புதன், 19 ஆகஸ்ட், 2020

திருச்சியா, மதுரையா? எழும் இரண்டாம் தலைநகர் விவாதம்!

மின்னம்பலம் : தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில், மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் வசதிக்காக இரண்டாவது தலைநகரை நிறுவ வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவருகிறது. திருச்சியை இரண்டாவது தலைநகராக்க திருச்சியா, மதுரையா? எழும் இரண்டாம் தலைநகர் விவாதம்!வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அது பல காரணங்களால் தடைப்பட்டுவிட்டது.

இதனிடையே மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் உதயகுமார் புதுக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதனை வழிமொழிந்த அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.ஜி.ஆர் மதுரையை இரண்டாம் தலைநகராக்க விரும்பினார் எனக் கூறினார். இந்த நிலையில் மையப் பகுதியான திருச்சியில்தான் இரண்டாவது தலைநகரம் அமைய வேண்டுமென திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகர் தமிழகத்தின் இதயம் போல் மத்திய பகுதியாக விளங்குவதாகும். கன்னியாகுமரி முதல் தமிழகத்தின் நான்கு எல்லைகளில் இருந்தும் திருச்சிக்கு சுமார் நான்கு மணி நேரத்தில் சாலை வழியாக வந்து சேர்ந்துவிட முடியும் என சாதக அம்சங்களை முன்வைத்துள்ள திருநாவுக்கரசர்,

“சென்னையின் நெருக்கடியை தவிர்க்கவும், மக்களுக்கு எளிதாக வந்து போகும் விதத்திலும் அரசின் பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்கள் கட்டப்படுபவை திருச்சியில் இனிமேல் கட்டப்பட வேண்டும் என்பதே கோரிக்கை. இங்கு இடவசதி, தண்ணீர் வசதி, சாலை வசதி, விமான வசதி, ரயில் வசதி, கல்வி மற்றும் மருத்துவ வசதி இப்படி துணை நகரத்திற்கு தேவையான அனைத்தும் திருச்சி மற்றும் திருச்சியையொட்டியே தாராளமாக உள்ளன” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றையெல்லாம் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். சிந்தித்தும், அதிகாரிகள், பல்துறை விற்பன்னர்கள் அனைவரையும் கலந்தாலோசித்தும்தான் திருச்சியை இரண்டாம் தலைநகராக்க முடிவு செய்து அறிவித்தார் எனவும், அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் விருப்பத்தை அவரால் நிறைவேற்ற இயலவில்லை எனவும் கூறிய திருநாவுக்கரசர்,

“தமிழ்நாட்டில் உள்ள திருச்சியோ, மதுரையோ, கோவையோ, கடலூரோ, நெல்லையோ, சேலமோ இப்படி நகரங்கள் அனைத்தும் முக்கியமானவையே. மதுரையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. திருச்சியை நான் குறிப்பிடுவது தமிழ்நாட்டின் மையப்பகுதி என்பதாலும், மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டும்தான்” என்றும் தனது நோக்கத்தை வெளிப்படுத்தினார்.

அரசியல் தாண்டி பூகோள அமைப்பின் அடிப்படையில் மக்கள் வசதியை மனதில் கொண்டு தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியினை இரண்டாம் தலைநகருக்கான இடமாக தேர்வு செய்து, பணிகளை முதல்வர் தொடங்கினால் தமிழக மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார் திருநாவுக்கரசர்.

எழில்

கருத்துகள் இல்லை: