சனி, 9 ஜனவரி, 2021

BBC :கன்னியாகுமரி கடற்கரை கடைகளில் பயங்கர தீ: 66 கடைகள் நாசம்

கன்னியாகுமரியில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து ஒன்றில் கடற்கரையில் அமைந்திருந்த 66 கடைகள் எரிந்து நாசமாயின. கன்னியாகுமரி கடற்கரையில் பகவதி அம்மன் கோவில் பகுதியில் நெருக்கமாக தகர ஷீட்கள், இரும்புக்கம்பி, மூலம் நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அலங்காரப் பொருள்கள், நறுமணப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், கைவினைப் பொருள்கள், துணி வகைகள் என பலவிதமான பொருள்களை விற்கும் கடைகள் அவை. சனிக்கிழமை அதிகாலை இங்கு தீப் பற்றி கடைகள் எரியத் தொடங்கின. தீயணைப்புப் படையினர் அங்கு உடனே விரைந்து வந்தனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் தீயை விரைவாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

சுமார் 3 மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ அணைக்கபட்டது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. கன்னியாகுமரி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி தீ விபத்து.

நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை இந்த விபத்து பற்றி பிபிசி தமிழிடம் கூறும்போது, "அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீ விபத்து பற்றி தகவல் கிடைத்தது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவண பாபு தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம்.

நாகர்கோவிலில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள், தக்கலை மற்றும் கன்னியாகுமரியில் இருந்து 3 வண்டிகள் என மொத்தம் 6 வண்டிகளுடன் 55 வீரர்கள் தீயை அணைக்கத் தொடங்கினோம். 'சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது'.

சிலிண்டர்கள் வெடிப்பு

66 கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. நேற்று இரவு வீசிய சூறைகாற்று காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வெடித்த சிலிண்டர்கள்

உணவகம் ஒன்றில் இருந்த 4 எரிவாயு சிலிண்டர்கள் இந்த விபத்தில் வெடித்து சிதறியது.

'இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை" என தெரிவித்தார்.

தீ விபத்தில் கடையை இழந்த பானு பிபிசி தமிழிடம் பேசுகையில்,

"சுற்றுலா பயணிகளுக்காக சங்கு, பொம்மை, பாசி, கிப்ட், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் சுமார் 100 கடைகள் இந்தப் பகுதியில் உள்ளன.

கொரோனா காரணமாக கடந்த ஓராண்டாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வுகள் வந்தபின் கடந்த மாதம் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியதால் கடைகளில் அதிக விற்பனை நடந்து கொண்டிருந்தது.

நேற்று இரவு கடைகளை அடைத்து வீட்டுக்குச் சென்ற பிறகு அதிகாலை விபத்து குறித்து தகவல் தெரிந்து வந்து பார்த்தபோது கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகி இருந்தன" என்றார்.

"இந்த தீ விபத்தால் என் கடைக்குள் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த பொம்மை, சங்கு, கிப்ட் பொருட்கள் என 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின'.

எனது கடையை போல் அனைத்து கடைகளிலும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டதன. இதனால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 'இந்த நஷ்டத்தில் இருந்து எப்படி மீளப் போகிறோம் என தெரிய வில்லை" என கண்ணீருடன் தெரிவித்தார் தீ விபத்தில் கடையை இழந்த பானு.

கருத்துகள் இல்லை: