வெள்ளி, 15 ஜூலை, 2022

முதல்வர் ஸ்டாலின் காவேரி மருத்துவ மனையில் இருந்து இன்று வீடு திரும்புவார்

தினத்தந்தி  : சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தனிமைப்படுத்தி கொண்டு இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்  சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக நேற்று பிற்பகல் 12 மணிக்கு மேல் அவருடைய இல்லத்தில் இருந்து புறப்பட்டு வந்தார்.
மருத்துவமனையில் அனுமதி அப்போது அவருக்கு தொண்டை மற்றும் உடல் வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகலில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
காவேரி மருத்துவமனையின்   இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- கொரோனா அறிகுறிகளுக்கான பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்புக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்றதாக மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: