி அறைக்கு அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதை வீட்டின் மற்றொரு பகுதியில் தங்கியிருந்த விவேகானந்தன், 59, பார்த்து, கருணாவை மிரட்டி வெளியே அனுப்பி விட்டு, அவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
பின் கருணா, விவேகானந்தன் சிறுமி முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்து, கை, கால்களை கயிற்றால் கட்டி, வேட்டியில் சுற்றி, வீட்டின் பின்னால் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் உடலை வீசியது தெரியவந்தது.
கருணா, விவேகானந்தனை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
சிறையில் இருந்த விவேகானந்தன், அதே ஆண்டு செப்., 16ம் தேதி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கருணா மீதான வழக்கு விசாரணை நீதிபதி சுமதி முன்னிலையில் துவங்கியது.
ஏப்., 30ம் தேதி, கருணாவை, குற்றவாளி என, நீதிபதி அறிவித்தார். தண்டனை விபரங்களை பின்னர் அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாவை, போலீசார் நேற்று காலை, 10:05 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கருணாவுக்கு மரண தண்டனை விதித்து, நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு, புதுச்சேரி அரசு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கில் மேல் முறையீடு செய்ய ஒரு வாரம் கால அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டார்.
தீர்ப்பை கேட்ட கருணா கதறி அழுதார். அவரை, போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக