சனி, 16 ஜூலை, 2022

நீட் தேர்வுக்கு பயந்து அரியலூர் மாணவி தற்கொலை;

 தினகரன்  : அரியலூர்: அரியலூரில் நீட் ேதர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் இருளர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். குவைத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி உமா. இவர்களது மகள் நிஷாந்தி(19). பிளஸ் 2 முடித்துள்ளார். இவருக்கு சிறு வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்பது விருப்பம்.
தன் ெபற்றோரிடம், நான் டாக்டர் ஆகி மக்களுக்கு சேவை செய்வேன் என அடிக்கடி கூறி வருவாராம். இவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றார்.  பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 539 மதிப்பெண் எடுத்தார்.


இந்தநிலையில் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் நிஷாந்தி தோல்வியடைந்தார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த நிஷாந்தியை உறவினர்கள் ஆறுதல் கூறி, அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என ேதற்றினர். தொடர்ந்து நிஷாந்தி நீட் தேர்விற்காக படித்து வந்தார். இந்தநிலையில் நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வை எதிர்கொள்ள நிஷாந்தி அச்சமடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், தேர்வு பயத்தால் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனி அறையில் கடிதம் எழுதி வைத்து விட்டு, தூக்கு மாட்டி நிஷாந்தி தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை குடும்பத்தினர் பார்த்தபோது நிஷாந்தி தூக்கில் பிணமாக தொங்கினார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த போலீசார் நிஷாந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நிஷாந்தி எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அந்தக் கடிதத்தில் உருக்கமான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நீட் தேர்வு காரணமாக அரியலூர் மாவட்டம் குமுளூர் கிராமத்தை சேர்ந்த அனிதா தற்கொலை செய்தார். இவரை தொடர்ந்து பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்தனர். இந்நிலையில் அரியலூரில் மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: