திங்கள், 17 ஆகஸ்ட், 2020

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் திறப்பு!

 சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் திறப்பு!

மின்னம்பலம் : சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.   கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தில் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதன் பின் ஒவ்வொரு ஊரடங்கு நீட்டிப்பின் போதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மே 7ஆம் தேதி சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள 4,550 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. திறந்த முதல் நாளிலேயே 170 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்தது.

இதைத் தொடர்ந்தும், நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், சனிக்கிழமைகளில் 150 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாகப் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மின்சார மற்றும் கலால் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் உயரதிகாரிகள் மட்டத்தில் கலந்து ஆலோசித்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதில், சென்னையில் கடைகள் திறக்கப் படவில்லை என்றாலும் மற்ற மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய் திருப்திகரமாகவே உள்ளது. டாஸ்மாக் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது கடைகளைத் திறந்தால் பல விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனவே, டாஸ்மாக் திறப்பு குறித்து எந்த முடிவும் முதல்வர் எடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், கடந்த வாரம் சென்னை டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்பவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதன்படி, நாளை முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் வரும் 18 ஆம் தேதி முதல் இயங்கும்.

மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது.

மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

மதுபானக் கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தல் வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை: