செவ்வாய், 5 ஜனவரி, 2021

ஜூலியன் அசாஜ்சே வை நாடுகடத்த முடியாது! பிரித்தானிய நீதிமன்று அதிரடித்தீர்ப்பு!

ilankainet.com :

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும் பத்திரிகையாளருமான ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது மீது பிரிட்டன் நீதிமன்றங்கள் ஜனவரி 4 திங்கட்கிழமை முடிவு செய்யும். அவர் போர் குற்றங்கள் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள், சித்திரவதை மற்றும் ஏனைய மனித உரிமை துஷ்பிரயோகங்கள், அரசு ஊழல் மற்றும் உளவுபார்ப்பை அம்பலப்படுத்தியதற்காக தேசதுரோக சட்டத்தின் கீழ் அமையும் குற்றச்சாட்டுக்களுக்காக ஆயுள் தண்டனையை முகங்கொடுக்கிறார்.

நாடு கடத்துவதற்கான முடிவு ஏறத்தாழ முழுமையாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த விசாரணையானது, அசான்ஜின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்கிய ஒரு போலியான சட்ட கேலிக்கூத்தாக உள்ளது. இதன் தலைமையிலுள்ள மாவட்ட நீதிபதி வனசா பரைட்சர் இந்த வழக்கு விசாரணை நெடுகிலும் அசான்ஜைக் கண்கூடாகவே விரோதமாக கையாண்டுள்ளார். அப்பெண்மணியின் மேலதிகாரி, Lady Emma Arbuthnot, விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்களில் தனிப்பட்டரீதியில் பெயரிடப்பட்ட ஓர் அரசு பிரமுகருடன் திருமணம் ஆனவர்.



தீர்ப்பு எவ்விதத்தில் இருந்தாலும் அது ஒரு மேல்முறையீட்டைச் சந்திக்கும் என்பதால், அது இன்னும் மாதங்களுக்கோ அல்லது ஆண்டுகளுக்கோ கூட அதிக சட்டரீதியான மோதல்களுக்கு இட்டுச் செல்லும். இதற்கிடையே, அவருக்கு உயிராபத்தான அபாயத்துடன் இலண்டனின் உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையான பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்படுவார்.

எவ்வாறிருப்பினும், இருபத்தோராம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர் மீதான தசாப்த காலம் நீண்ட இந்த வழக்கு விசாரணையில் இந்த திங்கட்கிழமை விசாரணை ஒரு புதிய முக்கிய கட்டத்தைக் குறிக்கிறது.

அசான்ஜின் சட்டக் குழுவினர் அமெரிக்க அரசால் அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஜோடிப்புகளைச் சின்னாபின்னமாக கிழித்தெறிந்துள்ளனர். அமெரிக்க நீதித்துறை நல்லெண்ண அடிப்படையில் வழக்கை நடத்தவில்லை என்பதோடு, ஆங்கிலோ-அமெரிக்க உடன்படிக்கையின் கீழ் அரசியல் குற்றத்திற்காக கைதிகளை நாடு மாற்றி கொடுக்கும் நடைமுறைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள போதினும் அவர்கள் அரசியல் குற்றத்திற்காக நாடு கடத்த முயன்று வருகிறார்கள் என்ற இந்த வழக்கின் உண்மைகளை அமெரிக்க வழக்குதொடுநர்கள் அடிப்படையிலேயே தவறாக பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதை அசான்ஜின் சட்டக் குழுவினர் எடுத்துக்காட்டி உள்ளனர்.

யாரேனும் ஒருவர் “அவரின் அரசியல் கருத்துக்களுக்காக" தண்டிக்கப்படும், அல்லது அத்தகைய கருத்துக்களின் காரணமாக சட்ட விசாரணைகளின் போது அவருக்கு எதிராக ஒருதலைபட்சமாக நடத்தப்படும், அல்லது மருத்துவ காரணங்களின் அடிப்படையில் "அநீதியான மற்றும் ஒடுக்குமுறையான" நாடு கடத்தப்படும், அபாயத்தில் உள்ள எவரொருவரையும் நாடுகடத்துவதற்கு எதிரான சட்டமுறை கட்டுப்பாடுகளை அந்த முறையீடு எவ்வாறு உடைக்கிறது என்பதை அவர்கள் எடுத்துக்காட்டி உள்ளனர். நாடு கடத்துவதற்கான இந்த கோரிக்கையானது மனித உரிமைகளுக்கான, பேச்சு சுதந்திர உரிமைக்கான ஐரோப்பிய சாசனத்தின் ஷரத்து 10 ஐ மீறவும்; முன்கூட்டியே குற்றகரமாக்குவதற்கு எதிரான உரிமை, ஷரத்து 7 ஐ மீறவும்; ஒரு நியாயமான விசாரணைக்கான உரிமை, ஷரத்து 6 ஐ மீறவும்; மனிதாபிமானமற்ற நடைமுறைக்கு எதிரான அல்லது கையாளும் முறை அல்லது தண்டனையைக் குறைப்பதற்கான உரிமை, ஷரத்து 3 ஐ மீறவும் அச்சுறுத்துகிறது.

வழக்கு நடத்துபவர்களின் வாதங்களை இவ்வாறு தகர்ப்பது அசான்ஜைப் பழியுணர்ச்சியுடன் கையாள்வதற்குப் பின்னால் இருக்கும் சமூக நலன்களை அப்பட்டமாக உரித்துக் காட்டுகின்றன. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு அரசுகள் அவற்றின் சூறையாடும் ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பாக, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பை மிரட்டுவதற்காக அவை அசான்ஜை ஒரு முன்னுதாரணமாக்கி வருகின்றன. அவரை நாடு கடத்துவதற்கான விசாரணை என்பது ஒரு வர்க்க போர் கைதி மீது முன்தீர்மானிக்கப்பட்ட முடிவை வழங்குவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கண்துடைப்பு விசாரணையாகும்.

இந்த சமூக சக்திகள், விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் விடுதலைக்கான ஓர் உலகளாவிய பாரிய இயக்கம் குறித்த அச்சம் இருந்தாலும், அவை நினைத்ததை முடிக்கும் வரையில் எதையும் விட்டுக்கொடுக்காது.

மக்களிடையே அசான்ஜிற்கான ஆதரவு அடித்தளம் உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரிட்டன் உட்பட அதன் கூட்டாளிகளின் கொடூரமான நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு அடியை வழங்கியதற்காக மில்லியன் கணக்கானவர்கள் விக்கிலீக்ஸைக் கொண்டாடுகிறார்கள். அசான்ஜ் மீதான வழக்கும் கூட பத்திரிகையியல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கூடுதல் தாக்குதலுக்கான ஒரு முன்மாதிரியை அமைக்கிறது என்றே புரிந்து கொள்ளப்படுகிறது.

அசான்ஜின் விடுதலை கோரும் ஒரு பகிரங்க கடிதத்தில் 99 நாடுகளைச் சேர்ந்த 1,600க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கடிதம் டிசம்பர் 2019 இல் வெளியிடப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, அசான்ஜிற்கான மருத்துவர் குழு என்பது ஸ்தாபிக்கப்பட்டு, அது அசான்ஜை தவறாக கையாள்வதன் மீது கோபம் கொண்ட மருத்துவ தொழில் வல்லுனர்களை ஒன்றிணைத்துக் கொண்டு வந்தது. அசான்ஜின் வழக்கறிஞர்கள் மற்றும் அசான்ஜிற்கான கலைஞர்கள் குழுவும் இந்தாண்டு தொடக்கத்தில் தொடங்கப்பட்டது.

ஆனால் அசான்ஜின் விடுதலையைப் பெறுவதற்கும் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தகைமை கொண்ட சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கம், அவர் ஆதரவுக்காக இன்னும் ஒழுங்கமைக்கப்படாமலேயே உள்ளது.

தொழிலாள வர்க்கத்தில் அவசியமான பிரச்சாரத்தைக் கட்டமைப்பதற்கு, அசான்ஜைத் தனிமைப்படுத்த வேலை செய்துள்ள சக்திகளுடன் அரசியல்ரீதியில் கணக்குத் தீர்க்க வேண்டியுள்ளது. குட்டி முதலாளித்துவ "தாராளவாத" சகோதரத்துவத்தின் ஊடகங்கள் மற்றும் உள்நாட்டு உரிமைகளுக்கான அமைப்புகள், போலி இடது, தொழிற்சங்கம் மற்றும் தொழிற்கட்சி அதிகாரத்துவம் ஆகியவை இதில் உள்ளடங்கும்.

விக்கிலீக்ஸ் அதன் ஆரம்ப ஆண்டுகளில், அதன் வெளியீடுகளைப் பிரசுரிக்க கார்டியன், நியூ யோர்க் டைம்ஸ், லு மொன்ட், டெர் ஸ்பீகல் மற்றும் எல் பையஸ் போன்ற பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளுடன் இணைந்து செயலாற்றியது. ஆரம்பத்திலிருந்தே இந்த அமைப்புகள், அந்த பாதையிலிருந்த பரபரப்பூட்டும் செய்திகளிலிருந்து இலாபமீட்டிய அதேவேளையில், முன்னுதாரணமற்ற அந்த அம்பலப்படுத்தல்களில் இருந்த அரசியல் துணைவிளைவுகளைக் கட்டுப்படுத்த முயன்றன.

தெரிந்து கொள்வதற்கான பொதுமக்களின் உரிமையிலிருந்து அசான்ஜ் பின்வாங்க மறுத்து ஆளும் வர்க்கங்களுடன் முறையே அவற்றுக்கு இருந்த சௌகரியமான உறவுகளை நிலைகுலைக்க அச்சுறுத்திய போது, அவை அவரின் முதுகில் குத்தின. விக்கிலீக்ஸின் முன்னாள் "ஊடக பங்காளிகள்" அசான்ஜை தீயவராக காட்ட ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தைத் தொடங்கியதுடன், இட்டுக்கட்டுப்பட்ட சுவீடன் பாலியல் தாக்குதல் விசாரணையையும், ரஷ்ய அரசுடன் நயவஞ்சகமான கூட்டு இருப்பதாக ஜோடிக்கப்பட்ட கட்டுக்கதைகளையும் ஊக்குவித்தன.

பிரிட்டனில் சோசலிச தொழிலாளர்கள் கட்சி மற்றும் அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற போலி-இடது அமைப்புகள் "மனித உரிமைகள்" என்ற மோசடியான பதாகையின் கீழ் ஏகாதிபத்திய தலையீடுகளை ஆதரித்த நிலையில், அவை விக்கிலீக்ஸ் வெளியீடுகளால் அச்சுறுத்தப்பட்டதால், அவையும் அந்த சிலுவைப்போரில் இணைந்தன. அடையாள அரசியலில் மூழ்கிய அவற்றின் செல்வசெழிப்பான நடுத்தர வர்க்க அரசியல் வட்டம், பாலியல் தாக்குதல் குறித்த சுவீடனின் இட்டுக்கட்டுப்பட்ட ஜோடனைகளை ஆதரிப்பதில் மட்டுமே மிகவும் ஆனந்தமடைந்தது.

தொழிற் கட்சி "இடதும்" மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் நெடுகிலும் வாய்மூடி உடந்தையாய் இருந்தன. ஏப்ரல் 2019 இல் தான் அப்போதைய தொழிற் கட்சி தலைவர் ஜேர்மி கோர்பின் அமெரிக்காவிடம் அசான்ஜை ஒப்படைப்பதைப் பகிரங்கமாக எதிர்த்தார், அதுவும் அசான்ஜின் தலைவிதி "நீதிமன்றங்களின் வசமுள்ளது" என்றவர் அறிவிப்பதற்கு வெறும் 48 நேரத்திற்கும் குறைந்த நேரத்திற்கு முன்னர் தான் அதை செய்திருந்தார். டிசம்பர் 2019 பொது தேர்தல் நெடுகிலும் அசான்ஜின் வழக்கு மீது கோர்பின் மவுனம் காத்தார். தொழிற் கட்சி தலைவர் பதவியிலிருந்து அவர் பிரதியீடு செய்யப்படும் வரையில், அவர் அசான்ஜை நாடு கடத்துவதைத் தடுக்க பிரிட்டிஷ் நீதித்துறை மற்றும் பிரதம மந்திரி போரீஸ் ஜோன்சனுக்குத் தான் அவ்வபோது அழைப்புவிடுத்துள்ளார்.

அசான்ஜின் விடுதலைக்கான அதன் பிரச்சாரத்தை நடத்துகையில், சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் இந்த அபிவிருத்திகளை முதலாளித்துவ அரசியல் —அதன் போலி-இடது எடுபிடிகள் உள்ளடங்கலாக— வலதுக்குச் சாய்வதன் பாகமாகவும், ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு அணியிலும் ஜனநாயக உரிமைகளுக்காக எந்த அரசியல் வட்டாரமும் இல்லை என்ற உண்மைக்கு நிரூபணமாகவும் அடையாளங்கண்டன. அசான்ஜைக் காப்பாற்றுவதற்கான போராட்டமானது அவரை இன்னல்படுத்துவதில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குச் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எச்சரிக்கைப்படுத்தி, சர்வாதிகாரம் மற்றும் போரை நோக்கிய உலகளாவிய திருப்பத்திற்கு எதிரான எதிர்ப்பில் அவர்களை ஒழுங்கமைப்பதற்கான ஓர் அரசியல் போராட்டத்தைச் சார்ந்திருப்பதை நாம் வலியுறுத்தினோம்.

2019 இன் இறுதியில் உருவாக்கப்பட்ட அசான்ஜை நாடு கடத்தாதே (Don’t Extradite Assange -DEA) என்ற உத்தியோகபூர்வ பிரச்சாரக் குழு அந்த தீர்மானங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் மற்றும் முதலாளித்துவ அரசை நோக்கிய ஒரு திவாலான நோக்குநிலையை அமலாக்கவும் தலையீடு செய்துள்ளது. இது, அசான்ஜை விடுவிக்க "இடதும்" “வலதும்" ஒருங்கிணைய வேண்டும் என்ற அதன் அழைப்பில் மையமிட்டுள்ளது.

இது ஆரம்பத்தில் ஒருசில தொழிற்கட்சி "இடதுகளின்" சம்பிரதாயமான போராட்டங்களையும் எரிச்சலூட்டும் விதத்தில் காலங்கடந்த கார்டியனின் அனுதாபங்களையும் ஊக்குவிக்கும் வடிவத்தை எடுத்தது—கார்டியன் இப்போது இந்த பிரச்சினையில் எந்தளவுக்கு அம்பலப்பட்டு உள்ளது என்றால், அது சமீபத்தில் அசான்ஜை நாடு கடத்துவதை எதிர்த்தும், அசான்ஜ் மறுத்துள்ள கற்பழிப்பு குற்றச்சாட்டு மீதான விசாரணையை சுவீடன் கைவிட்டுள்ளது என்பதால் “இந்த பிரச்சினையைக் குழப்புவதற்கு திரு. அசான்ஜ் சம்பந்தப்பட்ட முந்தைய வழக்குகளைப் பயன்படுத்தக் கூடாது[!]” என்று வலியுறுத்தியும் ஒரு தலையங்கத்தை அது பிரசுரித்தது. அசான்ஜை "அதிநவீன தொழில்நுட்ப பயங்கரவாதி" என்று அவமானகரமாக முத்திரை குத்திய, ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ-பைடென் மீது கார்டியன் நம்பிக்கை வைக்கிறது.

சமீபத்திய வாரங்களில் DEA அரசியலின் பிற்போக்குத்தனமான தர்க்கம் வெறுப்பூட்டும் அளவிலான தீர்மானத்தை எட்டியுள்ளது—அதாவது அசான்ஜிற்கு விடுதலை வழங்க அது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு நட்புரீதியான முறையீடுகளைச் செய்கிறது. சமீபத்திய வாரங்களில் ஜனாதிபதி பல பொதுமன்னிப்புகளை வழங்கியுள்ளதால், “ஜனாதிபதி ட்ரம்ப்: அசான்ஜை மன்னியுங்கள்!” என்ற மனுவை முன்னெடுக்க DEA ஐ தூண்டியுள்ளது. நவ-பாசிசவாதி Cassandra Fairbanks, கிறிஸ்துவ அடிப்படைவாதியும் முன்னாள் துணை ஜனாதிபதி வேட்பாளருமான சாராஹ் பாலின், QAnon ஐ பரப்பும் பாடகியான குடியரசுக் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சபை பெண் டெய்லர் க்ரீன் மற்றும் வலதுசாரி ஆத்திரமூட்டுனரும் ப்ரைய்ட்பார்ட் பங்களிப்பாளருமான James O’Keefe, மற்றும் இவர்களைப் போன்ற ஏனைய வெறுப்பூட்டும் பிரமுகர்களும் DEA இன் ட்வீட்டர் பதிவுகளில் இடம் பெற்றுள்ளனர்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கோருவது நியாயமானது தான் — அசான்ஜ் அதற்கும் அதற்கு மேலாகவும் தகுதி உடையவர் தான். ஆனால் ஜனநாயக உரிமைகளுக்கான விடயத்தை முன்னெடுக்கும் ட்ரம்புக்கான ஒரு கோரிக்கையானது, திட்டவட்டமாக ட்ரம்புக்கு எதிராகவும், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு எதிராகவும் நிற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக ஒரு கோரிக்கை வடிவத்தை மட்டுமே எடுக்க முடியும்.

ஆனால் DEA முன்னெடுத்து வரும் அழைப்பு வெள்ளை மாளிகையில் உள்ள பாசிசவாத கொடுங்கோலர் மற்றும் அவரின் பரிவாரங்களிடையே இல்லாத ஜனநாயக உணர்வுகளுக்கு ஒரு முறையீடாக முன்வைக்கப்படுகிறது. அந்த மனு, ஓர் உரையின் ஒரு துணுக்குடன் ட்ரம்ப் சித்திரத்துடன் முன்னிலைப்படுத்தப்படுகிறது, அதாவது, “முதல் அரசியலமைப்பு சாசனம் நம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும். நமக்கு பத்திரிகை சுதந்திரமும் சுதந்திரமான கருத்து பரிவர்த்தனையும் வேண்டும். ஊடகங்களும் குடிமக்களும் விமர்சிப்பதில் சுதந்திரமாக இருக்க வேண்டும்,” என்று அது குறிப்பிடுகிறது.

இது, அசான்ஜூம் விக்கிலீக்ஸூம் எதை மிகப் பெரியளவில் அம்பலப்படுத்தினார்களோ அந்த படுமோசமான கொடூர போர் குற்றங்களில் ஒன்றான, 2007 இல் 14 ஈராக்கிய குடிமக்களை நிசௌர் சதுக்கத்தில் படுகொலை செய்ததற்குப் பொறுப்பான பிளாக்வாட்டர் கூலிப்படை குழுவின் உறுப்பினர்களுக்கு ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கிய அதே மாதத்தில் வருகிறது. இதேபோல இந்த ஜனாதிபதிக்கு முறையிடுபவர்கள் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்காக நடந்து வரும் அவரின் திட்டங்களையும் புறக்கணிக்கிறார்கள், ஈரானுடன் பேரழிவுகரமான இராணுவ மோதலைத் தொடங்கும் சாக்குப்போக்கின் கீழ் அவர் இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தக்கூடும் என்ற கவலைகளும் அதில் உள்ளடங்கும்.

முதலாளித்துவ அரசு மற்றும் அதன் பிரதிநிதிகளை அடிப்படையாக கொண்டு, அசான்ஜின் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக பாதுகாப்புக்கான எந்தவொரு முன்னோக்கும் திவாலானது என்பதையே ட்ரம்பை நோக்கிய நோக்குநிலையின் சாத்தியமானளவுக்கு மிகத்தெளிவான ஆதாரமாகும். ஈராக் மற்றும் ஆப்கான் போர் ஆவணங்கள், குவாண்டனாமோ கோப்புகள் மற்றும் அமெரிக்க இராஜாங்க ஆவணங்களை விக்கிலீக்ஸ் பிரசுரித்ததற்குப் பின்னர், அசான்ஜின் தலைவிதியானது ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிரான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. அந்த போராட்டமானது, சர்வதேச தொழிலாள வர்கத்தின் ஒரு பாரிய சோசலிச, ஏகாதிபத்திய-விரோத இயக்கத்தைக் கட்டமைக்க கோருகிறது. இந்த முன்னோக்குடன் உடன்படும் அனைவரும் இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

கருத்துகள் இல்லை: