மின்னம்பலம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் தமிழகமெங்கும் திமுக பெரிய அளவு வெற்றி பெற்றிருந்தாலும்.... அந்த வெற்றிக்குப் பின்னால் திமுக கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் பல்வேறு சலசலப்புகளும் எழுந்திருக்கின்றன.
இந்த வகையில் கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதால்.... கடலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான அய்யப்பன் இன்று மார்ச் 6ஆம் தேதி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் திமுக நகர செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரியை திமுக தலைமை மேயர் வேட்பாளராக அறிவித்தது. தனது ஆதரவாளருக்காக மேயர் பதவியை குறிவைத்து காத்திருந்த எம்எல்ஏ அய்யப்பன் இதனால் ஏமாற்றம் அடைந்து தனக்கு ஆதரவான கவுன்சிலர்களை குழுக்களாகப் பிரித்து மறைமுக தேர்தலின்போது அவர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்க முயற்சி மேற்கொண்டார். இதன்
ஒரு பகுதியாக ஏழு கவுன்சிலர்களை விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்தார்.
மார்ச் 3ஆம் தேதி விடியவிடிய கடலூர் மாவட்ட அமைச்சரான எம். ஆர். கே.பன்னீர்செல்வம் அவர் மகன் கதிரவன் உள்ளிட்டோரின் தீவிர முயற்சியால் அந்த ஏழு கவுன்சிலர்களை தவிர மற்ற கவுன்சிலர்கள் மறைமுக தேர்தலுக்கு அழைத்துவரப்பட்டு தலைமை அறிவித்த வேட்பாளர் சுந்தரி மேயராக தேர்வு பெற்றார்.
இதற்கிடையே தனது ஆதரவு கவுன்சிலர்களை கடத்தி வைத்துக் கொண்டு எம்எல்ஏ அய்யப்பன் தலைமைக்கு எதிராக செயல்படுகிறார் என புகார்கள் அறிவாலயம் சென்றன. அதை அடுத்து துணை அமைப்புச் செயலாளரும் தனது நம்பிக்கைக்குரிய வருமான அன்பகம் கலையை கடலூருக்கு அனுப்பிவைத்தார் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின். அன்பகம் கலையின் சமரச முயற்சிக்கும் ஒத்துழைக்காமல் தனது போக்கை தொடர்ந்தார் எம்எல்ஏ அய்யப்பன்.
இதனால் அன்பகம் கலையின் அறிக்கையின் அடிப்படையில் இன்று மார்ச் 6ஆம் தேதி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் சட்டமன்ற உறுப்பினரான அய்யப்பன்.
இன்று காலை தனது கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிச்சாவடி பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார் அய்யப்பன். அவர் மக்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருக்கும் போதே... எம்எல்ஏவை சுற்றியுள்ளவர்கள்,
பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு பற்றி வாட்ஸப்பில் தகவல் வந்திருப்பதாக அய்யப்பனிடம் காட்டினார்கள்.
அப்படியே அப்செட்டான அய்யப்பன் சிறிது ஓரமாகச் சென்று நின்றார். சில நிமிடங்களில் தனது காரில் ஏறியவர் டிரைவரிடம் கடலூரில் உள்ள மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன் இல்லத்துக்கு போகச் சொன்னார். குணசேகரன் தன் மனைவிக்காக மேயர் பதவியை குறிவைத்து இந்தத் தேர்தலில் நிறைய செலவு செய்தவர்.
அவர் வீட்டுக்கு சென்ற அய்யப்பன் குணசேகரனை சந்தித்து நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு கடலூர் நகரில் உள்ள தனது வீட்டை வந்தடைந்தார் எம்எல்ஏ அய்யப்பன்.
அவர் வருவதற்கு முன்பே அவர் வீட்டு வாசலில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். 'மறுபரிசீலனை செய்க மறுபரிசீலனை செய்க.. சட்டமன்ற உறுப்பினர் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்க', என்று அவர்கள் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.
காரில் இருந்து இறங்கி தனது ஆதரவாளர்களை பார்த்த அய்யப்பன், "யாரும் எந்த முழக்கமும் போட வேண்டாம். தலைமை என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. நான் இது குறித்து தலைமையிடம் உரிய விளக்கத்தை கொடுப்பேன். அதன் பிறகு என் மீதான நடவடிக்கை கைவிடப்படும் என நம்பிக்கை இருக்கிறது. ஆனால் யாரும் இப்போது இங்கே கூட வேண்டாம். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள்" என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து கலையச் சொன்னார்.
வீட்டுக்கு போய் மதிய சாப்பாடு சாப்பிட்ட அய்யப்பன் பிற்பகல் 1.50 மணிக்கு தனது காரில் சென்னை நோக்கிப் புறப்பட்டார்.
தனது செயல்பாடுகளுக்கு காரணம் அமைச்சர் எம். ஆர் .கே பன்னீர்செல்வத்தின் தவறான மேயர் தேர்வு தான் என்றும் அது பற்றி உரிய விளக்கத்தை தலைமையிடம் சொல்லப் போவதாகவும் காரில் செல்லும்போது தனது நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார் எம்எல்ஏ அய்யப்பன்.
அமைச்சரோடு மல்லுக்கட்டிக் கொண்டு தனது அடுத்த கட்ட அரசியலை திமுகவில் எப்படி மேற்கொள்ளப் போகிறார் அய்யப்பன் என்பதுதான் கடலூர் திமுகவில் இப்போது எழுந்திருக்கும் கேள்வி.
வணங்காமுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக