செவ்வாய், 12 செப்டம்பர், 2023

சீமான் மீது வன்கொடுமை தடைச்சட்டத்தில் கீழ் வழக்கு. போலீசில் இன்னும் ஆஜராகவில்லை

maalaimalarமாலைமலர் : போரூர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் கற்பழிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். இதை தொடர்ந்து விஜயலட்சுமியை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனையையும் மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டுக்கு நேரில் சென்ற போலீசார் விசாரணைக்கு வருமாறு அவருக்கு நேரில் சம்மனை வழங்கினார்கள். அதில் 10-ந் தேதி (கடந்த ஞாயிற்றுக்கிழமை) வளசரவாக்கம் போலீசில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அன்று சீமான் ஆஜராகவில்லை. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் கூறும்போது, சீமான் 12-ந்தேதி காலையில் ஆஜராவார் என்று தெரிவித்து இருந்தனர். இதன்படி சீமான் இன்று காலையில் வளசரவாக்கம் போலீசில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியினரும் வளசரவாக்கம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். 500-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினார்கள். 200-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

சீமானிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் காத்திருந்தனர். 11 மணிக்கு பிறகு சீமான் வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் காலை 10.30 மணியளவில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வக்கீல்கள் மட்டும் வந்தனர். சீமான் நேரில் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து போலீசாரை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

பின்னர் சீமான் தரப்பு வக்கீல் சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சில காரணங்களால் எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜராக முடியவில்லை. இது தொடர்பாக விளக்க கடிதம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து உள்ளோம். நடிகை விஜயலட்சுமி 2011-ல் அளித்த புகார் தொடர்பாக சமாதானமாக செல்வதாக கூறியதையடுத்து வழக்கு ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றத்தில் ஒப்புதல் ஏதேனும் பெறப்பட்டுள்ளதா? என்று கேட்டு மற்றொரு கடிதமும் கொடுத்துள்ளோம்.

இது தொடர்பாக ஆலோசித்து விளக்கம் அளிப்பதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறை விளக்கம் கிடைத்தபின் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க சீமான் தயாராக உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: