சனி, 16 செப்டம்பர், 2023

தமிழ்நாட்டில் 'அரபி வகுப்பு' என்ற பெயரில் ஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு ஆள் சேர்ப்பா? என்.ஐ.ஏ. கூறுவது என்ன? BBC tamil

 bbc.com -     எழுதியவர், ச.பிரசாந்த் : கோவையில் கடந்த ஆண்டு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதிலும் 25 இடங்களுக்கு மேல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை செய்து வருகின்றனர்.
கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவிலின் முன்பாக கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், காரை ஓட்டி வந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுவரை தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அதிகாரிகள், ஜமேசா முபினுடன் தொடர்பில் இருந்த, 11 பேரை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.


இரண்டு வாரங்களுக்கு முன்பு, வழக்கின் 12வது நபராக உக்கடம் ஜி.எம் நகரைச் சேர்ந்த முகமது இத்ரிஸ் மற்றும் 13வது நபராக உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த அசார் என்கிற முகமது அசாருதீன் (36) ஆகியோரைக் கைது செய்து, என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

குற்றவாளிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 16) காலை, 6:30 மணி முதல் கோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையைத் துவங்கினர். தலா, 5 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, உக்கடம், கவுண்டம்பாளையம், ஆர்எஸ்புரம், கிணத்துக்கடவு உள்பட 22 இடங்களில் சோதனை செய்தனர்.

கவுன்சிலர் முபசீராவின் கணவர் ஆரிஃப்
கோவையில் 22 இடங்கள் மட்டுமின்றி, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஒரு இடம், சென்னை திரு.வி.க நகர், நீலாங்கரை உள்பட 3 இடங்கள் உள்பட தமிழகத்தில், 30 இடங்களிலும், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 5 இடங்களிலும் சோதனை செய்து வருகின்றனர்.

தி.மு.க கவுன்சிலர் வீட்டிலும் சோதனை
இந்த வழக்கு தொடர்பாக, கோவை கோட்டை ராமசாமி நகரில் உள்ள, கோவை மாநகராட்சி தி.மு.க பெண் கவுன்சிலர் முபசீராவின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

குண்டுவெடிப்பு வழக்கில் கோவை தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருந்த சனோபர் அலி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

சனோபர் அலியின் கடைக்கு அருகேயுள்ள காய்கறிக் கடையில், கோவை மாநகராட்சி 82வது வார்டு தி.மு.க கவுன்சிலர் முபசீராவின் கணவர் ஆரிஃப் வேலை செய்து வந்ததால், அவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

விசாரணைக்குப் பிறகு செய்தியார்களிடம் பேசிய ஆரிஃப், ‘‘நான் பணிபுரியும் கடைக்கு அருகில் கடை வைத்திருந்தவர்தான் சனோபர் அலி. அவர் தற்போது கைதாகியிருப்பதால் அவருக்கும் எனக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் அதிகாரிகள் என்னிடம் விசாரித்தார்கள்.

கொரோனா இரண்டாவது அலை தொடங்கிய போதிருந்து சனோபர் அலியை எனக்குத் தெரியும் என அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்னிடம் விசாரித்துவிட்டு, என் வீட்டில் சோதனை செய்த பிறகு எதுவும் இல்லை எனக் கூறி கிளம்பிவிட்டனர்,’’ என்று ஆரிஃப் தெரிவித்துள்ளார்.

கல்லூரியில் தொடர்பா?
கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் படித்த சில முன்னாள் மாணவர்களுக்கும், குண்டு வெடிப்பு வழக்கில் இறந்த ஜமேசா முபின் மற்றும் கைதான முகமது அசாருதீனுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில், இரண்டு வாரங்களுக்கு முன்பு என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை கைதானவர்கள், கோவை அரபிக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வலைப்பின்னலை அதிகரித்துள்ளார்களா என்ற கோணத்தில் தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக, கிணத்துக்கடவில் மஸ்தான் என்பவரிடம் கோவை அரபிக் கல்லூரியில் படித்தது தொடர்பாக விசாரணை செய்தனர். கோவையில் அரபிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றிவர்கள் என நான்கு பேரிடம் விசாரணை நடத்தினர்.

இதுவரை தமிழகம் மற்றும் தெலங்கானாவில் நடந்த விசாரணையில் என்னென்ன ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டனது, யாரெல்லாம் கைது செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பாக, என்ஐஏ இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.

‘அரபி மொழி வகுப்பு என்ற பெயரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு’

சோதனைகளின் காரணம், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவை குறித்தும் தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பது மற்றும் அதுதொடர்பான பிரச்சாரம் செய்வோரை கண்டறிய, செப்டம்பர் 16ம் தேதி, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் 31 இடங்களை ஆய்வு செய்ததில், பயங்கரவாத தகவல்கள் இருக்குமென்ற சந்தேகத்துக்குறிய செல்போன்கள், லேப்டாப்கள், Hard Disk–கள், உள்ளூர் மொழிகள் மற்றும் அரபு எழுத்துகளை கொண்ட டைரிகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை ஆய்வு செய்து அவற்றிலுள்ள தகவல்களை கண்டறியும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் மொத்தம் 60 லட்சம் ரூபாய், 18,200 அமெரிக்க டாலர் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சில முகவர்கள், அரபி வகுப்பு என்ற போர்வையில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, அவர்களை குழுவாக உருவாக்கி பயங்கரவாத பயிற்சி கொடுத்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் அரபு வகுப்பு என்ற போர்வையில் பயங்கரவாதத்தை வளர்த்து வருவதுடன், வாட்ஸ்ஆப், டெலிகிராம், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் தகவல்களை பரப்பி, பயங்கரவாதத்தை வளர்த்து வருவது தெரியவந்துள்ளது. இவர்களுடன் சேருவோர் பின்னாளில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளாக மாறுகின்றனர்,’’ என, அறிக்கையில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: