வெள்ளி, 11 மார்ச், 2022

பேரறிவாளன் விடுதலை - கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்கிற விஷயம்?

May be an image of 1 person, outdoors and monument

Arul Raj :  ராஜீவ் கொலைக்குற்றாவாளி பேரறிவாளனின்  ஜாமீன் விசயத்தில் திமுக இனியாவது  உஷாராக வேண்டும்…
பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைக் கண்டு திமுகவினர் ஆர்ப்பரிக்கின்றனர். மு க ஸ்டாலின் செம கெத்து, மாஸூ என்றெல்லாம் மார் தட்டுகின்றனர். ஆனால் இவர்கள் எல்லாம் ஒரு முக்கியமான வரலாற்று விஷயத்தை அடியோடு மறந்து விட்டார்கள்.
கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்கிற விஷயம்தான் அது.
முதலில் பேரறிவாளன் விவகாரத்தை விட்டுவிட்டு இலங்கையின் புலிகள் விவகாரத்தை பார்ப்போம். பிரபாகரன் தலைமையிலான புலிகள் எப்போதுமே திமுக தலைவர் கலைஞர் அவர்களைக் கண்டு கொண்டதே கிடையாது. அவர்கள் நெருக்கம் காட்டியது எல்லாமே அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆரிடம் தான்.
புலிகள் திமுகவை முழு அளவில் எப்போதுமே மதித்ததும் கிடையாது. நம்பியதும் கிடையாது.


அதனால் திமுகவும் அதற்குத் தக்க படிதான் எப்போதுமே நடந்து கொண்டது. இலங்கையில் இனப் பிரச்சனை தொடங்கிய காலம்முதல் அரசியல் ரீதியாக ஏதாவது சிறிய பலனாவது திமுகவுக்கு கிடைத்துள்ளதா என்று பார்த்தால், கிடைத்தது எல்லாமே ஏழரையை தவிர வேறு ஒரு புண்ணாக்கும் கிடையாது.
எமர்ஜென்சியை எதிர்த்த காரணத்தால் 1976 ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகள் எம்ஜிஆர் ஆட்சி. அந்தக் காலகட்டங்களில் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்து கலைஞர் காப்பாற்றியதன் விளைவாய் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க முடிந்தது. அந்தச் சந்தோசம் நீடிக்கவில்லை. விடுதலைப் புலிகளை கலைஞர் ஆதரிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டே ஆண்டுகளில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

பதிமூன்று வருட போராட்டத்தின் பலனை, அடுத்த இரண்டே ஆண்டுகளில் விடுதலைப்புலிகளின் அடாவடித்தனங்களால் திமுக பறிகொடுத்தது. அவர்களால் திமுகவிற்கு ஏற்பட்ட முதல் பேரிழப்பு இது.
அதன்பின் அடுத்துவந்த தேர்தலிலும் திமுகவிற்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்த நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஶ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்படுகிறார். அந்த மாபாதக படுகொலையைச் செய்தவர்கள் விடுதலைப்புலிகள் என குற்றம்சாட்டப்படுகிறது. அடுத்த நொடி அந்தக் கொலையும் திமுகவின் கணக்கில் எழுதப்பட்டது.

ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள் என்ற சந்தேகம் வெடித்தவுடன் நேரடி பாதிப்புக்கு ஆளானது திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் தான். தமிழகம் முழுவதும் அவர்களின் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைக்கப்பட்டன. ஏராளமானோர் தாக்கப்பட்டனர். இதெல்லாம் விடுதலைபுலிகள் திமுகவுக்கு வாங்கி கொடுத்த இரண்டாம் கட்டப் பரிசுகள். இந்த விஷயம் எல்லாம் இன்றையத் திமுகவினர் மண்டையில் ஏறுவதே கிடையாது.
அந்த சமயத்தில் அந்தக் குண்டுவெடிப்பு நிகழாமல் இருந்திருந்தால் ஜெயலலிதா என்ற அரசியல் அசிங்கம் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்திருக்காது. ராஜீவின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலையில் அன்றைய அதிமுக & காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட தலைவர் கலைஞரைத்தவிர ஒட்டு மொத்த திமுக வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். அடுத்த சில நாட்களிலேயே ராஜீவ் மரணத்திற்கும் அதிமுகவின் அமோகமான வெற்றிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அறிக்கைவிட்ட மாபாதகிதான் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா. முதலில் எம்ஜிஆர் விடுதலைப்புலிகளை ஆதரித்தார். பின்னர் வந்த ஜெயலலிதா அவர்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தார் .

ஆனால் ஊடகங்களும் பொது சமூகமும்  புலிகளையும் அதிமுகவையும் பெரும்பாலும் சம்பந்தப்படுத்தி பார்ப்பதே கிடையாது. புலிகளின் ஆதரவாளர்கள் என்று அதிமுகவை ஒருபோதும் முத்திரை குத்தியது கிடையாது. போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று, புலிகளை ஜெயலலிதா நார் நாராக கிழித்து தொங்கப் போட்டாலும் அதை  யாரும் கேள்வி கேட்டது கிடையாது.
ஆனால் இவர்களுக்கு எல்லாம் திமுக என்றால் மட்டும் உடனே உடலில் உள்ள எல்லா ரோமங்களும் சிலிர்த்து விடும். விடுதலைப்புலிகளை திமுக முழுதாக ஆதரித்ததா இல்லையா ? அதைப்பற்றி எல்லாம் தீர ஆராய்ந்து பொருட்படுத்தவே மாட்டார்கள். திமுகவினர் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்று திமுக ஆட்சியைக் கலைப்பார்கள்.
சரி ஆதரித்தாலாவது மதிப்பார்களா? என்றால் அதுவும் கிடையாது.  இலங்கை இனப் போரை தடுத்து நிறுத்த தவறிய  தமிழினத் துரோகி கருணாநிதி என்று இன்றும் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் தேவையில்லாத கொள்ளிக்கட்டையாய் விடுதலைப்புலிகள் விவகாரத்தையும் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விவகாரத்தையும் திமுகவினர் தோளில் போட்டுக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது  பேரறிவாளன் ஜாமீன் கிடைத்த விவகாரத்தில் திமுகவின் சாதனையை பாரீர் பாரீர்… ஸ்டாலின் ஆட்சியின் விவேகத்தை பாரீர்  என்று கூத்தடிக்கிறார்கள்.
பேரறிவாளன் என்பவர் யார்?  முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்.
19 வயதாக இருக்கும்போதே திருட்டுத்தனமாக இலங்கை சென்று ஒன்பது மாதங்கள் விடுதலைப் புலிகளோடு தங்கிப் பழகியவர்.
நம்நாட்டு அரசு இயந்திரத்தின் கோளாறால் ஏற்பட்ட காலதாமத்தினால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக 32 ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார். கூடுதலான காலங்கள் சிறையில் இருந்துவிட்ட காரணத்தால் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவருடைய தாயார் போராடி வருகிறார் அது அவர் உரிமை.
இந்தப் பிரச்சனை தமிழக அரசிடம் வரும்போது தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி  ஒரு நிலைப்பாடு எடுக்கிறது. அது பேரறிவாளன் ஆக இருந்தாலும் சரி, வேறு ஒரு ஆளாக இருந்தாலும் சரி கருணை அடிப்படையில் ஒரு அரசு நிலைப்பாடு. அவ்வளவுதான்.
இப்படிப்பட்ட சூழலில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர், கொலை கும்பலைச் சேர்ந்தவர் என்று சட்டத்தால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பேரறிவாளனை திமுகவினர் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவது மறுபடியும் கொள்ளிக்கட்டையை தலையில் தேய்த்துக் கொள்ளும் செயல் தான்.
இலங்கை இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாத துரோகி திமுக என்று சொல்லும் அதே வாய்கள் தான், மீண்டும் விடுதலைப் புலிகளை ஆதரித்து தமிழகத்தை நாசமாக்கப் போகிறது திமுக என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். தமிழகத்தில் ஒரு கும்பல் அதற்காகவே தாமரையைக் கையில் வைத்துக் கொண்டு காத்துக்கொண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று முதல்முறை ஆட்சி கலைக்கப்பட்டது. ராஜீவ் மரணத்திற்கு காரணம் திமுகதான் என்ற குற்றச்சாட்டில் இரண்டாம்முறை வெற்றிவாய்ப்பை இழந்தது. 2009 இறுதி யுத்தக் காலத்தில் விடுதலைப்புலிகளை திமுக ஆதரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் 2011ல் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. அவர்கள் உருவான காலம்முதல் பலன்களை எல்லாம் அனுபவித்தவர்கள் பலர். ஆனால் பழிகளை எல்லாம் சுமந்தது திமுக மட்டுமே. 1983ல் இலங்கையில் இனப்பிரச்சனை ஆரம்பித்த காலம் முதல் 2009 இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்ட காலம்வரை இலங்கைப் பிரச்சனையால் திமுக சுமந்த பழிகளுக்கு அளவேயில்லை. எந்த காலத்திலும் எந்த அளவிலும் பத்துப்பைசா பிரயோஜனம் இல்லாத விடுதலைப்புலிகள் விவகாரத்தை திமுகவினர் இனியாவது விட்டொழிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: