சனி, 16 செப்டம்பர், 2023

NIA Raid சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை - ஹார்டு டிஸ்க், மொபைல் சாதனங்கள்...

 மாலை மலர் : கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி கார் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவாளராக இருந்த இவர் காரில் வெடிபொருட்களை நிரப்பி வெடிக்கச் செய்து கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் அந்த திட்டம் நிறைவேறாமல் தான் தீட்டிய சதியில் தானே சிக்கி பலியானது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான முபினுடன் நெருங்கி பழகியவர்கள், கார் வாங்கி கொடுத்தவர்கள், வெடிபொருட்கள் வாங்கி கொடுத்தவர்கள், சதி திட்டம் தீட்டியவர்கள் என இதுவரை 13 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


13-வது நபராக கோவை உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாரூதின் (36) என்பவர் கைதானார்.
 கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஒரு ஆண்டு நெருங்க உள்ள நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனையும், விசாரணையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை அவர்கள் தமிழகம் முழுவதும் பலமுறை 100-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தநிலையில் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இன்று தமிழகத்தில் ஒரே நேரத்தில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். குண்டுவெ டிப்பில் பலியான ஜமேஷா முபின், கோவையில் உள்ள ஒரு அரபிக்கல்லூரியில் பயின்றுள்ளார். அந்த சமயம் அவருடன் சேர்ந்து படித்த நபர்கள் யார், ஜமேஷா முபினை போல் அவர்களில் யாருக்காவது தீவிரவாத எண்ணம் இருந்ததா? என என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

அதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடந்தது. ஜமேஷா முபினுடன் படித்ததாக கூறப்படும் நபர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் இன்று சோதனை நடத்தப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் அதிரடியாக இறங்கினர். கோவை, சென்னை, கேரள மாநிலம் கொச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்திருந்தனர்.

ஒவ்வொரு வீடுகளிலும் 4 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக 2 உள்ளூர் போலீசார் சென்று இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் அதிகாரிகள் அறை, அறையாகச் சென்று சல்லடை போட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை, வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

கோவையில் உக்கடம், குனியமுத்தூர், கரும்புக்கடை, ஜி.எம். நகர், ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு ஆகிய இடங்களில் சோதனை நடந்தது. கோவை மாநகராட்சி 82-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும், வரிவிதிப்புக்குழு தலைவருமான முபஷீரா என்பவர் வீடு கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதியில் உள்ளது. முபஷீராவின் வீட்டிலும் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். முபஷீராவின் கணவர் ஆரிப், அரபிக்கல்லூரியில் படித்துள்ளார். அதன்பேரிலேயே கவுன்சிலர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.

86-வது வார்டு தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருப்பவர் தமிமுன்அன்சாரி. உக்கடம் பிலால் எஸ்டேட்டில் உள்ள இந்த வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. ஜமேஷா முபின் படித்த அரபிக்கல்லூரியிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல கோவை மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நீடித்தது.

சில இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு நின்றனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

சோதனையின்போது சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. அந்த ஆவணங்கள் மூலம் அடுத்தக்கட்ட விசாரணை யில் இறங்க உள்ளனர். கோவையில் ஜமேஷாமுபின் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இரசாலிபுரத்தைச் சேர்ந்தவர் முகமது இத்ரீஸ் (வயது 25). இவர் என்ஜி னீயரிங் படித்துள்ளார். இவரது வீட்டுக்கு இன்று காலை 2 கார்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 6 பேர் வந்தனர். அவர்கள் முகமது இத்ரீஸ் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். முகமது இத்ரீசுரின் செல்போனுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களிடம் இருந்து அடிக்கடி தகவல்கள் சென்றதாக கூறப்படுகிறது. அந்த புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சென்னையில் 3 இடங்களில் சோதனை நடந்தது. திரு.வி.க. நகரில் உள்ள முஜிபீர் ரகுமான், நீலாங்கரையில் புகாரி என்பவர் வீடு மற்றும் அயனாவரம் முகமது உக்கரியா ஆகியோர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை முடிவடைந்த நிலையில், அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், சோதனையின் போது பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள், தரவுகள், பிராந்திய மற்றும் அரபு மொழி புத்தகங்கள், ரூ. 60 லட்சம் ரொக்கம், 18 ஆயிரத்து 200 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளில் இருந்து தரவுகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

கருத்துகள் இல்லை: