செவ்வாய், 24 மார்ச், 2026

கமலுக்கு எப்படி நன்றி சொல்வதென தெரியவில்லை : ஸ்டாலின் பதிவு! I

 மின்னம்பலம் -  Kavi :  2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 
தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்புடையதாக இல்லை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு  முழு ஆதரவு கொடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
இதைத்தொடர்ந்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், கமல்ஹாசனுக்கு நன்றி கூறியுள்ளார். 


அதில்,  “ அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் தலைவருமான  கமல்ஹாசன்  இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.

இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். “இது தியாகம் அல்ல, கடமை” என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான்.

அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் DravidianModel 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்.

பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்!” என்று பதிவிட்டுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel

கருத்துகள் இல்லை: