சனி, 22 ஆகஸ்ட், 2020

இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்: மத்திய அமைச்சக செயலாளர்! வீடியோ

மின்னம்பலம் : மத்திய ஆயுர்வேத அமைச்சகமான ஆயுஷ் துறையின் காணொலி கூட்டத்தில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.>

யோகா மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுக்கான காணொலி பயிலரங்கு இந்த வாரத்தின் துவக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆகஸ்டு 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் நடந்த பயிலரங்கில் நாடு முழுவதிலும் இருந்தும் பலர் வந்திருக்க தமிழகத்தில் இருந்து மட்டும் 37 யோகா, ஊட்டசத்து பயிற்றுனர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முழுக்க முழுக்க இந்தி மொழியே பயன்படுத்தப்பட்டது.    பயிலரங்கின் இறுதி நாளான வியாழக் கிழமை ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொட்டேகா, “நான் முழுவதும் இந்தியில்தான் பேசப் போகிறேன். எனக்கு சரளமாக ஆங்கிலம் பேச வராது. எனவே ஆங்கிலத்தில் பேச்சை எதிர்பார்ப்பவர்கள் இங்கிருந்து சென்றுவிடலாம்” என்று கூறியதும் இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து சென்ற யோகா பயிற்றுநர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே பயிலரங்கு இந்தியிலேயே நடந்ததால் தங்களுக்கு புரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தவர்கள் அமைச்சக செயலாளரே இப்படி கூறியதும் மேலும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.   

இந்திய மருத்துவத்துக்கான தமிழ்நாடு இயக்குனரகம் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இந்த பயிலரங்குக்காக பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்து அனுப்பியது.

“இந்தப் பயிலரங்கின் நோக்கம் சரியானது. ஆனால் அணுகுமுறை மிகவும் தவறானது. இது தேசிய அளவிலான நிகழ்ச்சி என்றாலும் முழுக்க இந்தியில் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு புரியவில்லை. 

நாங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு இது தொடர்பாக சேட் பாக்சில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தோம். இந்தி அல்லாத மொழி பேசும் மாநிலங்களில் இருந்து நிறைய பேர் வந்திருக்கிறோம். அதனால் ஆங்கிலத்தில் உரையாடுங்கள் என்று. ஆனால் அவர்களோ இந்திதான் தங்களுக்கு சரளமாக வரும் என்று சொல்லி எங்கள் கோரிக்கையை நிராகரித்தார்கள்” என்கிறார்கள் தமிழகத்தில் இருந்து பங்கேற்றவர்கள்.

ஆயுஷ் துறை செயலாளர் கொட்டேகா தி இந்துவிடம் இதுகுறித்து, “என்னுடைய பத்து நிமிட ஆரம்ப உரையில் ஹிந்தியில் பேசத் தொடங்கினேன். அதன் பின் இந்தி ஆங்கிலம் இரண்டிலும் பேசுவதாகவே சொன்னேன். ஆனால் அதற்குள் சிலர் சத்தம் போட்டு பிரச்சினை செய்துவிட்டனர்” என்கிறார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: