வியாழன், 7 ஜனவரி, 2021

உருவாகிறாரா 'இளைய வீரபாண்டியார்?'... கண்ணீர் விட்ட மூதாட்டி... கவலை தீர்த்த டாக்டர் பிரபு வீரபாண்டி!

Image may contain: 1 person, standing and sitting
உண்மைத்தமிழன்: February 2011
nakkheeran.in - இளையராஜா : சேலம் மாவட்டத்தின் வளர்ச்சியில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு அளப்பரிய பங்கு உண்டு. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் வரும்போதெல்லாம், 'இது வீரபாண்டியார் மாவட்டம்' என்று புகழாரம் சூட்டவும் தவறுவதில்லை. ஆனால், அவருடைய மறைவுக்குப் பிறகு, வீரபாண்டி ராஜா பெரிதாக அரசியலில் சோபிக்கவில்லை. வீரபாண்டியார் உயிருடன் இருந்தபோதே ராஜாவை எம்.எல்.ஏ.வாக ஆக்கிவிட்டுப் போனாலும், அதை தொடர்ந்து முன்னெடுப்பதில் ராஜா சற்றே சறுக்கினார்.

 இந்த நிலையில்தான், சென்னையில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி லீலாவதி மூலம் பிறந்த டாக்டர் பிரபு, சேலத்திலேயே நிரந்தரமாக குடியேறினார். அத்துடன், வரும் சட்டமன்றத் தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடவும் தயாராகி வருகிறார். அதுவரை கட்சியில் சாதாரண உறுப்பினராக இருந்த அவரை, தி.மு.க. தலைமை திடீரென்று இரண்டு மாதங்களுக்கு முன் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமித்தது. 

 மாவட்ட அமைப்பாளர் நியமனத்தின்போது புதிய நிர்வாகி அறிமுகக் கூட்டம் நடத்தப்படுவது கட்சியில் வழக்கம் என்றாலும், கரோனா காரணமாக பிரபுவின் அறிமுகக் கூட்டம் நடத்தப்படவில்லை. பிரபு பார்த்தார்; அவரே சேலம் மத்திய மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், கிழக்கு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சிவலிங்கம், செல்வகணபதி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று வந்தார். 'சுறுசுறு'வென வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட 52 கிராம ஊராட்சிகளுக்கும் நேரில் சென்று நிர்வாகிகளைச் சந்தித்துவிட்டு வந்தார். 

 வீரபாண்டியாரின் மூத்த மகன் செழியன், இரண்டாவது மகன் ராஜாவைக் காட்டிலும் அவருடைய முகச்சாயல் டாக்டர் பிரபுவுக்கு அச்சர சுத்தமாக பொருந்திப் போவது இயல்பாகவே அவரை தொகுதி மக்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்க்க உதவியிருக்கிறது. இளைஞர் என்பதோடு, அனைவரிடமும் கண்ணியத்துடன் பழகும் பிரபுவின் அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசமானதுதான் என்கிறார், வீரபாண்டியார் குடும்பத்துக்கு எதிர் முகாமில் இருக்கும் ஒரு அரசியல் வி.ஐ.பி.

இது ஒருபுறம் இருக்க, கடந்த 24ஆம் தேதி, ஆரியகவுண்டம்பட்டியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த ராஜம்மாள் (60) என்ற மூதாட்டி, ''தன் வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 7 வருஷமாகியும், இதுவரை கிடைக்கவில்லை. யாருமே இல்லாத எனக்கு உதவி செய்ய முடியுமா தம்பி. உங்கப்பா இருந்திருந்தார்னா இந்நேரம் கரண்டு கிடைச்சிருக்கும். நீங்க எப்படியாச்சும் கரண்டு கொடுக்க ஏற்பாடு செய்யுங்க தம்பீ..'' என்று நா தழுதழுக்கச் சொன்னார்.

 “கண்டிப்பாக மின்சார இணைப்பு வாங்கித்தருகிறேன் அம்மா” என்று அந்தக் கூட்டத்திலேயே உறுதியளித்தார் பிரபு. அந்த மூதாட்டியும் விடுவதாக இல்லை. கூட்டம் முடிந்த கையோடு அவரை கையைப் பிடித்து தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று காட்டினார். சுவரில், சுருட்டப்பட்ட மின்வயர்கள் 7 ஆண்டுகளாக அப்படியே கிடந்தது. 

 Is 'Junior Veerapandiyar' emerging? Tearful old woman ... Dr. Prabhu solved the anxiety!

''இந்த ஊருல சத்துணவு பள்ளிக்கூடத்துல 37 வருஷம் சமைச்சுப் போட்டேன். குழந்தைங்க பள்ளிக்கூடத்துக்காக 7 வருஷம் சும்மாவே என் இடத்தைக் கொடுத்திருந்தேன் சாமீ. அப்படிலாம் இருந்த என் வூட்டுக்குக் கூட கரண்டு கொடுக்க மாட்டேங்கறாங்களே... நான் ஒத்த மனுஷி. எங்கிட்டு போயி... யாரை கேட்கறது...,'' என்ற மூதாட்டி, இந்தப் பக்கத்துல இருக்கற எல்லார் ஓட்டையும் உனக்கே போட்டுடறோம். எப்படியாவது கரண்டு வர வையுங்க தம்பீ...” என வெள்ளந்தி மனுஷியாய் கெஞ்சியவர் சடாரென்று காலில் விழப்போனார். தடுமாறிப்போன பிரபு, மூதாட்டி காலில் விழுவதற்குள் சட்டென்று அவரைத் தூக்கிவிட்டார். 

 மூதாட்டியின் கண்ணீர்க் குரல் என்னவோ செய்ய, அந்த இடத்திலேயே மின்வாரிய அதிகாரிகளை நேரில் தொடர்புகொண்டார். ஆரியகவுண்டம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் சுப்ரமணி, துணைத்தலைவர் அன்பழகன், கிளைச் செயலாளர் வெங்கடாசலம் ஆகியோரும் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுடன் களமிறங்கினர். அடுத்த 48 மணி நேரத்துக்குள் புதிதாக மின்கம்பம் நடப்பட்டது.

 மூதாட்டியின் பெயரில் பிரபுவே மின்வாரிய அலுவலகத்தில் புதிய மின் இணைப்புக்கான டெபாசிட் தொகை 2,800 ரூபாயைச் செலுத்தினார். வயரிங் வேலைகள் முடிந்து, புதிய டியூப் லைட் பொருத்தப்பட்டது. 31ஆம் தேதி, இருளடைந்து கிடந்த அந்த மூதாட்டியின் வீடுக்குள் ஒளி வெள்ளம் பாய்ச்சியிருக்கிறார்கள் வீரபாண்டி பிரபு தலைமையிலான திமுகவினர்.

 இந்நிலையில் 2ம் தேதி மூதாட்டி ராஜம்மாளின் வீட்டுக்கு நேரில் சென்றிருந்தார் பிரபு. இருண்ட வீட்டுக்கு ஒளி கிடைத்த மகிழ்ச்சியில் அவரை வரவேற்ற மூதாட்டி, வாஞ்சையுடன் ஆரத்தழுவி அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். 'உங்க அப்பாரைப் பார்த்தது போலவே இருக்கு சாமி... எப்பவும் எல்லாத்துலயும் ஜெயிக்கணும் சாமீ...' என்று ஆசிர்வதிக்க, மூதாட்டியின் வீடே அன்பு சூழ் உலகாகிப் போனது.

இது தொடர்பாக நாம் மூதாட்டி ராஜம்மாளிடம் கேட்டோம். “எங்க ஊருல கொஞ்ச பத்து நாளைக்கு முன்னாடி, திடீர்னு துணிப்பந்தலு போட்டுக்கிட்டு இருந்தாங்க. என்ன ஏதுனு விசாரிச்சப்ப, திமுக கிராம சபைக்கூட்டம் நடக்குதுன்னும், வீரபாண்டியாரு மகன் வர்ராருனும் சொன்னாங்க. நான் காட்டு வேலைக்குப் போகலாம்னு இருந்தேன். அந்த தம்பிதான், உன் வூட்டுக்கு கரண்டு வேணும்னா கூட்டத்துல வந்து புகார் மனு எழுதிக் கொடுன்னு சொன்னதுங்க. நானும் கூட்டத்துக்குப் போயி பிரபுகிட்ட சொன்னேங்க.

 எனக்கு புருஷனோ, புள்ளக்குட்டிகளோ கிடையாதுங்க. இதே ஊருலதான் பால்வாடியில 37 வருஷமா சமையல் வேலை செய்துகிட்டு இருந்தேன். பால்வாடி நடத்த இடம் இல்லைன்னு அரசாங்கம் சொன்னப்ப, இப்ப குடியிருக்கற என் வீட்டைத்தான் பால்வாடி நடத்திக்கொள்ள 7 வருஷம் முன்னாடி விட்டுக்கொடுத்தோம். இதெல்லாம் இந்த ஊர்க்காரங்களுக்கும் தெரியும். ஆனால் மின்வாரியத்துல போயி மின் இணைப்பு கேட்டா, எங்க வீட்டுக்கு மட்டும் கனெக்ஷன் கொடுக்க மாட்டேங்கறாங்க.

 

Is 'Junior Veerapandiyar' emerging? Tearful old woman ... Dr. Prabhu solved the anxiety!

 

இதையெல்லாம் பிரபு தம்பிக்கிட்ட சொன்னேன். அஞ்சே நாளுல என் வீட்டுக்கு வெளிச்சத்த கொடுத்துடுச்சு அந்த தம்பி. நான் செத்தாக்கூட இருட்டுலயேதான் செத்துப் போயிருப்பேன். பிரபு தம்பிதான் என் கண்ணுக்கு வெளிச்சத்த கொடுத்துருக்கு. அந்த தம்பீ... மவராசனா... நல்லா வளர்ச்சியா வரணுங்க..,'' என மகிழ்ச்சியில் கண்ணீர் உவக்கச் சொன்னார்.

 கிராமசபைக் கூட்டம் முதல் மூதாட்டியின் வீட்டிற்குப் புதிய மின் இணைப்பு கிடைத்தது வரை படிப்படியான ஒவ்வொரு நிகழ்வையும் பதிவுசெய்து வைத்திருந்தப் பிரபுவின் ஆதரவாளர்கள், அவற்றைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அடுத்த, 'சின்ன வீரபாண்டியார்' என்றும், 'இளைய வீரபாண்டியார்' என்றும் பிரபுவின் நடவடிக்கையை வாழ்த்தி பதிவிட்டுள்ள காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. 

 டாக்டர் பிரபுவாக இருந்தாலும், அவர் ‘இளைய வீரபாண்டியார்’ அல்லது ‘சின்ன வீரபாண்டியார்’ என எத்தனை நாமகரணம் எடுத்தாலும், விளிம்புநிலை மக்களுக்கு நன்மை கிடைத்தால் சரிதான்

கருத்துகள் இல்லை: