புதன், 13 செப்டம்பர், 2023

மாலத்தீவில் 'இந்தியாவே வெளியேறு' முழக்கம்: சீனாவுக்கு ஆதரவு பெருகுவது ஏன்? - BBC News தமிழ்

மாலத்தீவு: 'இந்தியாவே வெளியேறு' முழக்கம் ஏன் எழுந்தது? சீனா என்ன செய்கிறது?

bbc.com  -, அபிஜித் ஸ்ரீவஸ்தவா  :  பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடான மாலத்தீவு, புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய நாடாக இருந்து வருகிறது. இதனால் அந்நாட்டிற்கு பல்வேறு உதவிகளை இந்தியா அளித்து வருகிறது.
இந்நிலையில், அங்கு ஆதிக்கம் செலுத்த சீனாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாலத்தீவில் இந்தியா வெளியேற வேண்டும் என்ற பிரசாரம் பெருகி வருவது உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


மாலத்தீவில் நடைபெறும் தேர்தல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முக்கியமான அரசியல் சார்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இந்த சிறிய நாட்டின் தேர்தல் முடிவுகளில் இந்தியாவும் சீனாவும் அதிக கவனம் செலுத்திவருகின்றன.
மாலத்தீவு இரு நாடுகளுக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இரு நாடுகளும் ஏற்கெனவே மாலத்தீவில் அதிக அளவில் முதலீடு செய்து எல்லா வகையிலும் உதவி செய்து வருகின்றன.
மாலத்தீவில் அதிபர்
மாலத்தீவுடனான உறவுகள் மேம்படும் என இருநாடுகளும் நம்புகின்றன. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப இரு நாடுகளின் வியூகங்களும் மாறுமா? மாலத்தீவில் "இந்தியா அவுட்" என்ற முழக்கம் ஏன் எழுந்தது?

மாலத்தீவு என்ற அந்தச் சிறிய நாட்டில் சுமார் 5.21 லட்சம் பேர் வசிக்கின்றனர். அந்நாட்டின் அதிபர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்கவில்லை.

அந்நாட்டு தேர்தல் விதிகளின்படி, செப்டம்பர் 30ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைப் பொறுத்து, அந்நாட்டின் மீதான இந்தியா மற்றும் சீனாவின் வியூகங்கள் மாறுபடும்.

இந்தியா - மாலத்தீவு உறவு எப்படிப்பட்டது?

செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 2,25,486 வாக்காளர்கள் வாக்களித்னர். தற்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் இதில் 86,161 (39.05%) வாக்குகளைப் பெற்றார்.

முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர் முய்ஜு 1,01,635 (46.05%) வாக்குகளைப் பெற்றார். முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய நாடாளுமன்றத் தலைவர் முகமது நஷீதுவின் ஆதரவு பெற்ற இலியாஸ் லபிப் என்ற வேட்பாளர் 15,839 (7.18%) வாக்குகளைப் பெற்றார்.

தேர்தல் விதிகளின்படி, முதல் சுற்றில் அதிக வாக்குகள் பெற்ற இரு வேட்பாளர்களுக்கிடையே இரண்டாவது சுற்றில் போட்டி இருக்கும். இருவரில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவர்தான் மாலத்தீவின் அதிபர் ஆகப் பதவியை ஏற்க முடியும்.

இப்போது நாடாளுமன்றத் தலைவர் முகமது நஷீத்தின் ஆதரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் எந்த வேட்பாளரை ஆதரிப்பார் என்பது மிகுந்த சுவாரஸ்யம் அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

இப்ராஹிம் முகமது சோலிஹ் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணி, இந்தியாவுக்கு முதலில் முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார். ஆனால், முகமது முய்ஜுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி சீனாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது.

அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் முகமது முய்ஜு, வாக்குப் பதிவின் போது வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் பெயர் எதிர்பாராத விதமாகவே இந்தத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது. உண்மையில், முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் தான் களத்தில் நின்றிருக்க வேண்டும். ஆனால், அப்துல்லா யாமீன் பெயர் பணமோசடி மற்றும் ஊழல் போன்ற வழக்குகளில் சிக்கியதால், அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆனார்.

தேர்தலில் போட்டியிட அவர் தகுதியற்றவர் என ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து முய்ஜுவின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது. 2013-2015க்கு இடையில் ஆட்சியில் இருந்த அப்துல் யாமீன் மாலத்தீவு, சீனாவுக்கு இடையிலான உறவை மேம்படுத்த பாடுபட்டார்.

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே பொருளாதார, கலாசார, ராணுவ மற்றும் ராஜ்ஜீய உறவுகள் 60 ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத்தீவின் புவியியல் சார்ந்த இடம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வியூகரீதியாக முக்கியமானது. மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவிடம் இருந்து நிதி மற்றும் ராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது.

கடந்த 1965ஆம் ஆண்டில் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இங்கு மன்னராட்சி முறையே நடைமுறையில் இருந்தது. பின்னர் நவம்பர் 1968இல் குடியரசாக மாறியது.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இந்தியா மாலத்தீவுக்கு சமூக-பொருளாதார மேம்பாடு, நவீனமயமாக்கல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் உதவி அளித்துள்ளது.

சீனாவுக்கு நட்பு நாடாக மாறிய மாலத்தீவு

செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் 43.3 சதவிகித வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
மாலத்தீவில் 1980களின்போது ஆளும் மவுமூன் அப்துல் கயூமுக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியை அடக்குவதற்கு இந்திய அரசு 'ஆபரேஷன் காக்டஸ்' என்ற பெயரில் உதவி செய்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டன.

பிறகு 2008ஆம் ஆண்டு, மாலத்தீவு புதிய அரசமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகு அதன் முதல் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கயூம் தோல்வியடைந்து, முகமது நஷீத் அதிபர் பொறுப்பேற்றார்.

அப்போதிருந்து, முக்கிய கட்சிகளுக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. நஷீத் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். அவர் 2012இல் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலில், நஷீத் முதலில் நடைபெற்ற வாக்குப் பதிவின்போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். ஆனால் தேர்தல் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. பின்னர் இரண்டாவதாக நடைபெற்ற தேர்தலில் அப்துல்லா யாமீன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு, சீனாவும், மாலத்தீவும் நட்பு நாடுகளாக மாறின.

'இந்தியாவே வெளியேறு' முழக்கம்

செப்டம்பர் 9 அன்று நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, அதிபர் வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலிஹ் வாக்களித்தார்.
மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (MDP) வேட்பாளர் இப்ராஹிம் சோலிஹ் 2018இல், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சிக்கு வந்த பிறகு, 'முதலில் இந்தியா' என்ற கொள்கையை எடுத்து, இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக, பொருளாதாரம் மற்றும் ராணுவத் துறைகளில் இந்தியாவுக்கு அவர் முன்னுரிமை அளிக்கத் தொடங்கினார். அதே நேரத்தில், மாலத்தீவுக்கு கடல்சார் கண்காணிப்பு விமானத்தை பரிசாக வழங்கவும், அந்நாட்டு விமானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியாவும் ஒப்புக்கொண்டது.

இருப்பினும், இந்தியாவின் தலையீட்டிற்கு எதிர்க்கட்சியான மாலத்தீவு முன்னேற்றக் கட்சி (பிபிஎம்) மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவுடனான உறவை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ளவும், எந்த உதவியும் பெறக்கூடாது என்றும் அரசுக்கு அக்கட்சிகள் அறிவுறுத்தின.

முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையிலான இந்த இரு கட்சிகளும் 2020 அக்டோபரில் 'இந்தியாவே வெளியேறு' என்ற இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கின.

ஆனால், அதிபர் இப்ராஹிம் சோலிஹ் இந்த பிரசாரத்தை எதிர்த்தார். மாலத்தீவு வெளியுறவு அமைச்சகமும் இந்தியாவுக்கு எதிரான பொய்கள் மற்றும் வெறுப்புப் பிரசாரங்களை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது.

சீனாவின் கனவுத் திட்டத்திற்கு ஆதரவு

2013 தேர்தலில், முகமது நஷீத் முதலில் நடைபெற்ற வாக்குப் பதிவின் போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றபோதிலும் தேர்தல் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது.

இந்தியா, 2021ஆம் ஆண்டுக்குள் மாலத்தீவில் 45க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றுள்ளது. மாலத்தீவின் நான்கு முக்கிய தீவுகளை இணைக்கும் பாலங்கள் மற்றும் சாலைகளை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ``தி கிரேட்டர் மேல் கனெக்டிவிட்டி ப்ராஜெக்ட்'' (ஜிஎம்சிபி)க்காக, இந்தியா ரூ. 4,151 கோடி ($500 மில்லியன்) முதலீடு செய்து உதவியது. இதற்கான உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

மார்ச் 2022இல் மாலத்தீவில் பத்து கடலோர ரேடார் அமைப்புகளையும் இந்தியா நிறுவியது. அட்டு தீவில் ஒரு 'போலீஸ் அகாடமியை' தொடங்கவும் இந்தியா உதவியது.

இந்தியாவுக்கு மாலத்தீவு எவ்வளவு முக்கியமோ அதே அளவு சீனாவுக்கும் வியூகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. மாலத்தீவில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே பெரிய முதலீடுகளையும் அந்நாட்டு அரசு செய்துள்ளது.

மேலும், 2016ஆம் ஆண்டில் மாலத்தீவு அரசு ரூ. 33 கோடிக்கு (40 லட்சம் டாலர்கள்) 50 ஆண்டு குத்தகைக்கு ஒரு தீவை சீனாவிடம் ஒப்படைத்தது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை மாலத்தீவு வெளிப்படையாக ஆதரித்துள்ளது.

சீனாவிடமிருந்து கட்டுமானத் திட்டங்களுக்காக மாலத்தீவு அரசு சுமார் ரூ. 8,302 கோடி (1 பில்லியன் டாலர்) கடன் வாங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை: