திங்கள், 7 மார்ச், 2022

5 மாநில தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்..? - வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!

 நக்கீரன் : உ.பி., பஞ்சாப், கோவா, உத்ரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து முடந்துள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் உ.பி. தேர்தலின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர்.
உ.பி.யில் ஆட்சி அமைக்கும் கட்சி அடுத்து நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான இடங்களை வெல்லும் அதன்மூலம் ஆட்சி அமைப்பது அல்லது ஆட்சி அமைக்கும் கட்சியின் கூட்டணியில் முக்கியப் பங்கு வகிக்கமுடியும்.
இதனால் தமிழகம் தொடங்கி காஷ்மீர் வரை உ.பி தேர்தல் முடிவுக்காக பெருவாரியான மக்கள் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.


இந்நிலையில் உத்ரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முழுவதுமாக நடைபெற்ற நிலையில், உ.பி-யில் இன்று 7ம் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10ம் தேதி எண்ணப்பட இருக்கிறது. இதற்கிடையே அனைத்து மாநிலத்திலும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் தற்போது வெளியாகி உள்ளது.

70 தொகுதிகளை உடைய உத்ரகாண்டில் பாஜக 35+ மற்றும் காங்கிரஸ் 31+ தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக  இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

117 தொகுதிகளை உடைய பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்று அனைத்து தொலைக்காட்சி கருத்துக்கணிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி 72 முதல் 90 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சி 24+ தொகுதிகளிலும், பாஜக 4+ தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

40 தொகுதிகளை உடைய கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 16+ இடங்களிலும், பாஜக 14+ இடங்களிலும் ஆம் ஆத்மி 4+ இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வர வாய்ப்பிருந்தாலும், ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.
60 தொகுதிகளை உடைய மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாஜக 43+ இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 8+ இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 403 தொகுதிகளை உடைய உ.பி-யில் பாஜக தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அனைத்து கருத்துக்கணிப்பிலும் தெரியவந்துள்ளது. பாஜக 230+ தொகுதிகளிலும் எஸ்.பி 130+ தொகுதிகளிலும் வெற்றிபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்கத்தில் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் வெளியான கருத்துக்கணிப்புகளில் கூட ஏற்ற இறக்கங்கள் இருந்த நிலையில், உபி மாநிலத்தில் கண்டிப்பாக பாஜக ஆட்சி அமையும் என்று தற்போது வெளியான கருத்துக்கணிப்புகளில் தெரியந்துள்ளது.

 

கருத்துகள் இல்லை: