மாலைமலர் : : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை- வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் ஸ்டெர்லைட் ஆலை சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது. அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் அரிராகவன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம். 2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது. 39 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காணொலி காட்சி மூலம் பிறப்பித்தனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, தூத்துக்குடியின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சுமார் 1,500 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக