தற்போது பெண்களின் திருமண வயது 18 ஆகவும் ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உள்ள நிலையில், “பெண்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில், அவர்களின் திருமண வயதை 21 ஆக மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் மத்திய அரசு ஒரு முடிவை எடுக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் இந்த முடிவு பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களின், உயர் கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையில் வாய்ப்புகளை உயர்த்தவும், தாய்வழி இறப்பு விகிதத்தை குறைக்கவும், பெண்களுக்கு ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு வரவேற்பு தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “இந்தியப் பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆனால், அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. பக்குவமற்ற வயதில் வரும் காதலும், திருமணமும் தான் பெரும்பான்மையான பெண்களின் சாதனைகளுக்கு தடையாக உள்ளன” எனக் கூறினார்.
பெண்கள் சாதிப்பதற்கு வறுமையை விட பெரும் சுமையாக இருப்பவை இந்த இரண்டும் தான். அந்தத் தடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும், பெண்கள் கல்வியிலும், பிற துறைகளிலும் சாதனை படைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்காக வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பெற்று பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மக்களவை திமுக துணைத் தலைவர் கனிமொழி, “பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.இந்த நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்” என்ற கூடுதல் கோரிக்கையை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளார்.
உலக நாடுகளில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது
சவுதி அரேபியா, ஏமன் ஆகிய நாடுகளில் பெண்களின் இந்த குறைந்தபட்ச திருமண வயது 14 வயதுக்கும் குறைவாக உள்ளது. குவைத் ஆகிய நாடுகளில் 15ஆகவும், ஆப்கானிஸ்தான், பக்ரைன், பாகிஸ்தான், கத்தார், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 17ஆகவும், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, நார்வே, ரஷ்யா, சவுத் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய 143 நாடுகளில் 18ஆகவும், அல்ஜீரியா, சவுத் கொரியா ஆகிய நாடுகளில் 19ஆகவும், சீனா, ஜப்பான், நேபால், தாய்லாந்து ஆகிய நாடுகளில் 20ஆகவும், இந்தோனேஷியா, மலேசியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் 21ஆகவும் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் திருமணம்
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தன்னார்வ அமைப்பான யங் லைவ்ஸின் ஆய்வு தகவல், 15 -19 வயதிற்குட்பட்ட குழந்தைகள் திருமணம், 2005-06 ஆம் ஆண்டில் 26.5 சதவிகிதத்திலிருந்து, 2015-16 ஆம் ஆண்டில் 11.9ஆக குறைந்திருப்பதாக காட்டுகிறது. 15 முதல் 19 வயது வரையிலான திருமணமான சிறுமிகளில் 31.5 சதவிகித சிறுமிகளுக்கு குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. 15 முதல் 16 வயதுக்குட்பட்ட திருமணமான சிறுமிகளில் கிட்டத்தட்ட கால் பகுதியினருக்கு குறைந்தபட்சம் ஒரு குழந்தையாவது உள்ளது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. தற்போது திருமண வயது அதிகரிப்படும் பட்சத்தில் குழந்தைகள் திருமணம் மேலும் குறையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
கவி, எழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக