புதன், 9 மார்ச், 2022

கந்தாஹர் ஏர் இந்திய விமான கடத்தல் (1999-ம்) பாகிஸ்தான் பயங்கரவாதி கராச்சியில் சுட்டுக்கொலை..!

 தினத்தந்தி : 1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமாபாத்,  கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
170 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்ட விமானம் தலீபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்துக்கு சென்றது.
விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள் இந்திய ஜெயில்களில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.


அதனை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை ஒப்படைத்துவிட்டு, பயணிகளையும் விமான ஊழியர்களையும் மீட்டது.

இந்த நிலையில் நாட்டையே உலுக்கிய இந்த விமான கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஜாகூர் இப்ராஹிம் கடந்த 1-ந்தேதி பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் ஜாகூர் இப்ராஹிம் பர்னிச்சர் கடை நடத்தி வந்த நிலையில் கடந்த 1-ந்தேதி அவரது கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டு வீழத்திவிட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த ஜாகூர் இப்ராஹிம் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை எனவும், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருவதாகவும் கராச்சி நகர போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: