செவ்வாய், 12 செப்டம்பர், 2023

ஜி 20 உச்சி மாநாடு நடத்த 300 மடங்கு அதிக செலவா? வெடித்த சர்ச்சை!

tamil.oneindia.com - Mani Singh S  : டெல்லி: ஜி 20 உச்சி மாநாடு நடத்த 300 மடங்கு அதிக செலவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 மாநாட்டில் அங்கம் வகிக்கின்றன. ஜி 20 உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு ஜி 20 உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தோனேசியா ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை வகித்தது. நடப்பு ஆண்டில் இந்தியா ஜி 20 மாநாட்டை ஏற்று நடத்தியது. கடந்த இரு தினங்களாக ஜி 20 மாநாடு நடைபெற்றது. ஜி 20 மாநாட்டை சிறப்பாக நடத்த பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டது.பாதுகாப்பு செலவீனங்களை தவிர்த்து டெல்லியை அழகுபடுத்துதல் ஜி 20 மாநாட்டு அரங்கம் என பலவேறு ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக இந்தியா செய்தது. ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதற்காக டெல்லி முழுவதும் களைகட்டியிருந்தது. நேற்று 2-ம் நாள் மாநாட்டு நிகழ்வுகள் நடந்தன.

இதில் முக்கியமாக 'ஒரே எதிர்காலம்' என்ற தலைப்பில் 3-வது அமர்வு நடந்தது. இதில் ஜோ பைடன் உள்பட உலக தலைவர்கள் பேசினர். பிரதமர் மோடி இறுதி உரை நிகழ்த்தினார். தொடர்ந்து , மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், மாநாட்டையும் முறைப்படி பிரதமர் மோடி முடித்து வைத்தார். இதனிடையே ஜி 20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட 300 மடங்கு அதிக செலவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி பலரும் பதிவிட்டு வந்தனர். அதாவது ஜி 20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பட்ஜெட்டில் ரூ.900 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ. 4,100 கோடி செலவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, சர்வதேச வர்த்தக மையம் கட்டிடத்தின் நிரந்தரமான கட்டமைப்புகள் மற்றும் சில கட்டுமானங்கள் பணிக்காகவும் இந்த தொகை செலவு செய்யப்பட்டதாகவும் ஜி 20 உச்சி மாநாடு நடத்துவதற்காக மட்டும் இவ்வளவு செலவு செய்யவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

English summary
The central government has given an explanation regarding the allegation that 300 times more was spent to hold the G20 summit.
--

கருத்துகள் இல்லை: