வியாழன், 10 மார்ச், 2022

Election Results 2022 Live 5 மாநில தேர்தல்:வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

 மின்னம்பலம் : உத்தரப் பிரதேசம் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
பஞ்சாப், கோவா உத்தரப் பிரதேசம், மணிப்பூர் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.
இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை தேர்தல் நடந்தது. இங்கு 60 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவித்தன. இங்கு ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், ராஷ்ட்ரிய லோக் தளம், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
பாஜக சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளராகவும் சமாஜ்வாதி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ் முதல்வர் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்பது தெரியவரும்.

வாக்கு எண்ணிக்கையையொட்டி வெற்றி ஊர்வலங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அங்கு உள்ள 75 மாவட்டங்களிலும் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 20 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக எதிர்க் கட்சியான சமாஜ்வாதி குற்றம்சாட்டியது.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளால் வாக்கு எண்ணிக்கை மையங்களை கண்காணிக்கக் கூடுதலாகச் சிறப்புத் தேர்தல் பார்வையாளர்கள் உத்தரபிரதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதுபோன்று 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு 65 சதவிகித வாக்குகள் பதிவாகின. உத்தரகாண்டில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இதனிடையே 35 இடங்களில் பாஜகவும் 32இடங்களில் காங்கிரசும் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. வெற்றிபெற ஏறக்குறைய 2,3 இடங்கள் மட்டுமே தேவைப்படுவதால் அங்கு யார் ஆட்சி அமைப்பது என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இங்கு சுமார் 76 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. இங்கு பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் கடந்த 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இங்கு 79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க முயன்று வரும் நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. 71.95 சதவிகித வாக்குகள் பதிவாகின. இங்குக் காங்கிரஸ், ஆம் ஆத்மி, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின், லோக் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியில் உள்ளன. கருத்துக்கணிப்பின் முடிவின்படி 63 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்.

இவ்வாறு பரபரப்பாக நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கருதப்படுவதால் ஒட்டுமொத்த இந்தியாவும் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறது

கருத்துகள் இல்லை: