செவ்வாய், 12 செப்டம்பர், 2023

AR Rahman: `இனி மறக்குமா நெஞ்சம்?!' - களேபரமான விழா ; சிக்கிய முதல்வர் வாகனம்; போலீஸ் விசாரணை!

 vikatan.com - ரா.அரவிந்தராஜ்  : கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி ஈ.சி.ஆர் ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் `மறக்குமா நெஞ்சம்?' இசைக் கச்சேரி மழை காரணமாக கடைசி நேரத்தில் தடைப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இனி எப்போது மறு தேதி அறிவிக்கப்படும் என்று காத்துக்கொண்டிருந்தனர். அந்த நிலையில்தான், `மழை வந்தாலும், வராவிட்டாலும் நாம் இசை கச்சேரி நடத்துவோம்' எனக் கூறி, செப்டம்பர் 10-ம் தேதி மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி நடக்கும் என நாள் குறிக்கப்பட, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால், முன்பு `கச்சேரி நடக்கவில்லையே!'... எனக் கொந்தளித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் கூட்டம், இன்று `இதெல்லாம் ஒரு கச்சேரியா... இப்படியா நடத்துவீர்கள்?' எனக் கடும் கோபத்தோடு குமுறிக்கொண்டிருக்கிறது. அப்படி என்னதான் நடந்தது?


களேபரமான ஏ.ஆர்.ரஹ்மான் கான்சர்ட்
கொந்தளித்த ரசிகர்கள் கூட்டம்!
ஈ.சி.ஆரில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியில் பங்கேற்பதற்கு, வரிசைக்கு ஏற்ப சில்வர், பிளாட்டினம், கோல்டு, டைமண்ட், வி.ஐ.பி என வகைப்படுத்தி ஒரு டிக்கெட்டுக்கு ரூ.2,000 முதல் ரூ.25,000 வரை பணம் வசூல் செய்திருக்கிறது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ.சி.டி.சி (ACTC Events) நிறுவனத் தரப்பு. ஆனால், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்குப் போதுமான எந்தவித வசதியையும் ஏற்படுத்தித் தராமல் அலைக்கழித்து, இறுதியில் பெரும்பாலான ரசிகர்கள் நிகழ்ச்சியிலேயே கலந்துகொள்ள முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டில் சொதப்பியிருக்கிறது. ரசிகர்கள் அதிருப்தி, போக்குவரத்து நெரிசல் எனத் தொடங்கிய இந்தச் சர்ச்சை இப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிய முதல்வரின் வாகனம், காவல்துறை விசாரணைக்கு உத்தரவு எனக் கடும் உஷ்ணத்தில் வந்து முடிந்திருக்கிறது.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிறுவனம், ``25 ஆயிரம் பேர்தான் வருவார்கள்" எனக் கூறி காவல்துறையிடம் அனுமதி வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ``25 ஆயிரம் பேர் கூடுவதற்கு மட்டுமே போதுமானதாக இருந்த நிகழ்ச்சிக்கான இடத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் கூடியிருக்கிறார்கள். அதாவது அத்தனை டிக்கெட்டுகளை நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. இதனால் டிக்கெட் எடுத்த பலரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தையே நெருங்க முடியாத அளவுக்குக் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இதுதான் எல்லா பிரச்னைகளுக்குமான முக்கியக் காரணம்" என குற்றம்சாட்டுகிறார்கள் டிக்கெட் புக் செய்தும், நிகழ்ச்சியைக் காண முடியாமல் ஏமாந்துபோன ரசிகர்கள்.
ரசிகர்கள்

ரசிகர்கள்
`இல்லை... இல்லை... போமான எந்த வசதியும் இல்லை!'
இசைக் கச்சேரியில் நடந்த குளறுபடிகளையும், மோசமான அனுபவங்களையும் அடுக்கிய ரசிகர்கள், ``மாலை 4 மணியிலிருந்தே ஈ.சி.ஆர் சாலையில் கூட்டம் அலைமோதிவிட்டது. கடுமையான போக்குவரத்து நெரிசலையும் கடந்து ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் கான்சர்ட்டைப் பார்ப்பதற்காக வந்தோம். ஆனால், போதுமான கார் பார்க்கிங் வசதியை நிறுவனம் ஏற்படுத்தித் தரவில்லை. அதனால், 5 கி.மீ-க்கு முன்பு கார்களை கொண்டுசென்று விட்டுவிட்டு நடந்துவரும் நிலைமை ஏற்பட்டது. அப்படி வந்தும்கூட நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் முன்பக்க கேட்டிலேயே நுழைய முடியாத அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்களின் டிக்கெட்டுகளைச் சரிபார்த்து உள்ளே அனுப்பக்கூட போதுமான பணியாளர்கள் இல்லை. எந்தப் பக்கமும் வழிகாட்டுதல் பலகைகள்கூட இல்லை. கூட்ட நெரிசலில் சிக்கி நிறைய பேர் மயக்கமடைந்தனர். பலர் அடிபட்டு, காயமடைந்தனர். ஆனால் எங்கேயும் ஃபர்ஸ்ட் எய்டு வசதிகூட இல்லை. டாய்லெட் வசதியோ, குறைந்தபட்சம் குடிநீர் வசதிகூட இல்லாமல் அல்லல்பட்டோம்.

களேபரமான ஏ.ஆர்.ரகுமான் கான்சர்ட்
உட்காருவதற்கு டிக்கெட் புக் செய்திருந்தவர்களுக்குக்கூட இடம் கிடைக்கவில்லை. பணியாளர்களிடம் கேட்டால் `நீங்கள் முன்பே வந்திருக்கணும்' என அலட்சியமாக பதிலளித்தார்கள். கோல்டு, பிளாட்டினம் என புக் செய்தவர்கள்கூட கடைசி வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானையோ, அந்த மேடையையோகூடப் பார்க்க முடியவில்லை. என்றாலும், அவரின் லைவ் இசையைக்கூட கேட்க முடியாத அளவுக்கு ஸ்பீக்கர் சவுண்ட் வசதியை ஒழுங்காக ஏற்படுத்தியிருக்கவில்லை. எந்த வசதியும் இல்லை; பாதுகாப்பும் இல்லை. இசை நிகழ்ச்சியைப் பார்க்கவும் முடியவில்லை, கேட்கவும் முடியவில்லை. இப்படி ஒரு மோசமான முறையில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதை இதுவரையில் நாங்கள் பார்த்ததே இல்லை" எனப் புலம்பித்தள்ளினர்.

சிக்கிய முதல்வர் வாகனம்!
மேலும், பலர் நிகழ்ச்சி நடந்த இடத்தின் வாசலைக்கூட நெருங்க முடியாமல், நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல், பாதியிலேயே வீடு திரும்பிவிட்டனர். சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட போக்குவரத்து காவல்துறையினரும், காவல்துறையினரும் ஸ்தம்பித்துவிட்டனர். நிகழ்ச்சிக்கு காரில் வந்த பலரும் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை செய்த `Take Diversion' உத்தரவால் பாதி வழியிலேயே ஏமாற்றத்துடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் சாலைப் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முக்கியமாக, முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு, கான்வாய் வீரர்கள் மற்றும் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு முதலமைச்சரின் வாகனத்தை போக்குவரத்து நெரிசலிலிருந்து மீட்டு, சாலையின் எதிர்த்திசையில் அனுப்பிவைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.
நெரிசலில் சிக்கிய முதல்வர் வாகனம்:

`பணத்தைத் திருப்பிக்கொடுங்கள்!'
இந்த நிலையில், இந்தச் சிக்கல்கள் குறித்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் குற்றம்சாட்டிய ரசிகர்கள், `` ஒரு 25 ஆயிரம் பேர்தான் அந்த இடத்தில் இருக்க முடியும் என்றால், 50 ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்பனை செய்திருக்கிறார்கள். அதனால் அளவுக்கதிகமாக அத்தனை கூட்டம் அங்கு கூடிவிட்டது. இதில் பெரிய ஊழல் நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் எங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதற்காக ரஹ்மான் குரல் கொடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தனர்.

ஏசிடிசி ஈவன்ட்
ஆனால், தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த சம்பந்தப்பட்ட ஏ.சி.டி.சி ஈவன்ட் நிறுவனம், ``பெருமை வாய்ந்த சென்னைக்கும், ஏ.ஆா்.ரஹ்மான் சாருக்கும் நன்றி. நம்ப முடியாத அளவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அபரிமிதமான கூட்டம் எங்கள் நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்திருக்கிறது. கூட்ட நெரிசலால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் எங்களை மன்னிக்கவும். அதற்கான முழுப்பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" எனப் பதிவிட்டது. ஆனால் ரசிகர்களோ, `மன்னிப்பு இருக்கட்டும். சரி, எங்கள் பணத்தை யார் திருப்பித் தருவது?' என விடாமல் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர்.

ஆறுதல்; பலி ஆடு! உத்தரவாதம் கொடுத்த ஏ.ஆர்.ஆர்!
இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில், ``அசாதாரணமான சூழ்நிலையால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் உங்கள் குறைகளுடன் உங்கள் டிக்கெட் நகலையும் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். விரைவில் எங்கள் குழுவினர் பதிலளிப்பார்கள்" எனப் பதிவிட்டார். மேலும், தனது இன்ஸ்டா பக்கத்தில், ``மக்கள் விழித்துக்கொள்ள நானே பலியாடு ஆகிறேன். உலகத்தர கட்டமைப்பு, சுற்றுலா மேம்பாடு சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பு நமக்கு வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான்
காவல்துறை விசாரணை!
ஒரேயொரு இசைக் கச்சேரி போக்குவரத்து நெரிசல், நிகழ்ச்சிக் குளறுபடி, டிக்கெட் முறைகேடு... என முதல்வரின் வாகனம் வரை பெரும் சர்ச்சைக் கச்சேரியாக வெடித்துவிட்டதால், காவல்துறை தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவால், சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தனது தலைமை அலுவலகத்தில்வைத்து நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் விசாரணை நடத்திவருகிறார்.
டி.ஜி.பி சங்கர் ஜிவால், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ்

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட இடத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தலாமா என்பது குறித்து முடிவுசெய்ய ஆய்வு நடத்தப்பட்டது. இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்குப் போதிய இடம் இல்லை. 25 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று குறிப்பட்டு அனுமதி வாங்கிய இடத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியது எப்படி... அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ரசிகர்கள் எப்படி வந்தார்கள்... சம்பந்தப்பட்ட நிறுவனம் டிக்கெட்டை அதிகமான அளவுக்கு விற்பனை செய்ததா என்ற கோணத்தில் டிக்கெட், குடிநீர், கழிப்பிடம், பார்க்கிங் வசதி என அனைத்துச் சர்ச்சைகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: