![]() |
தமிழகத்தில் நம்மை வைத்துத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது என்று நினைக்கும் காங்கிரஸ் கட்சி, நமது வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தரவில்லையே என்று வருத்தப்படுகிறதாம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
எனவே, அதற்கு முன்னதாக சட்டசபை தேர்தல் நடத்தியாக வேண்டும். தமிழகத்தைப் போல் புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைவதால்,
5 மாநிலங்களுக்கும் சேர்த்து ஒன்றாக சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், வரும் ஏப்ரல் மாதம் பல்வேறு கட்டங்களாக 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 2-வது கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிகிறது.
அதிருப்தியில் தி.மு.க.
இந்த நிலையில், சட்டசபை தேர்தல் தேதியை இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் (மார்ச்) தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும் என்பதால், அதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதுபோன்று தொடர் பணிகள் இருப்பதால், ஆளுங்கட்சியான தி.மு.க., தேர்தல் பணிகளை எப்போதோ தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் என்று அடுக்கடுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதால், அதிருப்தி அடைந்த தி.மு.க. இன்னும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு குழுவையே அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
அதிர்ந்துபோன காங்கிரஸ்
இதனால், டெல்லியில் இருந்து வர திட்டமிட்டு இருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலின் வருகையும் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. திடீரென, ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என காங்கிரஸ் கட்சி கேட்பதற்கு, கட்சியின் வளர்ச்சி ஒன்றே காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்கு சதவீதத்தை விட (10.69) மற்றொரு தேசிய கட்சியான பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் (11.24) அதிகரித்தை பார்த்து, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அதிர்ந்துபோய்விட்டதாம்.
தி.மு.க. மறுப்பு
தமிழகத்தில் நம்மை வைத்துத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது என்று நினைக்கும் காங்கிரஸ் கட்சி, நமது வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தரவில்லையே என்று வருத்தப்படுகிறதாம். அதனால்தான் இந்த முறை ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முதலிலேயே ஓங்கி ஒலித்து வருகிறதாம். ஆனால், 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற கொள்கையுடன் பயணித்து வரும் தி.மு.க., காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று முதலிலேயே மறுத்துவிட்டதாம். இதனால், தொகுதிகளின் எண்ணிக்கையையாவது அதிகம் பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கங்கணம் கட்டி நிற்கிறதாம். குறைந்தது 35 தொகுதிகளையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம்.
இரட்டை தலைவலி
ஆனால், தி.மு.க.வோ, மத்தியில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருப்பதற்கு நாம் தான் காரணம் என கூறுகிறதாம். இதனால், தொகுதிகளின் எண்ணிக்கையையும் உயர்த்தி தர முடியாது என்று கறார் காட்டுகிறதாம்.
காங்கிரஸ் கட்சியால் தி.மு.க. தலைமைக்கு தலைவலி இப்படி என்றால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள், இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும் என்று ஒருமித்த குரலில் கோஷம் எழுப்புவதால், அது மற்றொரு பக்க தலைவலியாக இருக்கிறதாம். இப்படி, இரட்டை தலைவலியில் சிக்கித் தவிக்கும் தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க.வையும் (டாக்டர் ராமதாஸ் அணி) கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மூத்த அமைச்சர்கள் கருத்து
இதுபோன்ற சூழ்நிலையில், ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்துவிட தி.மு.க. திட்டம் வகுத்து வருகிறதாம். சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டம் முடிவடைந்ததும், மூத்த அமைச்சர்கள் சிலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தனியாக சந்தித்து பேசினார்களாம்.
அப்போது, "காங்கிரஸ் கட்சி நம் கூட்டணியில் இருப்பதால்தான், மத்தியில் ஆளும் பா.ஜ.க., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலம் நமக்கு குடைச்சல் கொடுக்கிறது. காங்கிரஸ் கட்சியை கைவிட்டுவிட்டால், நம் மீதான அழுத்தம் குறையும்" என்று கூறினார்களாம். அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், "நாமாக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியே அனுப்ப வேண்டாம். அவர்களாகவே சென்றால் விட்டுவிடலாம்" என்று கூறினாராம்.
ஒரே கல்லில் 2 மாங்காய்
தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால், அவர்களுக்கு கடந்த முறை கொடுத்த 25 தொகுதிகள் மிச்சப்படும். அதை கூட்டணியில் புதிதாக சேரும் கட்சிகளுக்கும், கூடுதல் தொகுதிகள் கேட்டு அடம்பிடிக்கும் கட்சிகளுக்கும் பிரித்துக்கொடுத்தால், எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்று தி.மு.க. தலைமை நினைக்கிறதாம். இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்துவிட முடியும் என்றும் தி.மு.க. தலைமை நம்புகிறதாம். இனி, அடுத்த கட்ட தேர்தல் நேர அரசியல் நகர்வு எப்படி இருக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக