திங்கள், 11 செப்டம்பர், 2023

உதயநிதியின் கொசுவர்த்தி சுருள் சனாதன கொசுக்களை விரட்டுமா? புதிய அதிரடி

தினமலர் : சென்னை: சனாதன தர்மத்தை கொசுவை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சையான நிலையில், சமூக வலைதளத்தில் கொசுவை விரட்டுவதை உணர்த்தும் வகையில் கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது 'கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்டவேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்யவேண்டிய முதல் பணி' எனப் பேசியிருந்தார்.
இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


இந்த கருத்துக்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் தன் கருத்தில் இருந்து பின்வாங்காமல் உதயநிதி பிடிவாதமாக இருந்து வருகிறார்.

சில இடங்களில் உதயநிதியின் புகைப்படத்தை காலணியால் தாக்குவது, மிதிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதற்கெல்லாம் சமூக வலைதளமான 'எக்ஸ்'-ல் உதயநிதி சிரிப்பது போன்ற 'ரிப்ளை'யை அளித்தார். அத்துடன் தற்போது கொசுவர்த்தி சுருளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே கொசுவை ஒழிப்பது போல் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசியிருந்த உதயநிதி, தற்போது கொசுவை விரட்டும் கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்தது, சனாதன தர்மம் பற்றிய தன் கருத்தை அவர் மீண்டும் மறைமுகமாக வெளிப்படுத்துவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை: