வியாழன், 10 மார்ச், 2022

மணிமுத்தாறு பேரூராட்சி தலைவியாக ஒரு தேயிலை தொழிலாளியும்.. திமுகவின் மற்றோரு சாதனை

“தேயிலை தொழிலாளியும் சேர்மன் ஆக முடியுமென்றால் அது தி.மு.கவால் மட்டும்தான்”: பேரூராட்சி தலைவி நெகிழ்ச்சி!

கலைஞர் செய்திகள்  :  சேர்மன் ஆக முடியுமென்றால் அது தி.மு.கவால் மட்டும்தான்”: பேரூராட்சி தலைவி நெகிழ்ச்சி!
“தேயிலைத் தோட்டத் தொழிலாளியும் உயர்பதவிக்கு வர முடியுமென்றால் அது தி.மு.கவால் மட்டும்தான் சாத்தியம்” என மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி தெரிவித்துள்ளார்.
தி.மு.க ஆட்சியில்தான் ஒரு சாதாரண மனிதர்கூட உயர் பதவிக்கு வரமுடியும் என மணிமுத்தாறு பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளி அந்தோணியம்மாள் தெரிவித்துள்ளார்.


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட மணிமுத்தாறு பேரூராட்சியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து வருபவர் அந்தோணியம்மாள்.
இவர் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க சார்பில் மணிமுத்தாறு பேரூராட்சியில் 10வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் மணிமுத்தாறு பேரூராட்சியில் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றார்.

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட வரலாற்றில் 90 ஆண்டுகளில் தோட்டத் தொழிலாளிகளில் முதல் பேரூராட்சித் தலைவராக அந்தோணியம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அவர் “ஒரு ஏழை, தேயிலை தொழிலாளி, பேரூராட்சி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட முடியுமென்றால் அது தி.மு.கவால் மட்டும்தான்” எனத் தெரிவித்தார்.

மேலும், “இந்தப் பொறுப்பை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. மணிமுத்தாறு பேரூராட்சி மக்களின் பிரச்சனைகளையும் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் களைந்து தி.மு.கவின் நல்லாட்சியை அந்த மக்களுக்கு கொண்டு சேர்ப்பேன்” என உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை: