ஞாயிறு, 10 ஜூலை, 2022

அதிபர் கோத்தபாய ஜூலை 13இல் பதவி விலகுவார் - சபாநாயகர் தகவல்

BBC  Tamil   : இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து, வரும் 13ஆம் தேதி பதவி விலகுவேன் என்று கோட்டாபய ராஜபக்ஷ தம்மிடம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மஹிந்த யாப்பா அபேவர்தன, சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் தோன்றிப் பேசினார். அப்போது அவர், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுமாறு நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கோட்டாபயவிடம் தெரிவித்ததாகவும் அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.மேலும், அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் விதமாக கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை வரை ஜனாதிபதியாக இருப்பார் என்று அபேவர்தன கூறினார்

.நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்த கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் அலுவல்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. இதற்கிடையில், பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தையும் போராட்டக்காரர்கள் உடைத்து தீ வைத்தனர்.

முன்னதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு சர்வகட்சி ஆட்சி பொறுப்பேற்க வழி வகை செய்யத் தயார் என அறிவித்தார்.

கொழும்பில் மக்கள் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர் ரணில். அதில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட சில பிரதான கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. நீடித்து வரும் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் ரணிலும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், தமது அழைப்புக்கு இணங்கி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களிடம் பேசிய ரணில், பிரதமர் பதவியில் இருந்து விலகத் தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

மேலும், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக்கொள்வதாகவும் ரணில் தெரிவித்தார்.
இந்த நிலையில், சபாநாயகர் இல்லத்தில் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பதவியில் இருந்து விலக ரணில் முடிவெடுத்துள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிபிசி தமிழிடம் கூறுகையில், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். குறுகிய காலத்திற்கு ஜனாதிபதி பதவியை வகிக்குமாறு என்னை கேட்டுக் கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

எதிர்கட்சிகளின் கோரிக்கை மீதான உங்களின் முடிவு என்ன என்று கேட்டதற்கு, ''எனக்கு இதில் உடன்பாடு இல்லை. அது அரசியலமைப்பு கடமையாகும்" என்று கூறிய அவர், "இது ஜனாதிபதியும் பிரதமரும் சேர்ந்து எடுக்க வேண்டிய தீர்மானம்" என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

 

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  தொடர்ச்சியாக இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ, மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கோ மிகப்பெரிய சிரமத்தை இலங்கை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத இலங்கை அதிபர் கோத்தபய ராஜ்பக்சே பதவி விலக வலியுறுத்தி, இலங்கை முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், கிரிக்கெட் வீரர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபர் மாளிகையின் நான்குபுறமும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளதை அறிந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அங்கு அவர் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. கோத்தபய ராஜ்பக்சே வெளிநாட்டு தப்பித்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக பல்வேறு நாடுகளிடம் கோத்தபய சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் ஐக்கிய அமீரகம் மட்டுமே அவரது வருகையை ஏற்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
 

இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் ஜூலை 13 ஆம் தேதி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சிகளும் கொண்ட அரசை உருவாக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: