![]() |
Nadarajah Kuruparan : தத்துவம் இல்லாத நடைமுறையும், நடைமுறையில்லாத தத்தவமும் வரலாறுகளை உருவாக்குவதில்லை!
புரட்சி ஒன்றினால் மட்டுமன்றி ரணில் ஜனாதிபதியாவதை சவாலுக்கு உட்படுத்தவோ, தடுக்கவோ முடியாது அவர் தற்காலிகமாகவேனும் ஜனாதிபதியாக – முன்னாள் ஜனாதிபதியாக வரலாற்றில் தன்னை இணைத்துக்கொள்வார் என என்னுடைய முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தேன். அதுவே நடந்தேறியிருக்கிறது.
பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
தத்துவம் இல்லாத நடைமுறையும், நடைமுறையில்லாத தத்தவமும் வரலாறுகளை உருவாக்குவதில்லை.
நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் வேறு அரசியல் அமைப்பு விதிமுறைகள், வியாக்கியானங்கள் வேறு.
ரணில் ஒருநாளேனும் ஜனாதிபதியாக வர அனுமதிக்க முடியாது எனக் கூறியோரால் அதனை நிறைவேற்ற முடிந்ததா?
அல்லது அரகளைய – கோட்டா கோ கம போராட்டகாரர்களால் அதனை சாதிக்க முடிந்ததா?
காரணம் கோட்டாபய ராஜபக்ஸவின் வெளியேற்றத்தின் பின்னான நிகழ்வுகளும், சூழலும் இலங்கையின் அரசியலை தலைகீழாக மாற்றின.
அதுவரை சட்டத்தின் ஆட்சி – மனித உரிமைகள் – ஜனநாயகம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத உள்நாட்டு அமைப்புகள் – சர்வதேசம் – குறிப்பாக ஐ.நா – ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் அமைப்பு – அமெரிக்கா – சர்வதேச நாணயநிதியம் உள்ளிட்டவர்கள் உடனடியாக களத்தில் இறங்கினார்கள்.
போராட்டகாரர்களுக்கு தொடர் அழுத்தங்களை கொடுத்தார்கள். வன்முறைகளை, அமைதியின்மையை தொடர்வதை உடன் நிறுத்துமாறு கோரினார்கள்.
விளைவு போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டுள் கொண்டு வரப்பட்ட அதிகார மையங்களில் இருந்து அவர்கள் விலகிச்செல்ல இணக்கம் தெரிவித்தார்கள். அந்த மையங்கள் மீண்டும் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்குச்ட்டம் அமூலுக்கு வந்தது. படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டன. வடக்கு கிழக்கு யுத்தகாலத்தில் காட்சி அளித்தது போன்று கவச வாகனங்கள் கொழுமபின் வீதிகளில் இறக்கப்பட்டன. படையினரின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டன. போராட்டகாரர்களுக்கும், மக்களுக்கும் உளவியல் அதிர்ச்சிகள் கொடுக்கப்பட்டன.
எரிவாயு, எரிபொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளின் முதற்கட்டமாக, 3 கப்பல்கள் இலங்கையை அடைகின்றன. மக்கள் வரிசைகளில் காத்திருக்கும் நிலையை மாற்றும் முயற்சிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன.
20ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றல் நடைபெறுவதற்கு முன் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை கையாள முடியும் என்ற கருத்தியல் உருவாக்கப்படும்.
ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து போட்டியிட களத்தில் இறக்கக் கூடிய அனைத்து தரப்பினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது அதிக ஆசனங்களை நாடாளுமன்றில் கொண்டிருக்கும் ராஜபக்ஸக்களின் பொதுஜனபெரமுன கட்சியை திருப்த்திப் படுத்தக்கூடிய, அவர்கள் நம்புகின்ற ஒருவரை, ரணிலை எதிர்பவர்களால் நிறுத்த முடியுமா? என்ற கேள்விகள் தொடர்கின்றன.
ஆக கோட்டபய ராஜபக்ஸவின் எஞ்சிய காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு ஒப்பிட்டளவில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே இருக்கிறது.
மாறாக ரணிலை வீழ்த்துவதாயின், பொதுஜன பெரமுன கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40 பேருடைய ஆதரவையும், மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவையும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும், அவருக்கு எதிரான சஜித் தலைமையிலான ஐக்கியமக்கள் சக்த்தியினர் பெறவேண்டும். இதற்கான சாத்தியம் இருக்கிறதா?
ஆக நிலவுகின்ற சூழலில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவும், பிரதமர் உள்ளிட்ட சர்வகட்சி அரசாங்கத்தை, சஜித் பிரேமதாஸா அல்லது எதிர்கட்சிகள் பிரேரிக்கும் ஒருவர் தலைமையிலும் முன்கொண்டு செல்வதற்கான ஒரு பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும்.
அதன் பின் 6 மாதத்திலோ, ஒரு வருடத்திலோ அனைவரது இணக்கப்பாட்டுடன் ஒரு பொதுத்தேர்தலுக்கு செல்ல முடியும். இவையாவும் எதிர்கட்சிகளின் ஒற்றுமையிலும், எட்டப்படும் பொது உடன்பாடுகளிலுமே தங்கியிருக்கிறது.
இவற்றை ஏற்றுக்கொள்ளாவிடின் மிண்டும் ஒரு ஓகஸ்ட் 9ஐ நடாத்திக் காட்ட வேண்டும். அதுவும் இனிவரும் நாட்களில் சாத்தியமா? என்ற பலமான கேள்வியை நிலவுக்கின்ற சூழலை கடந்து செல்ல முடியவில்லை.
குறிப்பு்:-
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய விடயங்கள் –
பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள இந்த குறுகிய காலத்துக்குள் நான் சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளேன். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான பின்னணி இந்த சில நாட்களில் செய்து தரப்படும்.
´அதிமேதகு´ என்ற சொல்லுக்கு தடை விதிக்கின்றேன். நாட்டுக்கு தேசியக்கொடி மட்டும் போதும். ஜனாதிபதி கொடி இரத்து செய்யப்படுகின்றது. அரசியலமைப்புக்கு அப்பால் சென்று செயற்பட நான் தயாரில்லை.
பாராளுமன்ற ஜனநாயகத்தை இல்லாதொழிக்க எந்த குழுவுக்கும் இடமளிக்கமாட்டேன். போராடும் உரிமை உள்ளது. ஆனால் வன்முறையை அனுமதிக்க முடியாது. போராட்டக்காரர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. போராட்டக்காரர்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுபவர்கள்.
நாம் வாழ்வதற்கும், அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம். எனவே, நாடு குறித்தும், மக்கள் பற்றியும் சிந்தித்து செயற்படுமாறு கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக