நாடு விடுதலையடைந்தபின் பல நாடுகளின் உதவியோடு இந்தியாவில் உருவாக்கப்பட்ட, இந்தியாவை பின்னாளில் பெரும் பொருளாதார சக்தியாக உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் அக்கு அக்காக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றனவே அதைக் கொண்டாடவா ? ஒரு நாளில் இரு நாடுகள் உருவாகும் நேரத்தில், ஒரு நாடு மதத்தின் அடிப்படையில் உருவானபோது, இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தது. அந்த முடிவு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு, இந்தியாவும் மதவெறி நாடாக மாறியதை கொண்டாடவா ?
பாகிஸ்தான் உருவானபோது, காந்தியின் இந்தியாவில் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று நம்பி, இந்தியாவை தன் தாய்நாடாக தேர்ந்தெடுத்த இஸ்லாமியன் இன்று ஒடுக்கப்பட்டு, இஸ்லாமியன் என்ற தனது அடையாளத்தின் காரணமாகவே இந்தியாவில் இரண்டாம்தர குடிமகனாக மாற்றப்பட்டதை கொண்டாடவா ?
விருப்பமான உணவு, விருப்பமான மதம், விருப்பமான மொழி, மதமே வேண்டாம் என்ற உரிமை என்பதை உறுதி செய்த சுதந்திரம் பாசிச சக்திகளால் பறிக்கப்படுவதை கொண்டாடவா ?
உலகெங்கிலும் மனிதகுலத்தால் விரும்பி உண்ணப்படும் மாட்டுக்கறியை உண்பதற்காக அடித்துக் கொலைசெய்யப்படும் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்களின் மரணத்தை கொண்டாடவா ?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை கைதூக்கிவிடுவதற்காக கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு திட்டத்தையே செல்லரித்துப்போகச் செய்ய பார்ப்பனீய சக்திகள் செய்து வரும் முயற்சிகளை கொண்டாடவா ?
மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளுக்கு நீதி இல்லாத நிலையில், அந்த கொலைகளை கொண்டாடி, ஊக்குவிக்கும் ஆளும்வர்க்கத்தை கொண்டாடவா ?
500 வருடங்களாக இருந்த ஒரு மசூதியை கடவுளின் பெயரால் இடித்த காவிக்கூட்டத்தின் வெற்றியை கொண்டாடவா ?
அல்லது அந்த கடவுளின் பெயரைச் சொல்லி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்ததை கொண்டாடவா ?
இந்தியாவின் கோவில்களாக உருவாக்கப்பட்ட அருமையான பல்கலைக்கழகங்கள் சிதைக்கப்பட்டு காவிக் கூடாரமாவதை கொண்டாடவா ? அறிவையும், அறிவியலையும் வளர்த்த அக்கோவில்களில், மூடநம்பிக்கையும், பொய்யும் புரட்டும் பயிற்றுவிக்கப்படுவதை கொண்டாடவா ?
சுதந்திர வேள்வியில் முக்கிய பங்கு வகித்து, ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஊடகங்கள் இன்று காவிச்சாயம் பூசிக்கொண்டு ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாக மாறியதை கொண்டாடவா ?
நெருக்கடி நிலையில் கூட முதுகெலும்போடு இருந்த ஊடகங்கள் இன்று ஆளும் வர்க்கத்தின் காலை நக்குவதை கொண்டாடவா ?
ஊடகம் என்பது முழு வணிகமாக மாறி, பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிப்போனதை கொண்டாடவா ? இல்லை அவை பொய்களையும் கட்டுக்கதைகளையும் பரப்பும் கருவியாக மாறிப்போனதை கொண்டாடவா ?
உலகமே வியக்கும் வகையில் பல விவாதங்களுக்கு பிறகு உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் செல்லரித்து சிதிலமாக்கப்படுவதை கொண்டாடவா ?
அந்த அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் நீதித்துறை உதவியோடு பறிக்கப்படுவதை கொண்டாடவா ? அல்லது அந்த உரிமைகள் பார்ப்பன சமூகத்துக்கு மட்டுமே என மாற்றப்படுவதை கொண்டாடவா ?
அரசியல் அமைப்புச் சட்டம் வளைக்கப்படும்போதெல்லாம் தலையிட்டு வளைப்பவர்களை கேள்வி கேட்டு, அச்சட்டத்தை மேலும் செழுமையாக்கி வந்த உச்சநீதிமன்றம் தனக்குத்தானே காவிச்சாயம் பூசிக்கொண்டதை கொண்டாடவா ?
அரசியல் அமைப்புச் சட்டத்தை உயிரினும் மேலாக நினைத்து அதை காக்க வேண்டிய நீதிபதிகள், சனாதன சக்திகளின் பிரதிநிதியாக மாறியதை கொண்டாடவா ?
சட்ட அறிவும், செழுமையான அனுபவமும் கொண்டவர்கள் நீதிபதிகளாகிய ஒரு நாட்டில், காவிக்கொள்கையின் மீதான பிடிப்பு மட்டுமே நீதிபதியாவதற்கான தகுதியாக மாறியதை கொண்டாடவா ?
தன்மீதான பாலியல் புகாரை தானே விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை கொண்டாடவா ? அல்லது அந்தப் புகாரில் இருந்து தன்னை காப்பாற்றிய சக்திகளின் குரலாக தீர்ப்பெழுதியதை கொண்டாடவா ?
மனித உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று நீதிவேண்டி சென்றால், அதை குப்பையில் போட்டுவிட்டு, குழந்தை ராமர் கோரிக்கையை நிறைவேற்றும் உச்சநீதிமன்றத்தை கொண்டாடுவதா ?
எதிர்ப்புக் குரல்கள் மழுங்கடிக்கப்பட்டு முடக்கப்பட்ட நிலையில் எழும் ஒரு சில குரல்களை நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் சிறைக்கு அனுப்பும் உச்சநீதிமன்றத்தை கொண்டாடுவதா ?
எதிர்த்து பேசுபவனையெல்லாம் சிறைக்கு அனுப்பும் பாசிச சக்திகளின் செயலை கொண்டாடுவதா, அப்படி சிறைக்கு அனுப்புவதற்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் நீதிமன்றங்களை கொண்டாடுவதா ?
ஒரு மாநிலத்தின் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அம்மாநிலத்தையே சிறையாக மாற்றிய பாசிச அரசின் செயலை கொண்டாடுவதா ? அல்லது அந்நடவடிக்கைக்கு பாராட்டுப்பத்திரம் வசிக்கும் உச்சநீதிமன்றத்தை கொண்டாடுவதா ?
கொரொனாவால் உலகின் குழந்தைகள் எல்லாம் இணையவழி கல்வி கற்கையில், இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு மாநிலத்தின் இணைய இணைப்பையே ஒரு வருடமாக துண்டித்து வைக்கும் பாசிஸ்டுகளை கொண்டாடுவதா ? அல்லது இந்த கொடுமைக்கு நற்சான்று வழங்கும் நீதிமன்றத்தை கொண்டாடுவதா ?
ஒடுக்கப்பட்ட, தலித், சிறுபான்மையின மக்களுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்து, தங்களின் அறிவு, கல்வி அனைத்தையும் அம்மக்களுக்காக செலவிட்ட சுதா பரத்வாஜ், வரவரராவ், போன்ற போராளிகளை சிறையில் அடைத்த காவிகளின் கொடூரத்தை கொண்டாடுவதா ? அச்செயல்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் சங்கி நீதிபதிகளை கொண்டாடுவதா ?
சுதந்திர வேள்விக்காக தங்கள் வாழ்வையே தியாகம் செய்த பல அதிகாரிகள், செல்வந்தர்கள் இருந்த நாட்டில், அதிகாரமும் பணமும் தரும் பதவியை தக்கவைத்துக் கொள்ள அதே அதிகாரிகள், ஆளும் வர்க்கத்தின் காலை நக்கிப் பிழைப்பதை கொண்டாடுவதா ?
பெரும்பான்மை மதத்துக்கு சிறுபான்மையினரால் ஆபத்து என்ற கூற்றை நம்பி வாக்களிக்கும் மக்களை கொண்டாடுவதா ? அல்லது அந்த அச்சத்தை உருவாக்கி அதில் குளிர்காயும் பாசிச சக்திகளின் வெற்றியை கொண்டாடவா ?
உண்மைகள் புதைக்கப்பட்டு பொய்கள் அரியணை ஏறியதை கொண்டாடவா ? அல்லது பொய்களின் ஊற்றுக்கண்கள் தொடர்ந்து வெற்றிபெறுவதை கொண்டாடவா ?
இந்த சுதந்திர தினத்தில் நான் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.
மாறாக நான் வேதனைப்படவும், கண்ணீர் விடவும் ஏராளமானவை இருக்கின்றன. நாம் பாடுபட்டு பெற்ற சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவே உணர்கிறேன். நான் கொண்டாட எதுவுமில்லை.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1857ல் தொடங்கிய சுதந்திரப் போராட்டம் 90 ஆண்டுகள் கழித்து 1947ல்தான் வெற்றி பெற்றது.
பாசிச சக்திகளுக்கு எதிராக 2014ல் தொடங்கிய இரண்டாம் சுதந்திர போராட்டம் வெற்றிபெற மேலும் 100 ஆண்டுகள் ஆகலாம். கூடுதலாகவும் ஆகலாம்.
அந்த வெற்றி என் வாழ்நாளில் கிடைக்காமல் போகலாம். ஆனால், நான் வாழும் வரையில் இதற்காக போராடுவேன். என் உழைப்பையெல்லாம் இப்போராட்டத்தில் செலுத்துவேன். நாளை நம் சந்ததியினர் இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்கள். பாசிச சக்திகள் வீழ்த்தப்படும்வரை இப்போராட்டத்தை தொடர்வார்கள்.
நம்மிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை. அடிமைச் சங்கிலிகளைத் தவிர.
இன்குலாப் ஜிந்தாபாத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக