வெள்ளி, 15 செப்டம்பர், 2023

ஒருநாளுக்கு முன்னதாகவே வந்த மகளிர் உரிமை தொகை!

மின்னம்பலம் - christopher : கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் இன்று (செப்டம்பர் 15) தொடங்கி வைக்கப்படும் நிலையில், ஒருநாளுக்கு முன்பாகவே தங்களது வங்கி கணக்கில் ரூ.1,000 வந்து சேர்ந்ததால் பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் வெளியிட்டார். கடந்த 2 மாதமாக விண்ணப்பங்களை பெற்று பயனாளர்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
நேற்று வந்த ஆயிரம்!
மாநிலம் முழுவதும் மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 கோடி பயனாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் 1 ரூபாய் அனுப்பி வங்கி கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.

தொடர்ந்து நேற்று மாலை முதல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை அனுப்பப்பட்டுள்ளது.

திட்டம் தொடங்கப்படும் நாளான இன்று அனைத்து வங்கிக் கணக்குக்கும் ஒரே நேரத்தில் தொகையை விடுவித்தால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படும் என்பதால், அதை தவிர்க்கும் விதமாக இத்தொகை விடுவிக்கப்பட்டது.

மேலும் பணம் பெறும் பயனாளிகளுக்கு இதுகுறித்த குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது. வங்கிகளும் அந்த தொகை பெறப்பட்டதற்கான  குறுஞ்செய்திகளை பயனாளிகளுக்கு அனுப்பின.

செப்டம்பர் 15ஆம் தேதி (இன்று)  பணம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாளுக்கு முன்பாகவே ரூ.1,000 வந்து சேர்ந்ததால் பெண்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் திட்டம் துவக்கம்!

இதன் தொடர்ச்சியாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான இன்று  காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

காஞ்சிபுரத்தில் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு விழா துவங்க உள்ளது.

இந்த விழாவில் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டு, அரசு முத்திரை, திட்டத்தின் பெயர், வங்கி பெயர், பயனாளி பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் பிரத்யேகமாக தயாராகியுள்ள ஏடிஎம் அட்டையையும் பயனாளிகளுக்கு முதல்வர் வழங்க உள்ளார்.

இதனையடுத்து மற்ற மாவட்டங்களிலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை பயனாளிகளுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் வழங்க உள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: