சனி, 16 செப்டம்பர், 2023

ரோகிணியும் ஆண்ட்ரியாவும் நீதிக்காக போராடும் போது அவர்கள் தனியாக நிற்கவில்லை!

May be an image of 3 people and text that says 'WINESS'

சுமதி விஜயகுமார் :  Witness திரைப்படத்தின் போஸ்டர் வெளியான போது அந்த திரைப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.
பிறகு மறந்து போனது. சில வாரங்களுக்கு முன்னர் நினைவிற்கு வர, படத்தை பார்த்தேன்.
செழியனையும் பார்க்க அழைத்தேன். முழு படத்தையும் பார்க்க மாட்டான் என்று தெரியும்.
ஆனாலும் பார்க்கிற வரை பார்க்கட்டும் என்று இருவரும் பார்க்க துவங்கினோம்.
முதல் காட்சி முடிந்து, ரோகினி கைகளில் இரண்டு விளக்கமாறுகளை வைத்துக் கொண்டு மற்ற பெண்களுடன் சேர்ந்து ரோடை கூட்டிக் கொண்டிருப்பார்.
அதை பார்த்ததும் செழியன் என்னிடம் கேட்டது 'Is this even a job in India?' . அப்படி கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
 'இது பரவாயில்லை. அந்த பெண்ணின் மகன் என்ன வேலை பார்ப்பான் என்று பார்' என்றேன்.


கடைசி வரைக்கும் செழியனுக்கு அது என்ன வேலை என்றே புரியவில்லை.
மலக்குழி, manual scavenging பற்றி என்னால் அவனுக்கு புரியவைக்கவே முடியவில்லை அல்லது தெரியவில்லை.
மலக்குழியில் இறந்த மகனுக்காக ரோகினி போராடுவார். அவருக்கு உதவும் வழக்கறிஞர்  சொல்லுவார் இந்த வழக்கில் வெல்வது கடினம் என்று. அதற்கு ரோகினி சொல்லுவார் 'தோத்தாலும் பரவாயில்லை.

அவங்க கோர்ட்க்கு வந்து பதில் சொல்லணும் சார்' என்று. பல அழுத்தங்களுக்கு பிறகும் ரோகினி போராடிக்கொண்டே இருப்பார். இறுதியில் நியாயம் கிடைக்காமல், சேமித்து வைத்த பணத்தையும் பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் இழப்பார்.
 
ஒரு வாரம் கழித்து 'அனல் மேலே பனித்துளி' பார்த்தேன். மூன்று நபர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாகி போன ஆண்ட்ரியா அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதுதான் கதை.
 மற்ற commercial படங்களில் இருந்து இந்த படம் தனித்து நிற்க காரணம், ஹீரோயிசம் எதுவும் இல்லாமல், எதார்த்தமாக இருக்கும். கொஞ்சம் தைரியமான பெண் வழக்கு தொடுத்து, பின்பு பயந்து, குழப்பத்திற்கு ஆளாகி பின்பு நீதி கேப்பது. மிக எதார்தமாய் இருந்தது.

ரோகிணியும் சரி ஆண்ட்ரியாவும் சரி நீதிக்காக போராடும் போது அவர்கள் தனியாக நிற்கவில்லை. ரோஹிணிக்கு கம்யூனிஸ்ட் தோழரும் வழக்கறிஞரும் இருக்க, ஆண்ட்ரியாவிற்கு அவரது காதலரும் சில அதிகாரிகளும் துணை நிற்பார்கள்.
எவ்வளவு வலிமையான பெண்ணாக (அல்லது ஆணாக) இருந்தாலும் சரி,  எவ்வளவு சாட்சியங்கள் இருந்தாலும் சரி, துணை நிற்க, அவர்களின் நியாயத்தை கேட்க ஆளில்லை என்றாலும் தோல்வியை தான் சந்திப்பார்கள். உடன் நிற்கும் மனிதர்களும், முகம் தெரியாத குரல்களும் நீதி வெல்ல மிக மிக அவசியம்.

விஜலக்ஷ்மிக்கும் சீமானிற்கும் இருந்த தொடர்பில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. விஜயலஷ்மி பொது மக்களிடம் நியாயம் கேட்ட போது அநேகம் பேர் அவர் பக்கம் தான் நின்றார்கள். பிறகு வழக்கு தொடுத்த போதும் அவருடன் பலரும் துணை நின்றார்கள். இப்போது அவர் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டதும் அவருக்காக குரல் கொடுத்தவர்ள் வருந்துவதையும், மற்றவர்கள் அவர்களை கிண்டல் செய்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

சீமானுக்கும் விஜயலக்ஷ்மிக்கும் இருப்பது அவர்கள் தனிப்பட்ட பிரச்சனை. அதை பொது வெளிக்கு கொண்டு வந்தவர் விஜயலக்ஷ்மி. இப்போது அவர் என்ன காரணத்திற்காக வேண்டுமானாலும் வழக்கை திரும்ப பெற்றிருக்கலாம். இதில் அவருக்காக குரல் கொடுத்தவர்கள் வருத்தப்படவோ இல்லை அவர்களை கிண்டல் அடிப்பதிலோ என்ன அறம் இருக்கிறது. வெல்கிறோமா தோற்கிறோமா என்பதல்ல பிரச்சனை.நியாயத்தின் பக்கம் நின்பது தான் அறம். அதுதான் அடிப்படை.
நாளைக்கு வேறு ஒருவர்  ரோஹினியாகவோ ஆண்ட்ரியாவாகவோ மாறி போய் நிற்கும் போது அவர்களுக்கு  ஒரு கம்யூனிஸ்ட் தோழரோ , வழக்கறிஞரோ துணை நிற்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பேன். குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் அவர்களை போன்றவர்களை தள்ளி நிற்க வைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
சீமான் விஜயலட்சுமியின் வழக்கு கேலிக்குரியது இல்லை.

கருத்துகள் இல்லை: