:; சென்னை: வடமாநிலங்கள் ஏதாவது துறையில் முதல் இடத்திலிருந்தால் பலரும் வாய் பிளந்து பேசுவார்கள்.
ஆனால், அதற்கு நிகராக தமிழ்நாடு பல துறைகளில் முதல் இடத்தில் வெற்றி நடைபோட்டு வருகிறது.
ஆனால், அவை எந்தெந்த துறை என்பது தமிழர்களுக்கேத் தெரியாது.
உண்மையில் எந்தெந்த துறையில் வீரநடை போட்டு வருகிறது என ஒன்றிய அரசின் 'NIRYAT' (National Import-Export Record for Yearly Analysis of Trade) அறிக்கை பட்டியல் போட்டுக்காட்டி உள்ளது.
அதைத் தொகுத்துத் தருகிறது இந்தக் கட்டுரை. இந்திய அளவில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடுதான் நம்பர் 1. ஆகவேதான் தமிழ்நாட்டைத் தோல் ஏற்றுமதியின் தலைநகரம் என்கின்றனர்.
தமிழகம் தோல் பொருட்கள் ஏற்றுமதியில், நாட்டில் மொத்த தோல் பொருட்கள் மதிப்பில் 43.20% பங்களிப்பு செய்கிறது.
அடுத்து ஜவுளி ஏற்றுமதி. அதிலும் தமிழ்நாடுதான் பெருமைப்படும் அளவுக்கு முன்னோடி மாநிலம்.
தமிழ்நாடு ஜவுளி ஏற்றுமதியில் இந்திய அளவில் அதிகார மையமாகத் திகழ்ந்துவருகிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பில் குறிப்பிடத்தக்க அளவு, அதாவது 22.58% பங்களிப்பு செய்துவருகிறது.
மூன்றாவதாக வரும் இந்தத் தகவலைப் பலரும் சமீபத்தில் செய்தித்தாள்களில் படித்திருக்கலாம். சமீபத்தில் பல்வேறு ஊடகங்களில் இந்தச் செய்தி ஹைலைட் ஆக பேசப்பட்டது.
அது என்ன என்கிறீர்களா? மின்னணு பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடுதான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு 22.83% பங்களிப்பு செய்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
இதைப்போலவே UDISE+ (Unified District Information System for Education Plus) பள்ளிக்கூடங்களில் நூலக வசதிகள் எந்த மாநிலங்களில் இந்திய அளவில் சிறப்பாக உள்ளது என்று 2021-22க்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு 100% மதிப்பெண்ணை எடுத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் பள்ளி நூலகங்களின் வசதி தமிழ்நாட்டில்தான் மிகச் சிறப்பாக உள்ளது என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. தேசிய சராசரி அளவில் தமிழ்நாடு 87.3% மதிப்பெண்ணை எடுத்துள்ளது.
கல்வி அறிவில் எப்போதும் நம்மிடம் போட்டிப்போடும் கேரளா, 98.4% தான் எடுத்துள்ளது. குஜராத் பெற்றுள்ளது வெறும் 96%தான். நாட்டிலேயே முதல் மாநிலமாக நூலக வசதிகளில் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது.
அதைத்தாண்டி அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூலகம் என்று நூலகங்களின் தாய்வீடாகத் தமிழ்நாடு திகழ்ந்துவருவது தனிக்கதை.
நூலகங்கள் மூலம் மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை செலுத்திவரும் தமிழ்நாடு, மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திலும் முதல் இடத்தில் உள்ளது. மேற்கூறிய அதே அறிக்கையின்படி பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளைச் சரியாகச் செய்து நம்பர் 1 ஆக முன்னேறி இருக்கிறது.
நமது வருங்கால தலைமுறையின் நல்வாழ்வை உறுதி செய்வதில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம். அதை நாம் சொல்லவில்லை. UDISE+ அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
நாம் அடுத்துப் பார்க்கப் போவது HMIS (2001-22) Analytical Report பற்றி. அது என்ன சொல்லி இருக்கிறது தெரியுமா?
சுகப்பிரசவத்தில் தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்கிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் மதிப்பீடு தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டி உள்ளது.
இதன் மூலம் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் நல்வாழ்க்கையைத் தமிழ்நாடு வேறு எந்த மாநிலங்களைவிட மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என நிரூபணமாகி உள்ளது.
மேலும் தாய்வழி சுகாதாரக் குறியீட்டிலும் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தைப் பெற்றுள்ளது. தாய்வழி சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது நம் மாநிலம்.
இதனிடையே, NitiAayog அறிக்கையின்படி பீகார், மேகாலயா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தாய்வழி பராமரிப்பு என்பது மோசமாக உள்ளது தெரியவந்துள்ளது.
பிரசவத்தின் போதே குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய் இறப்பு விகிதம், மேலும் 5 வயதுக்குக் கீழாக உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவை குறித்த இந்திய அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழ்நாடும் கேரளாவும் முன்னணியில் உள்ளன. தமிழ்நாடு 99% ஆகவும் கேரளா 100% ஆகவும் உள்ளது.
பட்டியல் ஏதோ இவ்வளவுதான் என எளிமையாக எடை போட்டு விடாதீர்கள். இன்னும் இருக்கிறது. NITI Aayog அறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா?
நிதி ஆயோக்கின் 2022 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீட்டின்படி தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதாவது தமிழ்நாட்டில்தான் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவு உலகளாவிய அளவில் வலுவான வர்த்தக செய்யச் சிறப்பான சுற்றுச்சூழல் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. எனவே அதிலும் நாம்தான் நம்பர் 1.
இதைப் போலவே National Multidimensional Poverty Index- A Progress Review 2023 அறிக்கை தமிழ்நாட்டின் சிறப்பை வெளிச்சம்போட்டுள்ளது.
NITI ஆயோக் அறிக்கையின்படி, பல நிலைகளில் வறுமைக் குறியீடு (MPI) எவ்வாறு உள்ளது என விளக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் போன்றவற்றைச் சம அளவீடு செய்துள்ளது.
அதன்படி இந்தியாவின் முன்னணி மாநிலங்களாகத் தமிழ்நாடும் கேரளாவும் போட்டிப் போட்டுக் கொண்டு முதல் இடத்தைப் பிடித்துள்ளன.
ஒன்றிய அரசின் The Ministry of Consumer Affairs அறிக்கையின்படி நாடு முழுவதும் விலைவாசி மற்றும் பணவீக்கம் நிலவியபோதும், அதன் பாதிப்பு தென் இந்தியாவில் அதிக அளவு இல்லை எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்திய அளவில் பால் விலையானது அதிகமாக இருந்தபோதும் தமிழ்நாட்டில் அதன் விலை குறைவாக இருந்தது என்கிறது அறிக்கை.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் குறைந்து பால் விலை லிட்டருக்கு 40 ரூபாய்தான் இருந்துள்ளது. இது தேசிய சராசரியைவிட (ரூ.55/லி) குறைவானது.
தென்னிந்தியாவில் தொழில் மயமான மாநிலங்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா உடன் தமிழ்நாட்டை ஒப்பிடும்போது அதிக அளவிலான தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடுதான் உள்ளது.
இது தேசிய அளவில் 15% அதிகப்படியான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது என்கிறது Rbi handbook of statistics on indian states (2021-22) ஆண்டுக்கான அறிக்கை.
தென்னிந்தியாவில் தொழில் மயமான மாநிலங்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா உடன் தமிழ்நாட்டை ஒப்பிடும்போது அதிக அளவிலான தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடுதான் உள்ளது.
இது தேசிய அளவில் 15% அதிகப்படியான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது என்கிறது Rbi handbook of statistics on indian states (2021-22) ஆண்டுக்கான அறிக்கை.
அதாவது தமிழ்நாட்டில் 38837 தொழிற்சாலைகள் உள்ளன. குஜராத்தில் 28479 தொழிற்சாலைகள்தான் உள்ளன. ஆந்திராவில் இதன் எண்ணிக்கை 16924 ஆகவும் தெலங்கானாவில் 15271 ஆகவும் உள்ளது.
இந்திய அளவில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதிகள் உள்ளன. அதாவது ஒரு மருத்துவமனைக்குச் சராசரியாக 40 படுக்கைகள் என்ற எண்ணிக்கையில் படுக்கைகள் சிறப்பாக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன மற்றொரு அறிக்கை.
அதாவது 2,507 அரசு மருத்துவமனைகளில் 99,435 படுக்கைகள் உள்ளன.
இதை எல்லாம்விட மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு 2021-22 இன் அறிக்கைப்படி உணவுப் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களில் நமது தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது பாஸ்!
அனைத்திலும் பாஸ் பாஸ்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக