சாவித்திரி கண்ணன் · கூட்டணிக் கட்சிகளை டீல் செய்வதில் கலைஞரை விட பல படிகள் ஸ்டாலின் அட்வான்ஸாக உள்ளார்!
ஸ்டாலின் நிதானம் ஆச்சரியப்படத்தக்கதாக உள்ளது…என்பதை நான் சொல்லித் தானாக வேண்டும்!
ஸ்டாலின் ஆட்சி நிர்வாகத்தில் எனக்கு பல முரண்கள் இருந்தாலும், கூட்டணி கட்சிகளை கையாளுவதில் அவரது தலை சிறந்த நிர்வாக ஆளுமைக்கு,
காங்கிரசை அவர் கையாளும் விதமே சான்றாகும்.
நவம்பர் 23- ல் காங்கிரஸ் தலைமை திமுகவோடு தேர்தல் தொடர்பாக பேசுவதற்கு அகில இந்திய காங்., செயலர் கிரிஷ் சோடங்கர்,
அகில இந்திய காங்கிரசின் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய 5 பேரை நியமித்தது.
டிசம்பர் -3 அன்று காங்கிரசின் வேண்டுகோளுக்கு இணங்க அண்ணா அறிவாலயத்தில், அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்களை முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
தன்னை வந்து சந்தித்த காங்கிரசிற்கு மதிப்பளிக்கும் விதமாக ஸ்டாலினும் ஒரு குழுவை டெல்லிக்கு அனுப்பி காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கச் செய்தார்.
இதையடுத்து டிசம்பர் 22 அன்று சென்னைக்கு வந்த கிரிஷ் சோடங்கர் அதிரடியாக சில கருத்துக்களை பேசினார். அது திமுக – காங்கிரஸ் உறவின் இணக்கமான உறவுக்கு சற்று இடையூறாக மாறியது;
அவர் சொன்னவை இது தான்;
# மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பேச்சுவார்த்தைக்கு ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தார். திமுக தலைவர்கள் டெல்லிக்கு வந்து எங்களது தலைவர்களை சந்தித்தனர்.
# தமிழ் நாட்டில நாங்க 58 வருஷமாக ஆட்சி அதிகாரத்தில் இல்லை. தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸும் பங்கு பெற வேண்டியது அவசியம்;
# டிசம்பர் 15க்குள் கூட்டணியை உறுதிபடுத்திவிட சொன்னோம் திமுகவிடம்! அப்போது தான் வேட்பாளர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யவும், அவர்களை தேர்தலுக்கு தயார்படுத்தவும் எங்களுக்கும் போதுமான அவகாசம் கிடைக்கும். ஆனால், அவர்களோ இன்னும் அமைதி காக்கிறார்கள்.
# கூட்டணியை உறுதி செய்வது தொடர்பாக திமுகவின் முடிவுக்காக காத்திருக்கிறோம். “The ball is completely in the court of DMK” என்றார், கிரிஷ் சோடங்கர்.
கூட்டணி உறுதியாக இருக்கிறது என திமுக நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் கூட்டணியை உறுதி செய்யுங்கள் என்றதும், அதிகார பகிர்வை அங்கீகரித்தால் தான் கூட்டணி என்ற பொருள் கொண்டதாகவும் இந்த பேச்சை திமுக தலைமை கணித்தது.
அப்போது முதலே திமுக தொண்டர்கள் காங்கிரஸ் தகுதிக்கு மேல் ஆசைப்படுகிறது. ஆட்சியிலே பங்கு தரத் தேவையில்லை. கூட்டணி குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்…என பேசவும், எழுதவும் செய்தனர்.
திமுகவுக்கு காங்கிரஸ் டிசம்பர் 15 கெடு வைத்ததை திமுக தலைமை பொருட்படுத்தவில்லை.. தொடர்ந்து அமைதி காட்டி வந்தது என்பதே அதிகாரத்தில் பங்கு என்பதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஸ்டாலின் தெளிவாக தீர்மானித்ததை உணர்த்தியது.
''ஐயோ, கெடுகாலம் முடிந்தும் பேசாமல் உள்ளீர்களே..'' என காங்கிரஸ் குழுவின் தலைவர் பொதுவெளியில் பேசி, “The ball is completely in the court of DMK” என்று சொல்லிய பிறகும் கூட தன் மெளனத்தையே விடையாக்கிய ஸ்டாலின் ராஜ தந்திரத்தைக் கண்டு காங்கிரஸ் திகைத்தது.
இதனால் தொடர்ந்து பொதுவெளியில் மாணிக்கம் தாக்குர், கே.எஸ்.அழகிரி ஆகியோர் அதிகார பகிர்வை அழுத்தமாக வெளிப்படுத்தினர்.
இது திமுக – காங்கிரஸ் உறவில் 'பயர்' ஆகி திமுக தரப்பில் ஆங்காங்கே கொந்தளிப்பாக பேச ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து திரைமறைவில் காங்கிரசில் த.வெ.கவுடன் பேசி வருவதை அறிந்த ஸ்டாலின் இறுதியாக நேரடியாக ராகுல்காந்தியை சந்தித்து கனிமொழி மூலம் ''ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை. வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?'' எனக் கேட்டு சில தொகுதிகளைக் கூடுதலாகத் தரவும், வாரியப் பதவிகள், உள்ளாட்சிகளிலும் அதிக தொகுதிகள் ஆகிய வாக்குறுதிகளை தரவும் முன்வந்தார்.
இதற்கு பிறகும் காங்கிரஸ் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நிர்வாகிகள் பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்கும் சூழல்கள் உருவாகியது.
இதுதொடர்பாக ஆலோசிக்க நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த கிரிஷ் சோடங்கர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, ''ஒரு புதிய கட்சி காங்கிரஸூடன் கூட்டணி வைக்க விரும்புகிறதென்றால், அந்த அளவுக்கு காங்கிரஸ் வலிமையாக இருப்பதைக் காட்டுகிறது. திமுகவுடன் கூட்டணி பேச்சுவாரத்தை நடத்தும் விவகாரத்தில் எங்கள் தரப்பில் தாமதம் இல்லை. பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம். இன்னும் பேச்சு வார்த்தையை தொடங்காததால், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கையை இறுதி செய்யவில்லை'' என்றார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை சத்தியமூர்த்திபவனில் கிரிஷ் சோடங்கர், தமிழக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம், ’’தமிழகத்தில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதிவீதம், 39 தொகுதிகளை அடையாளம் கண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை தலைமைக்கு அனுப்பி ஒப்புதல்பெற்று, திமுகவிடம் பட்டியல் வழங்கப்பட உள்ளது. ஆனால், திமுக தரப்பில் இன்னும் எங்களோடு பேசுவதற்கான குழுவே போடவில்லை'' என வருத்தப்பட்டார்.
அதாவது, 'காங்கிரஸ் தரப்பில் சென்ற வருடம் நவம்பர் மாதமே தேர்தல் பேச்சு வார்த்தைக்கான குழு போட்ட நிலையில், இன்னும் திமுக அப்படியொரு குழுவை அமைக்கவில்லை' எனக் கூறி உள்ளார், கிரிஷ் சோடங்கர்.
முதலில் அதிகாரப் பகிர்வை நிபந்தனையாக்கி,
தேதி நிர்ணயித்து கெடு வைத்து,
“The ball is completely in the court of DMK”
என்று அதிகாரத்துடன் பேசிய கிரிஷ் சோடங்கரின் நிலை தற்போது,
’’இதோ நாங்க ரெடியாக இருக்கிறோம். நீங்க குழுவாவது ஏற்படுத்தி எங்களை அழைக்கக் கூடாதா?’’ என கேட்கும் நிலையை ஸ்டாலின் உருவாக்கிவிட்டார்.
தற்போதும் 39 தொகுதிகள் என காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருவதால், காங்கிரசோடு பேசுவதற்கான குழுவை ஸ்டாலின் அமைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
நடைமுறை சாத்தியமான தொகுதிகளை அவர்கள் ஒத்துக் கொண்ட பிறகு, அடுத்தகட்டமாகத் தான் திமுக தரப்பில் குழுவை போட்டு, என்னென்ன தொகுதிகள் என பேசுவதற்கு இசைவார் என்று தோன்றுகிறது.
சாவித்திரி கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக