திங்கள், 7 மார்ச், 2022

தமிழ் இலக்கியத்தில் 7500 வருட கடல்கோள் (சுனாமி) தாக்குதல் சான்றுகள்


 இங்கர்சால் நார்வே
  : 7500 வருட சுனாமி சான்று
தமிழ் இலக்கியத்தில் கடந்தகால கடல்கோள் (சுனாமி) தாக்குதல்கள் குறித்து நிறைய குறிப்புகள் உள்ளன. கடலுக்குத் தமிழில் “முந்நீர்” என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் நாற்பது இடங்களில் “முந்நீர்” என்ற சொல் வருகிறது.
(புறநானூற்றுப் பாடல்களில் 9, 13, 20, 30, 35, 60, 66,137, 154 முதலியன) “நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழில்கள் உடைமையின் முந்நீர்” என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. ஆகவே கடலின் அழிவு சக்தி குறித்தும் “சுனாமி” எனப்படும் இராக்கதப் பேரலைகள் குறித்தும், தமிழர்களுக்கு முன்பே தெரியும்.
நிலத்தைப் படைப்பதும் அழிப்பதும் கடல்தான். தமிழை வளர்க்க அமைக்கப்பட்ட முதலிரண்டு தமிழ்ச் சங்கங்களையும் கடல் விழுங்கியதால் தற்போதுள்ள மதுரையில் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இந்த சுனாமியை கடல்கோள் என்று பழைய உரைக்காரர்கள் குறிப்பர். தென் மதுரையையும் கபாடபுரத்தையும் கடல் விழுங்கியதால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.
இறையனார் களவியலுரையும் அடியார்க்கு நல்லாரின் உரையும் இதைப்பற்றி விளக்கமாகப் பேசுகின்றன.
சங்கத் தமிழ் நூலான கலித்தொகையும் சங்கக் காலத்துக்குப்பின் எழுந்த சிலப்பதிகாரமும் பாண்டிய நாட்டின் தென் பகுதியை கடல் விழுங்கியதை கூறுகின்றது:

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கடல் கோளின் போது, புலிக்காட் ஏரிப்பகுதியில் கடல் சுமார் 18கி.மீ தூரமும், சென்னை நகர்ப் பகுதியில், 7 – 8 கி.மீ. தூரமும், கடலூருக்கும், பூம்புகாருக்கும் இடைப்பட்ட பகுதியில் 2௦ கி.மீ. தூரமும், கோடியக்கரை- திருத்துறைப்பூண்டி பகுதியில் 36 கி.மீ.தூரமும், உத்திரகோசமங்கை பகுதியில் 8 – 10 கி.மீ. தூரமும், கொற்கைப் பகுதியில் 12 கி.மீ. தூரமும் கடல் முன்னேறிச் சென்றுள்ளது என்பதை, புவியியல், தொல் மகரந்தவியல், தொல்லுயிரியல், தொலையுணர்வு தொழில் நுட்பவியல் போன்றவை துணைகொண்டு ஆய்வாளர்கள் இதுநாள்வரை விளக்கி வந்துள்ளார்கள். அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, இந்தக் கடல்கோளின் போது, பல நூறு சதுர கி.மீ. பரப்பளவுள்ள நிலப் பகுதி கடலுக்குள் மூழ்கியது என்பதை அறிய முடிகிறது.

இலக்கியமும் இந்திய ஆய்வும் இப்படியிருக்க, 2017 ஆம் ஆண்டு. சார்லஸ் எம். ரூபின், பெஞ்சமின் பி. ஹார்டன், கெர்ரி பார், ஜெசிகா இ. பிலார்சிக், பேட்ரிக் டேலி, நஸ்லி இஸ்மாயில் & ஆண்ட்ரூ சி. பார்னெல் குழுக்களால். ''7,400 ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமி'' என்ற ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைத் தமிழ் ஆய்வாளர்கள் எழுத வேண்டும் என்று பலரிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன். அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. தம்பி ஆதிமூலப் பெருமாள் நீங்களே அதனைக் குறித்து எழுதி விடுங்கள் என்றார். ஆகையால் ஒரு அறிமுகம் மட்டும் இங்குத் தருகிறேன். ஆய்வுக்கட்டுரையில் இணைப்பை முதல் கமெண்டில் வைக்கிறேன். முடிந்த நண்பர்கள் ஆய்வாளர்கள் அதனை முழுவதுமாகத் தமிழ் மயப்படுத்த முடியுமா என்று பாருங்கள்.
இந்தோனேசியாவின் கடலோர குகை தளம் ஆச்சே மாகாணத்தின் வடமேற்கு கடற்கரையில் லாங் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

அதில் சுனாமி வந்தால் மட்டும் கடல் தண்ணி உள்ளே புகும். அதில் படிந்திருந்த படிமங்களை வைத்துக் கடந்த 7 ஆயிரத்து 500 வருடங்களில் இந்திய பெருங்கடலில் மூன்று ராட்சத சுனாமி நடந்துள்ளதாக ஆய்வாளர்கள் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார்கள். குகையில் உள்ள வண்டல் பதிவு 7,400 மற்றும் 2,900 ஆண்டுகளுக்கு இடையில் 11 சுனாமி நிகழ்வைப் பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் 456 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுனாமி சராசரியாக வந்திருக்கிறது.
முதல் இரண்டு தமிழ் சங்கங்களைக் கடல் விழுங்கியது என்ற குறிப்பையும் இந்த இரண்டு பெரும் சுனாமி குறிப்பையும் இணைத்துப் பார்த்தால் குறைந்தபட்சம் தமிழை 7500 ஆண்டுகளுக்குச் சான்றுகளோடு நிறுவ முடியும்.

நிலத்தினால் ஒன்றாக இருந்த தமிழகமும் ஈழமும் இவ்வாறான பெரும் சுனாமியால் பிரிக்கப்பட்டு இருக்கும் என்பது பலரின் கருத்து.
தமிழர்கள் முன்வைக்கும் கருத்தை, தமிழ் அல்லாதவர்கள் தன்னார்வமாக உள்ளே வந்து, தமிழர் கருத்தைப் பல மடங்கு பெரிதாக்கி ஒட்டுமொத்தக் கருத்தையுமே பொய்யென்று மாற்றும் யுத்தி ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது.

தமிழகத்தை சுற்றி உள்ள நிலப்பரப்பு பெருமளவில் கடலில் மூழ்கி இருக்கின்றது. அதில் தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள். பெரும் நாகரிகத்தோடு வாழ்ந்துள்ளார்கள். ஒருவேளை அதன் எச்சங்கள் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம். அதனைத் தமிழர்கள் முன்வைக்கும் அதே நேரத்தில். தமிழர் நிலப்பரப்பு ஆப்பிரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை நீண்டு இருந்தது என்ற அதிகப்படியான கருத்துகளை முன்வைத்து ஒட்டுமொத்த கருத்தையும் பொய்யென்று உலக அரங்கில் தமிழ் மீது வன்மம் கொண்டவர்களால் நிறுவப்பட்டு வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க. இவ்வாறான கட்டுரைகளைச் சரியான முறையில் ஆவணப்படுத்த முயலுங்கள். நண்பர்களே.
நன்றி
இவன்
இங்கர்சால் நார்வே
Reference
Rubin, C. M. et al. Highly variable recurrence of tsunamis in the 7,400 years before the 2004 Indian Ocean tsunami. Nat. Commun. 8, 16019 doi: 10.1038/ncomms16019 (2017)

கருத்துகள் இல்லை: