புதன், 9 மார்ச், 2022

உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர்: தவிக்கும் பெற்றோர்!

 மின்னம்பலம் : உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் கோவை மாணவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளதால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது 14வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியா வந்துள்ளனர்.
இதனிடையே ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்க்கஉக்ரைன் ராணுவத்தினருடன் இணைந்து பொதுமக்களும் போரிட வரவேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார். பொது மக்கள் கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் வழங்கப்பட்டன. அதுபோன்று ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட வெளிநாட்டுத் தன்னார்வலர்களுக்கும் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார்.


இந்த சூழலில் கோவை மாணவர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளார். கோவை சுப்ரமணியம்பாளையம் ஸ்வாதி கார்டனை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(52). பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜான்சி லட்சுமி. இந்த தம்பதியினரின் மூத்த மகன் சாய்நிகேஷ் (வயது 22), இளைய மகன் சாய்ரோஷித்.

கடந்த 2018-ம் ஆண்டு கோவை வித்யா விகாஷினி பள்ளியில் படிப்பை முடித்தார் சாய் நிகேஷ். அவருக்குச் சிறு வயதிலிருந்தே ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று கனவு இருந்துள்ளது. இதனால், இந்திய ராணுவத்தில் சேர முயற்சி செய்தார். ஆனால் உயரம் குறைவு காரணமாக, அது பலனளிக்காமல் போனது.

அதுபோன்று அமெரிக்க ராணுவத்தில் சேர சென்னை தூதரகத்தை அணுகினார். அதுவும் பலனளிக்கவில்லை. இதையடுத்து யுக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள தேசிய விண்வெளி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஏரோஸ்பேஸ் பொறியியல் படித்து வந்தார். இது சாய்நிகேஷுக்கு இறுதி ஆண்டு. 2022 ஜூலையில் படிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உக்ரைன் -ரஷ்யா இடையே போர் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் தன்னை உக்ரைன் ராணுவத்தில் இணைத்துக்கொண்டுள்ளார். போர் காரணமாக வீட்டுக்கு வந்துவிடு என்று பெற்றோர் அழைப்பு விடுத்த நிலையில், உக்ரைனில் உள்ள ஜார்ஜியா நேஷனல் லெஜியன் துணை ராணுவ பிரிவில் சேர்ந்துவிட்டதாகவும்,ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்தியாவிற்கு உடனடியாக திரும்புமாறு பெற்றோர்கள் வலியுறுத்தியும் அதனை சாய் நிகேஷ் கேட்கவில்லை என தெரிகிறது. எனவே அவரை இந்தியா அழைத்து வர இந்திய வெளியுறவுத் துறையிடம் பெற்றோர்கள் இ-மெயில் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச்சூழலில் கோவையில் உள்ள சாய்நிகேஷின் வீட்டுக்கு வந்த உளவுத் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சாய்நிகேஷ் குறித்த தகவல்களைச் சேகரித்த போது, அவரது அறையில் ராணுவ வீரர்களின் படங்கள் மற்றும் சுவரொட்டிகள் அதிகளவு இருந்தது தெரியவந்தது.

அதேபோல் துப்பாக்கிகள், குண்டுகள் குறித்து நிறைய ராணுவ ரீதியான விவரங்களை, புள்ளி விவரங்களைச் சேகரித்துச் சாய் நிகேஷ் படித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சாய்நிகேஷ் உறவினர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது, “உக்ரைன் சென்ற பிறகு ஒரு கேமிங் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருப்பதாக சாய்நிகேஷ் தெரிவித்தார். ஆனால் ராணுவத்தின் மீதான ஆர்வம் குறையாமல் இருந்துள்ளது. உளவுத்துறை தொடங்கிப் பாதுகாப்புத் துறையினர் வரை தொடர்ந்து அவரது குடும்பத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது அவரது குடும்பத்தினர் மன அழுத்தத்தில் உள்ளனர்” என்கிறார்கள்.

இந்நிலையில், சாய் நிகேஷை இந்தியா அழைத்து வருவது எப்படி எனவும், அவருடன் வேறு இந்தியர்கள் யாராவது இணைந்துள்ளார்களா எனவும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-பிரியா

கருத்துகள் இல்லை: