செவ்வாய், 8 மார்ச், 2022

குடும்பத் தலைவி பெயரில் வாரிய வீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 நக்கீரன் செய்திப்பிரிவு : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (08/03/2022) மாலை 07.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. மகளிரணியின் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர்.


பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களைக் கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம். ஆண்களை விட பெண்களே அதிகமானோர் கல்வி பயில்கின்றனர். அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40% ஆக உயர்த்தியுள்ளோம்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் குடும்பத் தலைவிகள் பெயரில் தான் வழங்கப்படும்" என்று அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, கட்சியின் மகளிரணி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஆசிரியர் சைலஜா கலந்துக் கொண்டார்.

 

கருத்துகள் இல்லை: