தினமலர் : சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் மநீம போட்டியிடாது என அக்கட்சி தலைவர் கமல் அறிவித்துள்ளார்.
கூட்டணி தர்மம்
இது தொடர்பாக கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த லோக்சபா தேர்தலில், தேச நன்மைக்காக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம்.
கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம்.
அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் ராஜ்யசபாவில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது முதல்வர் , துணை முதல்வர், திமுக பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களும் அன்போடும் மரியாதையோடும் நட்புணர்வோடும் நடந்துகொண்டார்கள் என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும்.
இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை.
அடையாளம்
அவர்களது தரப்பில் அதற்கான நியாயம் இருக்கிறது என்பதை நான் முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். எப்படியாவது தமிழகத்தை கைப்பற்றிவிட வேண்டுமென மதவாத சக்திகள் சகல வழிகளிலும் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கும் சூழலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முதன்மையானது. நியாயமானதும் கூட. ஆனால், பேட்டரி டார்ச் சின்னத்துடனான மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. ஏனெனில், பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் மாட்டேன்.
தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில், 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை.
நீதிபரிபாலனம்
தேர்தல் அரசியலில் யாருமே இப்படி செய்ததில்லையே என்று கேட்பீர்களானால், ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை நான் போட்டது என்று பணிவோடு சொல்வேன். முதல்வர் அன்போடு அளிப்பதை பெருமையோடு மறுப்பதும் அன்பின் வடிவமே.தங்கள் குடும்பத்துக்காக எத்தனையோ பேர் தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு, நாட்டை விட்டு எண்ணற்ற தியாகங்களை செய்கிறார்கள். தமிழகம்தான் என் குடும்பம். நான் சீட்டுகளை விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு, திராவிட மாடல் 2.0 அரசு அமைவது இன்றைய தேவை. இது வெறும் ஆட்சி மட்டுமல்ல. காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நீதிபரிபாலனம்.
திறந்த மனது
ஆகவே 2026 தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடனும் அறிவிக்கிறோம்.
முற்றுப்புள்ளி கிடையாது
என்னையும் என் அரசியலையும் புரிந்துகொண்டு எந்த சுயநலமின்றி, ஒன்பது ஆண்டுகளாக என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக