செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

மத்திய பிரதேசம்: "மண்ணின் மக்களுக்கே அரசு வேலை" - முதல்வர் சிவராஜ் சிங் செளஹான்.. வீடியோ

BBC : மத்திய பிரதேச மக்களுக்கு மட்டுமே மாநில அரசு பணிகள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக காணொளி வெளியிட்டுள்ள சிவராஜ் செளஹான், "மத்திய பிரதேச அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மத்திய பிரதேச அரசு பணிகள் அம்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்யும் ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வர உள்ளோம்.        மத்திய பிரதேச வளம், மத்திய பிரதேச குழந்தைகளுக்கே," என அவர் கூறி உள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் தொழிற்சாலை அல்லது நிறுவனங்கள் உள்பட அனைத்து வகை தொழிற்துறை வேலைவாய்ப்பிலும் 75%, உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் மசோதா ஆந்திர பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.>மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாகவுள்ள 27 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, அம்மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, கடந்த மார்ச் மாதம் பெரும்பான்மை பலத்தை இழந்ததால் கவிழந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த கமல்நாத், ஏற்கெனவே மாநிலத்தில் உள்ள மண்ணின் மைந்தர்களுக்கு மாநில தொழிற்துறை அலுவல வேலைவாய்ப்பில் 70% இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுத்து வந்ததாக குறிப்பிட்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தபோது எவ்வளவு வேலைவாய்ப்புகளை பாரதிய ஜனதா கட்சி உருவாக்கிக் கொடுத்தது என்றும் கமல்நாத் கேள்வி எழுப்பினார்.

கமல்நாத் பதவிக்காலத்தில் வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு இடஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தேர்தல் தந்திரம் என்று அப்போது எதிர்கட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி விமர்சித்தது.

இந்த நிலையில், மத்திய பிரதேச முதலமைச்சரின் அறிவிப்பு, பரவலான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

   காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, ஜம்மு, காஷ்ரமீர் மற்றும் லடாக்கில் மட்டும் எல்லோருக்கும் வேலை, ஆனால், மத்திய பிரதேசத்தில் மட்டும் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வேலை. இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்று தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: