வியாழன், 14 செப்டம்பர், 2023

எதிர்வரும் 5 மாநில தேர்தல்களில் பொதுவேட்பாளர்! இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்

minnambalam.com: இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?
மின்னம்பலம் -Selvam  : இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் என்சிபி தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதால் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நிறைவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் உறுப்பினர் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை ஒருங்கிணைப்பு குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

அக்டோபர் முதல் வாரம் போபாலில் இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தியா கூட்டணி பற்றி தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளுக்கு இந்தியா கூட்டணி பேச்சாளர்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது என்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டோம். போபால், பாட்னா, நாக்பூர், டெல்லி, கவுகாத்தி, சென்னை உள்ளிட்ட ஆறு இடங்களில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் வசதிக்கேற்ப கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சிஏஜி அறிக்கை உள்ளிட்டவைகள் குறித்து கூட்டங்களில் முதன்மையாக பேசப்படும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

கருத்துகள் இல்லை: